india x page
கிரிக்கெட்

T20 WC | சர்ச்சையை ஏற்படுத்திய சூப்பர் 8.. இந்தியாவுக்குச் சாதகமா? ஐசிசி விளக்கம்!

டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரின் சூப்பர் 8 சுற்றுக்கான ஆட்டங்கள் இன்றுமுதல் தொடங்குகின்றன. இன்றைய போட்டியில் நியூசிலாந்தும் பாகிஸ்தானும் மோதுகின்றன.

Prakash J

டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில், சூப்பர் 8 சுற்று அட்டவணை தற்போது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. சிறப்பாக செயல்பட்ட இரு அணிகள் அரையிறுதிக்கு முன்பே வெளியேறும் அபாயம் ஏற்பட்டுள்ளதால் விமர்சனங்கள் எழுந்து வருகின்றன. மேலும் தொடரின் இணை நடத்துநரான இலங்கை அணி அரையிறுதிக்கு தகுதிபெற்றாலும் சொந்த மண்ணில் விளையாட முடியாத வகையில் அட்டவணை தயாரிக்கப்பட்டுள்ளது.

இந்தியா மற்றும் இலங்கை இணைந்து நடத்தும் 2026 ஐசிசி ஆண்கள் டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர், அடுத்தகட்டத்தை நெருங்கியுள்ளது. லீக் போட்டிகளில் சிறப்பாக ஆடி முதல் இரண்டு இடங்களைப் பிடித்த அணிகள் சூப்பர் 8 சுற்றுக்குத் தகுதி பெற்றுள்ளன. அந்த வகையில் முதலிடம் பிடித்த அணிகளான இந்தியா, தென்னாப்பிரிக்கா, மேற்கிந்திய தீவுகள், ஜிம்பாப்வே ஆகியன குரூப் 1லும், இங்கிலாந்து, நியூசிலாந்து, பாகிஸ்தான், இலங்கை ஆகிய அணிகள் குரூப் 2விலும் இடம்பிடித்துள்ளன. இந்த நிலையில், தொடரின் சூப்பர் 8 சுற்றுக்கான ஆட்டங்கள் இன்றுமுதல் தொடங்குகின்றன. இன்றைய போட்டியில் நியூசிலாந்தும் பாகிஸ்தானும் மோதுகின்றன.

இதற்கிடையே, இருபது ஓவர் உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரின் சூப்பர் 8 சுற்று அட்டவணை தற்போது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. உலகக்கோப்பை தொடர் தொடங்குவதற்கு முன்பே டாப் எட்டு அணிகள் தரவரிசைக்கு ஏற்ப, தரம் பிரிக்கப்பட்டு, சூப்பர் 8 பிரிவுகளில் வகைப்படுத்தப்பட்டன. இதன்படி இந்தியா (X1),ஆஸ்திரேலியா (X2), மேற்கிந்தியத் தீவுகள் (X3), தென்னாப்பிரிக்கா (X4)என வகைப்படுத்தப்பட்டது. இதையடுத்து லீக் சுற்றின் முடிவு எப்படி இருப்பினும் (முதல் இரண்டு இடங்கள்) இந்த 4 அணிகளும் குரூப் 1இல் இடம்பெறும் என முடிவு செய்யப்பட்டது.

இந்த நிலையில் திடீர் திருப்பமாக ஜிம்பாப்வே உள்ளே நுழைந்ததால் ஆஸ்திரேலியா வெளியேறியது. இதையடுத்து, அந்த இடம் ஜிம்பாப்வேக்கு தரப்பட்டது. இந்த நிலையில், அதாவது ஐசிசியின் இந்த முடிவால், அதிக போட்டிகளில் வெற்றி பெற்று லீக் சுற்றில் நல்ல ரன் ரேட் பெற்றிருந்தாலும் இரண்டு அணிகள் அரையிறுதி வாய்ப்பை இழப்பது உறுதியாகிறது. இதன்மூலம், லீக் சுற்றில் சிறப்பாகச் செயல்பட்ட எந்த வலிமையான அணியும், சூப்பர் 8 மூலம் வெளியேறும் அபாயம் ஏற்பட்டுள்ளது. அதேநேரத்தில், குரூப் பிரிவில் ஐசிசியால் பிரிக்கப்பட்டு சூப்பர் 8இல் இடம்பிடித்துள்ள அணிகள், அனைத்தும் இரண்டாம் இடம் பிடித்தவை. அதாவது 4 போட்டிகளில் ஒரு போட்டியில் தோல்வி கண்ட அணிகளாகும். அப்படிப்பட்ட இந்த அணிகளில் 2 அணிகளுக்கு அரையிறுதி வாய்ப்பு உறுதியாகிறது. அதாவது, லீக் சுற்றில் சிறப்பாகச் செயல்பட்டு குரூப் 1இல் இடம்பிடித்திருக்கும் அணிகளைவிட, குரூப் 2இல் தோல்வி கண்டு ரன் ரேட்டில் குறைந்திருந்தும் அணிகளில் இரண்டுக்கு அரையிறுதி வாய்ப்பு உறுதியாகிறது. இன்னும் விரிவாகச் சொல்ல வேண்டுமெனில், சிறப்பாக செயல்பட்ட இரு அணிகள் அரையிறுதிக்கு முன்பே வெளியேறும் அபாயம் ஏற்பட்டுள்ளதால் விமர்சனங்கள் எழுந்து வருகின்றன.

india

மேலும் தொடரின் இணை நடத்துநரான இலங்கை அணி அரையிறுதிக்கு தகுதிபெற்றாலும் சொந்த மண்ணில் விளையாட முடியாத வகையில் அட்டவணை தயாரிக்கப்பட்டுள்ளது. அது, அரையிறுதிக்காக கொல்கத்தா வர வேண்டியுள்ளது. இதுதொடர்பாக பதிலளித்துள்ள ஐசிசி, ‘இந்தியா, இலங்கை என இரு நாடுகளில் போட்டி நடப்பதால், முன்னதாக திட்டமிட வேண்டிய அவசியம் ஏற்பட்டது. இதனால், தரவரிசைப்படி, அணிகளின் பிரிவு, முன்னதாக முடிவு செய்யப்பட்டது’ எனத் தெரிவித்துள்ளது. மறுபுறம், இந்திய அணி குரூப் 1இல் இடம்பெற்றிருந்தாலும், அதற்கு சூப்பர் 8 சுற்று சாதகமாகவே உள்ளது. தென்னாப்பிரிக்கா மட்டுமே அதற்குச் சமமாக உள்ளது. வெஸ்ட் இண்டீஸ் மற்றும் ஜிம்பாப்வே ஆகிய அணிகள் சற்றுப் பலம் குறைந்ததாகவே எண்ணப்படுகிறது. என்றாலும், எந்த அணியையும் நம்ப முடியாது. அதற்குச் சமீபத்திய உதாணம், ஜிம்பாப்வே அணி.