2025 சாம்பியன்ஸ் டிராபி தொடர் பாகிஸ்தானில் நடத்தப்படவிருக்கும் நிலையில், இம்முறையும் பாகிஸ்தானுக்குச் செல்ல இந்தியா மறுப்பு தெரிவித்தது. மேலும், இந்திய அணியின் போட்டிகளை மட்டும் வேறு இடங்களுக்கு மாற்றி வைக்குமாறு கோரிக்கை வைத்தது. ஆனால், இதை ஏற்காத பாகிஸ்தான் இந்தியாவிடம் விளக்கம் கேட்டதுடன், தொடரை நடத்துவதிலிருந்து விலகுவோம் என எச்சரித்திருந்தது. இதையடுத்து, இதற்கு முடிவெடுக்கும் வகையில் ஐசிசி இயக்குநர்கள் தலைமையில் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. அப்போது, பாகிஸ்தான் தரப்பில் சில நிபந்தனைகள் வைக்கப்பட்டன.
இதைத் தொடர்ந்து, சாம்பியன்ஸ் டிராபி தொடரை ஹைபிரிட் மாடலில் நடத்த ஐசிசி ஒப்புதல் வழங்கியது. அதை பாகிஸ்தானும் ஏற்றது. அதன்படி, இந்திய அணி விளையாடும் அத்தனை போட்டிகளும் துபாயில் நடத்த முடிவு எடுக்கப்பட்டது. மற்ற 7 அணிகள் விளையாடும் போட்டிகள் பாகிஸ்தானில் உள்ள 3 மைதானங்களில் நடைபெறவுள்ளது. அதேநேரத்தில், லீக் சுற்றில் இந்தியா வெளியேறினால், அரையிறுதி மற்றும் இறுதிப் போட்டிகள் பாகிஸ்தானின் லாகூர் மற்றும் ராவல்பிண்டியில் நடைபெறும் என தெரிவிக்கப்பட்டது.
இந்த நிலையில், 2024-2027வரை ஐசிசி சார்பில் நடத்தப்படும் இந்தியா – பாகிஸ்தான் போட்டிகள் அனைத்தும் பொதுவான மைதானத்தில் நடைபெறும் என ஐசிசி இன்று உறுதிப்படுத்தியுள்ளது. அதுபோல், ஆலோசனைக் கூட்டத்தில் முடிவெடுத்ததுபோலவே, சாம்பியன் டிராபி கிரிக்கெட்டில் இந்தியா விளையாடும் போட்டிகள் பாகிஸ்தானில் நடைபெறாது எனவும், இந்தியாவில் நடைபெறும் தொடர்களில் பாகிஸ்தான் அணி பங்கேற்காது எனவும் ஐசிசி தெரிவித்துள்ளது.
2025 ஆம் ஆண்டு பாகிஸ்தானில் நடைபெறும் ஆண்களுக்கான சாம்பியன்ஸ் டிராபி, 2025 இந்தியாவில் நடைபெறும் பெண்களுக்கான உலகக்கோப்பை, 2026ஆம் ஆண்டு இந்தியா - இலங்கை ஆகிய நாடுகள் சேர்ந்து நடத்தும் டி20 உலகக்கோப்பை ஆகிய அனைத்திற்கும் இது பொருந்தும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், 2028ஆம் ஆண்டு ஐசிசி மகளிர் டி20 உலகக் கோப்பையை நடத்தும் உரிமையை பாகிஸ்தான் பெற்றிருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஐசிசி தற்போது உறுதியாய் தெரிவித்ததைத் தொடர்ந்து, பாகிஸ்தானில் நடைபெற உள்ள சாம்பியன்ஸ் டிராபி 2025க்கான அட்டவணை விரைவில் இறுதி செய்யப்பட உள்ளது. இதில், பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான், ஆஸ்திரேலியா, வங்கதேசம், இங்கிலாந்து, இந்தியா, நியூசிலாந்து மற்றும் தென்னாப்பிரிக்கா ஆகிய 8 அணிகள் பங்கேற்க உள்ளன.