RCB அணியை வாங்க பல நிறுவனங்கள் போட்டியிடுகின்றன. ஹொம்பாலே பிலிம்ஸ், அணியின் டிஜிட்டல் பார்ட்னராக இருந்து, அணியை வாங்க ஆர்வம் காட்டுகிறது. அணியின் மதிப்பு $2 பில்லியன் என நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இதனால், RCB ரசிகர்கள் மகிழ்ச்சியில் ஆழ்ந்துள்ளனர். டியாஜியோ நிறுவனத்துடன் பேச்சுவார்த்தைகள் நடைபெறுகின்றன.
18வது ஐபிஎல் கிரிக்கெட் தொடரில், பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் அணி, பஞ்சாப்பை வீழ்த்தி முதல்முறையாக சாம்பியன் பட்டம் வென்றது. இதன்மூலம் 17 ஆண்டுகால கனவு நனவுக்கு வந்தது. இதையடுத்து, அவ்வணி வீரர்களுக்குக் கடந்த ஜூன் 4 மாலை 6 மணிக்கு சின்னசாமி மைதானத்தில் பாராட்டு விழாவுக்கு ஏற்பாடு செய்யப்பட்டது. அப்போது சின்னசாமி மைதானத்தில் அதிகளவில் ரசிகர்கள் கூடியதால், கூட்ட நெரிசல் ஏற்பட்டு, அதில் 11 பேர் உயிரிழந்தனர். இந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது. இதன் காரணமாக அணி நிர்வாகம் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது. மறுபுறம், கர்நாடக உயர் நீதிமன்றமும் தானாக முன்வந்து இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து, விசாரணையை துவக்கியது. இதற்கிடையே, இந்த சம்பவத்திற்குப் பிறகு, சின்னசாமி மைதானம் பெரிய நிகழ்ச்சிகளுக்கு பாதுகாப்பற்றது என அறிவிக்கப்பட்டது. இதனையடுத்து சின்னசாமி மைதானம் மூடப்பட்டது. இந்த நிலையில், கூட்ட நெரிசல் சம்பவத்தையடுத்து, பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் அணி விற்கப்பட இருப்பதாகத் தகவல் வெளியானது.
இங்கிலாந்தைச் சேர்ந்த முன்னணி மதுபான நிறுவனமான டியாஜியோ, யுனைடெட் ஸ்பிரிட்ஸ் லிமிடெட் (USL) மூலம் ஆர்சிபி அணியின் ஐபிஎல் (ஆண்கள்) மற்றும் டபிள்யூபிஎல் (பெண்கள்) அணிகளை நிர்வகித்து வருகிறது. அது, தற்போது விற்பனை செய்யப்பட இருப்பதாக நிறுவனத்தின் சார்பில் அதிகாரப்பூர்வமாக உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
2026 ஐபிஎல் தொடங்குவதற்கு முன்னதாகவே இது விற்கப்பட இருக்கும் நிலையில், அணியின் மதிப்பு சுமார் $2பில்லியனாக |(ரூ.17,762 கோடி) நிர்ணயம் செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி இருக்கும் நிலையில், டியாஜியோ நிர்வாகத்துடன் கோவிஷீல்டு தடுப்பூசி தயாரித்த சீரம் இன்ஸ்டிடியூட் ஆஃப் இந்தியா நிறுவனம், அதானி குழுமம், ஜேஎஸ்டபிள்யூ குழுமத்தின் பார்த் ஜிண்டால், டெல்லியைச் சேர்ந்த பலதுறை நலன்களைக் கொண்ட கோடீஸ்வரர் ஒருவர் எனப் பலரும் ஆர்சிபி அணியை வாங்க ஆர்வமாக இருப்பதாக செய்திகள் தெரிவிக்கின்றன. மேலே குறிப்பிடப்பட்ட நான்கு நிறுவனங்களைத் தவிர, அமெரிக்காவை தளமாகக் கொண்ட இரண்டு தனியார் பங்கு நிறுவனங்களும் பரிசீலித்து வருகின்றன.
இந்த நிலையில், ஆர்சிபி அணியை வாங்க ஆர்வம் காட்டும் போட்டியில் தற்போது ஹொம்பாலே பிலிம்ஸ் நிறுவனமும் இணைந்துள்ளது. ஹொம்பாலே பிலிம்ஸ் கே.ஜி.எஃப்.', 'காந்தாரா' மற்றும் 'சலார்' போன்ற பிரம்மாண்ட வெற்றிப் படங்களைத் தயாரித்த நிறுவனமாகும். இந்த நிறுவனம், ஆர்சிபி அணியை விரும்புவதற்குப் பின்னாலும் ஒரு காரணம் உள்ளது.
கடந்த ஏப்ரல் 2023 முதல், ஆர்சிபி அணியின் அதிகாரப்பூர்வ டிஜிட்டல் பார்ட்னராக ஹொம்பாலே பிலிம்ஸ் செயல்பட்டு வருகிறது. இந்த காலகட்டத்தில், அணிக்கு பல்வேறு விளம்பரப் படங்கள், சினிமா பாணியிலான மேட்ச் டீசர்கள் மற்றும் ரசிகர்களைக் கவரும் வகையிலான பல பிரசாரங்களை ஹொம்பாலே வெற்றிகரமாக உருவாக்கியுள்ளது. இந்த வணிக உறவின் அடுத்தகட்டமாகதான், அணியை வாங்குவதில் ஆர்வம் காட்டி வருவதாகக் கூறப்படுகிறது. இதுதொடர்பாக டியாஜியோ நிறுவனத்துடன் முதற்கட்டப் பேச்சுவார்த்தைகள் நடைபெற்றதாகக் கூறப்படுகிறது. இருப்பினும், இரு தரப்பிலிருந்தும் இதுவரை அதிகாரப்பூர்வ அறிவிப்பு எதுவும் வெளியிடப்படவில்லை. அதேநேரத்தில், ஆர்சிபி அணியை வாங்குவதில் ஹொம்பாலே பிலிம்ஸ் ஈடுபட்டிருப்பது அவ்வணி ரசிகர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
மறுபுறம், ஐபிஎல் 2026க்கான மெகா ஏலத்திற்கு முன்னதாக, ரஜத் படிதார், விராட் கோலி, தேவ்தத் படிக்கல், பில் சால்ட், ஜிதேஷ் சர்மா, க்ருணால் பாண்டியா, ஸ்வப்னில் சிங், டிம் டேவிட், ரொமாரியோ ஷெப்பர்ட், ஜேக்கப் பெத்தேல், ஜோஷ் ஹேசில்வுட், யாஷ் தயாள், புவனேஷ்வர் குமார், நுவான் துஷாரா, ராசிக் சலாம், அபிநந்தன் சிங் மற்றும் சுயாஷ் சர்மா ஆகியோரை தக்க வைத்துள்ளது.