ஐசிசி மினி உலகக்கோப்பை என கூறப்படும் சாம்பியன்ஸ் டிரோபி ஒருநாள் தொடரானது பிப்ரவரி 19 முதல் தொடங்கி பரபரப்பாக நடந்துவருகிறது.
முதலிரண்டு போட்டிகள் முடிவடைந்த நிலையில், முதல் போட்டியில் பாகிஸ்தானை வீழ்த்தி நியூசிலாந்தும், இரண்டாவது போட்டியில் வங்கதேசத்தை வீழ்த்தி இந்தியாவும் வெற்றியை பதிவுசெய்துள்ளன.
இந்த நிலையில், கராச்சியில் நடக்கும் மூன்றாவது போட்டியில் ஹஷ்மத்துல்லா ஷாஹிடி தலைமையிலான ஆப்கானிஸ்தான் அணி, டெம்பா பவுமா தலைமையிலான தென்னாப்பிரிக்காவை எதிர்த்துப் போட்டியிடுகிறது.
தென்னாப்பிரிக்காவை பொறுத்தவரையில் 2025 சாம்பியன்ஸ் டிராபியில் காயம் காரணமாக அன்ரிச் நோர்கியா மற்றும் ஜெரால்ட் கோட்ஸீ போன்ற நட்சத்திர வீரர்களை ஏற்கனவே தவறவிட்டுள்ளது.
இந்த சூழலில் அதிரடி வீரர் மற்றும் மிடில் ஆர்டரில் சிறப்பாக செயல்படக்கூடிய ஹென்ரிச் கிளாசெனுக்கு காயம் ஏற்பட்டுள்ளது தென்னாப்பிரிக்காவிற்கு பெரிய பின்னடைவாக மாறியுள்ளது.
ஆப்கானிஸ்தானுக்கு எதிரான முதல் போட்டியின் போது கடைசிநேரத்தில் காயம் காரணமாக ஹென்ரிச் கிளாசென் விளையாடவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது. அவருக்கு இடது முழங்கையில் காயம் ஏற்பட்டுள்ளதால், காயம் அதிகரிக்க கூடாது என்பதற்காக முன்னெச்சரிக்கையாக அவருக்கு ஓய்வு வழங்கப்பட்டதாக கூறப்படுகிறது.
மேலும் அவர் அடுத்த போட்டியில் விளையாடுவாரா என்ற எந்த அறிவிப்பும் வெளியிடப்படவில்லை. இந்த சூழலில் ஹென்ரிச் கிளாசென் போன்ற ஒருவீரர் அடுத்தபோட்டியில் கம்பேக் தராவிட்டால், தென்னாப்பிரிக்காவிற்கு மிகப்பெரிய பாதகமாக அமைந்துவிடும். ஏற்கனவே மற்றொரு வீரரான லுங்கி இங்கிடி காயத்திலிருந்து மீண்டுவந்திருப்பது குறிப்பிடத்தக்கது.