AFG vs SA|106, 134 ரன்னுக்கு சுருண்ட தென்னாப்ரிக்கா.. நேருக்கு நேர் மோதல் விவரம்! வெற்றி யாருக்கு?
ஐசிசி மினி உலகக்கோப்பை என கூறப்படும் சாம்பியன்ஸ் டிரோபி ஒருநாள் தொடரானது பிப்ரவரி 19 முதல் தொடங்கி பரபரப்பாக நடந்துவருகிறது.
முதலிரண்டு போட்டிகள் முடிவடைந்த நிலையில், முதல் போட்டியில் பாகிஸ்தானை வீழ்த்தி நியூசிலாந்தும், இரண்டாவது போட்டியில் வங்கதேசத்தை வீழ்த்தி இந்தியாவும் வெற்றியை பதிவுசெய்துள்ளன.
இந்த நிலையில் கராச்சியில் நடக்கும் மூன்றாவது போட்டியில் ஆப்கானிஸ்தான் மற்றும் தென்னாப்பிரிக்கா அணிகள் மோதுகின்றன.
நேருக்கு நேர் மோதல் விவரம்..
ஒருநாள் போட்டிகளை பொறுத்தவரையில் தென்னாப்பிரிக்கா மற்றும் ஆப்கானிஸ்தான் அணிகள் 5 போட்டிகளில் வெற்றிபெற்றுள்ளன. அதில் 3 போட்டியில் தென்னாப்பிரிக்காவும், 2 போட்டியில் ஆப்கானிஸ்தானும் வென்றுள்ளன.
கடந்தாண்டு நடைபெற்ற இறுதி மோதலில் 3 போட்டிகள் கொண்ட தொடரில் 2-1 தொடரை வென்றிருந்தது ஆப்கானிஸ்தான் அணி. அந்த இரண்டு போட்டியிலும் தென்னாப்பிரிக்கா 106 மற்றும் 134 ரன்களுக்கு சுருண்டு படுமோசமான தோல்வியை சந்தித்திருந்தது.
ரசீத் கான் அபாரமான பந்துவீச்சை கொண்டிருந்தார், தொடக்க வீரர் குர்பாஸ் அதிரடியான சதத்தை அடித்திருந்தார்.
தென்னாப்பிரிக்கா அணியை பொறுத்தவரையில் வான் டர் டஸ்ஸன் சிறப்பான ஆட்டத்தையும், லுங்கி இங்கிடி சிறந்த பந்துவீச்சையும் கொண்டிருந்தனர்.
ஸ்பின்னுக்கு சாதகமான ஆடுகளம் என்றால் எந்த அணியை வேண்டுமானாலும் வீழ்த்தும் வல்லமை கொண்டிருக்கும் ஆப்கானிஸ்தான் அணி, கராச்சி மைதானத்தில் தென்னாப்பிரிக்காவை வீழ்த்தும் இடத்தில் ஒரு அடி முன்னோக்கி இருக்கும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.