harsh dubey pti
கிரிக்கெட்

’லைன் & லெந்தில் புலி..’ ஒரே இன்னிங்ஸில் 9 விக்கெட்டுகள்! ஹர்ஷ் துபே மிரட்டல்!

மத்திய பிரதேச அணிக்கு எதிரான ரஞ்சிக்கோப்பை போட்டியில் விதர்பா அணி ஸ்பின்னர் ஹர்ஷ் துபே ஒரே இன்னிங்ஸில் 9 விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தினார்.

Rishan Vengai

ரஞ்சிக்கோப்பை தொடரில் மத்திய பிரதேச அணியை சுழற்பந்துவீச்சில் சிதறடித்த ஹர்ஷ் துபே, ஒரே இன்னிங்ஸில் 9 விக்கெட்டுகளை வீழ்த்தி மிரட்டல் காட்டினார். 209 ரன்னில் சுருண்ட மத்திய பிரதேச அணியில் அதர்வ மஹாஜன் மட்டும் 85 ரன்னுடன் தனியாளாக போராடினார்.

2026-27ஆம் ஆண்டுக்கான ரஞ்சிக்கோப்பை தொடர் அக்டோபர் 11ஆம் தேதி முதல் தொடங்கி நடைபெற்றுவருகிறது. இன்று தொடங்கிய விறுவிறுப்பான போட்டியில் மத்திய பிரதேசம் மற்றும் விதர்பா அணிகள் பலப்பரீட்சை நடத்திவருகின்றன.

முதலில் பேட்டிங் செய்த மத்திய பிரதேச அணி 5 ரன்னுக்கே முதல் விக்கெட்டை இழந்து தடுமாறியது. அதற்குபிறகு கையில் பந்தை எடுத்த இடது கை சுழற்பந்துவீச்சாளரான ஹர்ஷ் துபே, 32-ல் 2வது விக்கெட், 43/3, 47/4, 64/5 விக்கெட்டுகள் என மத்திய பிரதேச அணியை நிலைகுலைய வைத்தார். இன்ஃபார்மில் இருந்துவரும் மத்திய பிரதேச கேப்டன் ரஜத் பட்டிதாரை வெறும் 2 ரன்னுக்கு வெளியேற்றி அசத்தினார்.

தொடர்ந்து விக்கெட் வேட்டை நடத்திய ஹர்ஷ் துபே, ஒரே இன்னிங்ஸில் 53 ரன்களை விட்டுக்கொடுத்து 9 விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தினார். மத்திய பிரதேச அணி 209 ரன்னுக்கு சுருண்டாலும், தனியாளாக போராடிய அதர்வ மஹாஜன் 85 ரன்கள் அடித்து அசத்தினார்.

ஸ்பின் ஆல்ரவுண்டரான ஹர்ஷ் துபே கடந்த 2024-25 ரஞ்சிக்கோப்பை தொடரில் 69 விக்கெட்டுகள் வீழ்த்தியதோடு, 476 ரன்களையும் அடித்திருந்தனர். ஹர்ஷ் துபே வீழ்த்திய இந்த 69 விக்கெட்டுகள் ரஞ்சி கோப்பையின் ஒரே சீசனில் எடுக்கப்பட்ட அதிகபட்ச விக்கெட்டுகளாகும்.