Harmanpreet Kaur
Harmanpreet Kaur Twitter
கிரிக்கெட்

ஆசியன் கேம்ஸின் காலிறுதி, அரையிறுதி போட்டிகளில் விளையாட ஹர்மன்ப்ரீத்-க்கு தடை! ஐசிசி நடவடிக்கை!

Viyan

இந்திய பெண்கள் கிரிக்கெட் அணி வங்கதேசத்துக்கு சுற்றுப் பயணம் சென்று 3 சர்வதேச டி20 போட்டிகள் மற்றும் 3 ஒருநாள் போட்டிகளில் விளையாடியது. முதலில் நடந்த சர்வதேச டி20 தொடரை 2-1 என வென்றது இந்தியா. ஒருநாள் தொடரின் முதல் போட்டியில் வங்கதேசத்திடம் தோற்ற இந்திய அணி, இரண்டாவது போட்டியில் வெற்றி பெற்று தொடரை சமன் செய்தது. தொடரை நிர்ணயிக்கும் மூன்றாவது போட்டி 22ம் தேதி நடந்தது. முதலில் பேட்டிங் செய்த வங்கதேசம் நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்களில் 4 விக்கெட்டுகளை இழந்து 225 ரன்கள் எடுத்தது. அந்த அணியின் தொடக்க வீராங்கனை ஃபர்கான ஹக் 107 ரன்கள் அடித்து அசத்தினார்.

smriti, harmanpreet

அடுத்த விளையாடிய இந்திய அணி தொடக்கத்தில் சற்று தடுமாறியது. இருந்தாலும் துணைக் கேப்டன் ஸ்மிரிதி மந்தனா, ஹர்லீன் தியோல் இருவரும் ஒரு நல்ல பார்ட்னர்ஷிப்பை உருவாக்கினர். மூன்றாவது விக்கெட்டுக்கு இவர்கள் இருவரும் இணைந்து 107 ரன்கள் சேர்த்தனர். ஆனால் அவர்கள் இருவரும் அவுட் ஆனதும் இந்திய அணி தடுமாறத் தொடங்கியது. ஜெமீமா ராட்ரீக்ஸ் தவிர்த்து வேறு யாரும் நிலைத்து நிற்கவில்லை. மிகவும் பரபரப்பாகச் சென்ற போட்டியில் இந்திய அணியும் 225 ரன்கள் எடுத்து ஆல் அவுட் ஆனது. அதனால் இந்த ஆட்டம் டையில் முடிந்தது. தொடர் 1-1 என சமன் ஆனது.

ஆக்ரோசமாக செயல்பட்ட ஹர்மன்ப்ரீத்!

இந்தப் போட்டியில் இந்திய கேப்டன் ஹர்மன்ப்ரீத் கவுர் 14 ரன்கள் எடுத்திருந்தபோது நஹிதா அக்தர் பந்துவீச்சில் ஆட்டமிழந்தார். ஸ்லிப்பில் நின்றிருந்த ஃபஹிமா கதூன் கேட்சுக்காக அப்பீல் செய்ய நடுவர் அவுட் கொடுத்தார். அதனால் மிகவும் கோவமடைந்த இந்திய கேப்டன் ஹர்மன், ஸ்டம்புகளை பேட்டால் அடித்துவிட்டு வெளியேறினார். அதுமட்டுமல்லாமல் பெவிலியனை அடைந்தபோது ரசிகர்களிடமும் தன் கோவத்தை வெளிப்படுத்தினார்.

Harmanpreet Fined

இந்தத் தொடரில் நடுவர்களின் செயல்பாடு மிகவும் சுமாராக இருந்ததால் கடைசி கட்டத்தில் விரக்தியின் உச்சத்துக்கு சென்றுவிட்டார் ஹர்மன். ஆனால் அது அதோடு முடியவில்லை. போட்டிக்குப் பிறகு பேட்டியளித்த அவர், "இந்தப் போட்டியின் மூலம் பல விஷயங்கள் கற்றுக்கொண்டோம். கிரிக்கெட் தவிர்த்து பல விஷயங்கள்! இங்கு நாங்கள் பார்த்திருக்கும் அம்பயரிங்கின் தரம் அதிர்ச்சியளிப்பதாக இருக்கிறது. அடுத்த முறை நாங்கள் வங்கதேசத்துக்கு சுற்றுப் பயணம் மேற்கொள்ளும்போது இப்படிப்பட்ட நடுவர்களுக்கும் சேர்த்து தயாராகவேண்டும்" என்று கூறினார். ஆனால் அதோடும் டிராமாக்கள் முடியவில்லை.

இரு அணி கேப்டன்களும் ஒன்றாக கோப்பை வாங்கியபோது, 'ஏன் நடுவர்களையும் சேர்த்து அழைக்கக்கூடாது' என்பதுபோல் வங்கதேச அணியைப் பார்த்துக் கூறியிருக்கிறார் அவர். இந்த வீடியோக்கள் சமூக வலைதளங்களில் வெளியாகி கடும் விமர்சனங்களை சந்தித்தன. விமர்சகர்கள், ரசிகர்கள், முன்னாள் வீரர்கள் உள்பட பலரும் ஹர்மன்ப்ரீத்தின் செயல்பாட்டைக் கண்டித்துள்ளனர்.

இந்திய முன்னாள் வீரர் மதன் லால் தன் ட்விட்டர் பக்கத்தில் "வங்கதேச பெண்கள் அணிக்கு எதிராக ஹர்மன்ப்ரீத் கவுர் நடந்து கொண்ட விதம் மிகவும் மோசமானது. விளையாட்டை விட அவர் ஒன்றும் பெரிய ஆள் இல்லை. இந்திய கிரிக்கெட்டுக்கு அவர் அவப்பெயர் ஏற்படுத்தியிருக்கிறார். அவர்மீது இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் உரிய நடவடிக்கை எடுக்கவேண்டும்" என்று கூறியிருந்தார்.

2 போட்டிகளில் விளையாட தடை!

இந்நிலையில் இந்த விஷயத்தை விசாரித்த ஐசிசி ஹர்மன்ப்ரீத் கவுருக்கு 2 போட்டிகளில் விளையாட தடை விதித்துள்ளது. ஸ்டம்புகளைத் தாக்கியதற்கு (லெவல் 2) போட்டி ஊதியத்திலிருந்து அவருக்கு 50 சதவிகிதம் அபராதம் விதிக்கப்பட்டது. பொதுவெளியில் நடுவர்கள் பற்றி அவதூறாகப் பேசியதற்காக மேலும் 25 சதவிகிதம் அபராதம் விதிக்கப்பட்டது.

இந்த தடையின் மூலம் செப்டம்பர் மாதம் நடக்கவிருக்கும் ஆசியன் கேம்ஸின் முதலிரு போட்டிகளில் அவரால் பங்கேற்க முடியாத நிலை ஏற்பட்டிருக்கிறது. 14 அணிகள் பங்கேற்கும் இந்தத் தொடரில் இந்திய அணி நேரடியாக காலிறுதிக்குத் தகுதி பெற்றுள்ளது. அதனால் அவரால் காலிறுதி, அரையிறுதி இரண்டு போட்டிகளிலுமே விளையாட முடியாது. அவருக்குப் பதில் துணைக் கேப்டன் ஸ்மிரிதி மந்தனா இந்திய அணியின் கேப்டனாக செயல்படுவார்.