“அம்பயர்களை கூப்பிடுங்க அவங்களும் உங்க அணிதானே” - களத்திற்கு வெளியேயும் முற்றிய மோதல்! முழு விவரம்!

இந்திய கேப்டன் ஹர்மன்ப்ரீத் சிறந்த அணுகுமுறையை வெளிப்படுத்தியிருக்க வேண்டும் என விமர்சித்துள்ளார் வங்கதேச மகளிர் அணியின் கேப்டன் நிகர் சுல்தானா.
Harmanpreet Kaur
Harmanpreet KaurTwitter

இந்தியா மற்றும் வங்கதேச மகளிர் அணிகளுக்கு இடையேயான 3வது ஒருநாள் போட்டியில் அம்பயர் முடிவுகளுக்கு எதிரான இந்திய கேப்டன் ஹர்மன்ப்ரீத் கவுரின் எதிர்வினையானது விவாதத்திற்குரிய ஒன்றாக மாறியுள்ளது. போட்டியின் இடையில் ஏதேனும் சர்ச்சைக்குரிய விசயங்கள் நடந்தால், பின்னர் போட்டிக்கு பிறகு அனைத்தும் சரியாகிவிட்டு இரண்டு அணி வீரர்களும் நண்பர்களாக கைகுலுக்கிவிட்டு சென்றுவிடுவார்கள்.

ஆனால், இந்தியா மற்றும் வங்கதேச அணிகளுக்கு இடையேயான போட்டியில் நடந்த சர்ச்சையானது போட்டி, போஸ்ட் மேட்ச் பிரண்டேசன், பைனல் போட்டோசூட், செய்தியாளர் சந்திப்பு என எல்லா தருணங்களிலும் நீண்டுகொண்டே சென்றது. முடிவில் இந்திய கேப்டனுக்கு அபராதம் விதிக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

போட்டிக்கு பிறகான செய்தியாளர் சந்திப்பில் “இந்தியாவிற்காக நீங்கள் விளையாடும் போது எதாவது தவறாக சென்றால், அந்த தருணத்தில் உண்டாகும் கோபத்தில் சில விஷயங்கள் வெளிப்படும். இவை அந்த நேரத்தில் எமோஷனில் வெளிப்படும் விசயம் மட்டுமே, மற்றபடி வேறெதுவும் இல்லை” என்று தன்னுடைய கேப்டனை ஸ்மிரிதி மந்தனா விட்டுக்கொடுக்காமல் பேசினாலும், வங்கதேச கேப்டன் நிகர் சுல்தானா “கவுர் அந்த நேரத்தில் மாண்புடன் நடந்திருக்க வேண்டும்” என்று கடுமையாக விமர்சித்து பேசியுள்ளார்.

உங்கள் அம்பயர்களை கூப்பிடுங்கள் அவர்களும் உங்கள் அணி தானே! போட்டோ சூட்டில் கத்திய ஹர்மன்ப்ரீத்!

இந்திய அணி பேட்டிங் செய்யும் போது சிறப்பாக விளையாடிய ஸ்மிரிதி மந்தனா 59 ரன்களில் வெளியேறிய பிறகு, முக்கியமான இடத்தில் இந்திய கேப்டன் ஹர்மன்ப்ரீத் பேட்டிங் செய்ய களத்திற்கு வந்தார். 2 பவுண்டரிகளுடன் 14 ரன்களில் பேட்டிங் செய்த ஹர்மன்ப்ரீத், 34வது ஓவரில் நகிதா அக்தர் பந்துவீச்சில் ஸ்வீப் செய்ய முயற்சித்த போது LBW விக்கெட் கொடுக்கப்பட்டார். ஆனால் பந்து அவரது கையிலோ அல்லது பேட்டிலோ பட்டு சென்றதாக கூறிய ஹர்மன்ப்ரீத், கோவத்தில் ஸ்டம்பை பேட்டால் அடித்து தகர்த்தார். சிறிது தூரம் சென்று கூட்டத்திற்கு நேராக கைகளை உயர்த்திவிட்டு சென்றார். பின்னர் அம்பயரின் தரப்பில் இருந்து அது கேட்ச்சிற்கு தான் அவுட் கொடுக்கப்பட்டது என்று கூறப்பட்டது.

ஆனால், இந்த சம்பவத்திற்கு முன்னாலும் விக்கெட் கீப்பர் யஸ்திகா பாட்டியாவிற்கும் LBW விக்கெட் கொடுக்கப்பட்டது. அதை ஏற்றுக்கொள்ளாத அவர் சிறிது நேரம் களத்தை விட்டு செல்லாமலே நின்றிருந்தார். அதற்குபிறகு அமன்ஜோத் கவுருக்கு எதிராக கொடுக்கப்பட்ட LBW விக்கெட்டுக்கும் பேட்டர் மறுப்பு தெரிவித்தார். மாடர்ன் டே கிரிக்கெட்டில் டிஆர்எஸ் சிஸ்டம் பின்பற்றப்படாதது வீரர்கள் மட்டுமில்லாது ரசிகர்களாலும் விமர்சிக்கப்பட்டது.

இறுதியில் இந்திய அணி வெற்றிபெற வேண்டிய போட்டியை சமன் செய்ததன் மூலம் கோட்டைவிட்டது. அதற்கு பிறகு போஸ்ட் மேட்ச் பிரசண்டேசனில் பேசிய இந்திய கேப்டன் ஹர்மன்ப்ரீத், “இந்த போட்டியிலிருந்து நிறைய கற்றுக்கொண்டோம். முக்கியமாக அம்பயரிங் செய்த விதம் எங்களை அதிகமாக ஆச்சரியப்படுத்தியது. அடுத்தமுறை வங்கதேசம் வரும்போது இது போன்ற அம்பயரிங்களுக்கு எதிராக என்ன செய்யவேண்டும் என்று தயாராகிவிட்டு வருவோம். மோசமான அம்பயரிங்கும், முடிவுகளும் எங்களை ஏமாற்றம் அடைய வைத்தது” என்று ஆவேசமாக குற்றஞ்சாட்டினார்.

அதற்குபிறகு இரண்டு அணி வீரர்களுடனும் தொடரின் இறுதிப் புகைப்படம் எடுக்கப்பட்டபோது, ​​ஹர்மன்ப்ரீத் அம்பயர்கள் வங்கதேச அணியின் ஒரு அங்கமாக இருப்பதாகக் கூறி, "நடுவர்களையும் அழைத்து வாருங்கள்" என்று கத்தியுள்ளார். ஹர்மன்ப்ரீத்தின் மோசமான நடத்தைக்கு பிறகு வங்கதேச கேப்டன் பிசிபி அதிகாரிகளிடம் பேசிவிட்டு, போட்டோ சூட்டிலிருந்து தனது வீரர்களை டிரஸ்ஸிங் அறைக்கு அழைத்துச் சென்றார்.

கிரிக்கெட் என்பது ஒழுக்கம் மற்றும் மரியாதைக்குரிய விளையாட்டு! விமர்சித்த வங்கதேச கேப்டன்!

அனைத்தும் முடிந்த பிறகு நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் ஹர்மன்ப்ரீத் கத்தியது குறித்து பேசிய வங்கதேச கேப்டன் நிகர் சுல்தானா, “இங்கு நடப்பதெல்லாம் முழுக்க முழுக்க அவருடைய சொந்த பிரச்னை. பிரச்னை அவரிடம் தான் உள்ளது, இதில் எங்களுக்கு எந்த தொடர்பும் இல்லை. ஆனால் ஒரு வீரராக நீங்கள் சிறந்த நடத்தையை வெளிக்காட்டியிருக்க வேண்டும். அங்கு என்ன நடந்தது என்று என்னால் கூறமுடியாது, ஆனால் அவ்வளவு நடந்ததிற்கு பிறகு புகைப்படத்திற்காக எங்கள் வீரர்கள் அங்கு நிற்பதில் எனக்கு விருப்பமில்லை. அதனால் தான் நாங்கள் திரும்பிச் சென்றுவிட்டோம். ஒன்று மட்டும் கூறுகிறேன் கிரிக்கெட் என்பது ஒழுக்கம் மற்றும் மரியாதைக்குரிய விளையாட்டு” என்று நிகர் கூறினார்.

Nigar Sultana
Nigar Sultana

மேலும், “அவர் அவுட்டாகவில்லை என்றால் யாரும் அவுட் கொடுக்கப்போவதில்லை. எங்களிடம் இருக்கும் அம்பயர்கள் ஏற்கனவே ஆண்கள் சர்வதேச கிரிக்கெட்டில் இருந்திருக்கிறார்கள். அவர்கள் அனுபவமுள்ள நல்ல நடுவர்கள் தான். நீங்கள் கேட்ச் அல்லது ரன் அவுட் குறித்து என்ன நினைத்தாலும், அம்பயரின் முடிவே இறுதி முடிவு” என்று கூறினார்.

இரு நாடுகள் பங்கேற்கும் தொடரில் பொது அம்பயர்களை பயன்படுத்த வேண்டும்!

பின்னர் செய்தியாளர் சந்திப்பில் பங்குபெற்ற இந்தியாவின் நட்சத்திர வீரர் மற்றும் துணை கேப்டனான ஸ்மிரிதி மந்தனாவிடம், ஹர்மன்ப்ரீத் நடந்துகொண்ட விதத்தை பற்றி கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு பதில் பேசிய ஸ்மிரிதி, “நீங்கள் இந்தியாவிற்காக விளையாடும் போது வெற்றிபெற அதிக உணர்வோடு இருக்கிறீர்கள். அப்போது எதாவது சரியாக செல்லவில்லை என்றால் அதன் சூட்டில் வெளிப்படுவது தான், மற்றபடி வேறெதுவும் இல்லை” என்று மந்தனா கூறினார்.

மேலும், "இதுபோன்ற ஒரு தொடரில் டிஆர்எஸ் இல்லாதபோது, ​​முடிவுகளை வழங்குவதற்கு முன் நடுவர்கள் கொஞ்சம் சிறந்த நிலையோடு இருக்க வேண்டும் என்று நாங்கள் எதிர்பார்க்கிறோம். ஏனென்றால் எங்கள் பேட்டர்கள் பேட்டிங் செய்தபோது பந்து பேடில் பட்டதோ இல்லையோ, அவுட் கேட்ட மறுநொடியே கைகள் உயர்த்தப்பட்டது. சிறிது நேரம் கூட அம்பயர்கள் யோசிக்கவில்லை” என்று மந்தனாவும் அம்பயர் முடிவுகளை விமர்சித்தார்.

இறுதியாக பேசிய அவர், “அடுத்தமுறை நாங்கள் இங்கு வரும்போது இரண்டு தரப்பிலும் இல்லாமல் நடுநிலை நடுவர் முறையை உருவாக்கலாம். அப்படி பயன்படுத்தினால், நாங்கள் இங்கு உட்கார்ந்து இந்த விவாதங்களை நடத்த வேண்டியதில்லை. மாறாக கிரிக்கெட் சார்ந்த கேள்விகளில் அதிக கவனம் செலுத்தலாம். ஐ.சி.சி, பி.சி.பி மற்றும் பி.சி.சி.ஐ மூன்றுபேரும் இதுகுறித்து அதிகம் விவாதிப்பார்கள் என்று நான் நம்புகிறேன்” என்று ஸ்மிரிதி கூறினார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com