ஹர்மன்ப்ரீத், ரோகித் சர்மா இருவருக்கும் பத்மஸ்ரீ விருது அறிவிப்பு web
கிரிக்கெட்

ரோகித் சர்மா, ஹர்மன்ப்ரீத் 2 பேருக்கும் பத்மஸ்ரீ விருது.. மொத்தம் 131 பத்ம விருதுகள் அறிவிப்பு!

இந்தியாவிற்கு உலகக்கோப்பை வென்றுகொடுத்த கேப்டன்களான ரோகித் சர்மா மற்றும் ஹர்மன்ப்ரீத் கவுர் இருவரும் பத்மஸ்ரீ விருதை அறிவித்துள்ளது இந்திய அரசு.

Rishan Vengai

இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன்கள் ரோகித் சர்மா மற்றும் ஹர்மன்ப்ரீத் கவுருக்கு 2026 குடியரசு தினத்தை முன்னிட்டு பத்மஸ்ரீ விருது அறிவிக்கப்பட்டுள்ளது. மொத்தம் 131 பேருக்கு பத்ம விருதுகள் வழங்கப்பட்டுள்ளன, இதில் 5 பேருக்கு பத்மவிபூஷண், 13 பேருக்கு பத்மபூஷண் மற்றும் 113 பேருக்கு பத்மஸ்ரீ விருதுகள் வழங்கப்பட்டுள்ளன.

இந்தியாவின் உயரிய விருதுகளில் ஒன்றாகக் கருதப்படும் பத்ம விருதுகள், ஆண்டுதோறும் குடியரசுத் தினத்தையொட்டி மத்திய அரசால் அறிவிக்கப்படும். அவை, பத்ம விபூஷண், பத்ம பூஷண் மற்றும் பத்மஸ்ரீ ஆகிய மூன்று பிரிவுகளில் வழங்கப்படுகின்றன.

பத்ம விருதுகள்

கலை, சமூகப் பணி, பொது விவகாரங்கள், அறிவியல் மற்றும் பொறியியல், வர்த்தகம் மற்றும் தொழில், மருத்துவம், இலக்கியம் மற்றும் கல்வி, விளையாட்டு, குடிமைப்பணி போன்ற பல்வேறு பிரிவுகள் மற்றும் துறைகளில் சிறப்பாக பணியாற்றுவோருக்கு பத்ம விருதுகள் வழங்கப்படுகின்றன.

அந்த வகையில் 2026 குடியரசு தினத்தை முன்னிட்டு மொத்தம் 131 பேருக்கு பத்ம விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. அதில் 5 பேருக்கு பத்மவிபூஷனும், 13 பேருக்கு பத்மபூஷனும், 113 பேருக்கு பத்மஸ்ரீ விருதுகளும் அறிவிக்கப்பட்டுள்ளன.

இந்தபிரிவில் இந்திய கிரிக்கெட்டிற்கு ஆற்றிய சேவைக்காக இந்திய கேப்டன்கள் ரோகித் சர்மா மற்றும் ஹர்மன்ப்ரீத் கவுருக்கு பத்மஸ்ரீ விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளது.

ரோகித் சர்மா தலைமையில் இந்திய ஆடவர் கிரிக்கெட் அணி 2024 டி20 உலகக்கோப்பை மற்றும் 2025 சாம்பியன்ஸ் டிராபி கோப்பைகளை வென்றது. அதேபோல ஹர்மன்ப்ரீத் கவுர் தலைமையிலான இந்திய மகளிர் அணி முதல்முறையாக மகளிர் உலகக்கோப்பையை வென்று வரலாறு படைத்தது.