பாக்ஸிங் ரிங்குக்குள் ஹர்ப்ஜன் சிங்கிற்கு நேரிடையாக ஸ்ரீசாந்த் சவால்விட்ட நிலையில், அதற்கு ஹர்பஜன் சிங் மறைமுகமாகப் பதிலடி கொடுத்துள்ளார். இதனால், அவர்கள் இருவருக்குள் மீண்டும் பழைய பகை முற்றியுள்ளது.
2008ஆம் ஆண்டு ஐபிஎல் தொடரின்போது, ஹர்பஜன் சிங்- ஸ்ரீசாந்த் இடையே தகராறு ஏற்பட்டது. இதில், ஹர்பஜன் சிங், ஸ்ரீசாந்த் கன்னத்தில் அறைந்தார். இந்த விவகாரம் கடுமையாக விமர்சிக்கப்பட்டது. இதனால், ஹர்பஜனுக்கு 8 போட்டிகள் விளையாடத் தடை விதிக்கப்பட்டது. பின்னர் இந்த விஷயம் தொடர்பாக ஹர்பஜன் சிங் வருத்தம் தெரிவித்திருந்தார். இதற்கிடையே, இந்த சம்பவத்தை அடிப்படையாகக் கொண்டு, ஹர்பஜன் சிங் அண்மையில் ஒரு விளம்பரத்தில் நடித்திருந்தார்.
அந்த விளம்பரத்தின் மூலம் ஹர்பஜன் சிங், சுமார் 80 லட்சம் முதல் 1 கோடி ரூபாய் வரை சம்பாதித்ததாகவும், அதைத் தனது சமூக வலைதளத்தில் பகிருமாறும் தன்னிடம் கேட்டுக்கொண்டதாகவும் ஸ்ரீசாந்த் கூறினார். மேலும், அந்த முன்னாள் இந்திய வேகப்பந்து வீச்சாளர், இன்ஸ்டாகிராமில் ஹர்பஜனை பிளாக் செய்துவிட்டதாகவும், இனி அவருடன் எந்த உறவும் இல்லை என்றும் கூறினார். ஸ்ரீசாந்த் இப்படி குற்றம்சாட்டியதை அடுத்து, அவர்களுக்குள் இருந்த பழைய பகை மீண்டும் விஸ்வரூபம் எடுத்தது.
மேலும், சமீபத்தில் சேனல் ஒன்றுக்குப் பேட்டியளித்த ஸ்ரீசாந்த், ஹர்பஜனுக்கு நேரடியாக சவால் விடுத்ததுடன், பாக்ஸிங் ரிங்கில் மோதி தங்களது கணக்கைத் தீர்த்துக் கொள்ளத் தயார் என்றும் அறிவித்தார். நேர்காணலில் பேசிய அவர் "இதே காட்சியை நிஜத்தில் செய்ய உங்களுக்கு தைரியம் இருக்கிறதா? என்னுடன் பாக்ஸிங் ரிங்குக்குள் வர உங்களுக்கு துணிச்சல் உள்ளதா” எனச் சவால் விடுத்தார். ஸ்ரீசாந்தின் இந்த சவால் வெளியான சில மணி நேரங்களிலேயே, ஹர்பஜன் சிங் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஒரு வீடியோவைப் பகிர்ந்துள்ளார்.
அதில் அவர் ஸ்ரீசாந்தின் பெயரை நேரடியாகக் குறிப்பிடவில்லை என்றாலும், அவருடைய பதிவு சமூக ஊடகங்களில் பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது. அந்த வீடியோவில் ஹர்பஜன் சிங், "யாரோ மிகச் அழகாகச் சொல்லியிருக்கிறார்கள்... வீணாகப் பேசுபவர்களைப் பேசவிடுங்கள், எப்போதும் வெற்றுப் பாத்திரங்கள்தான் அதிக சத்தம் போடும்" என்று குறிப்பிட்டுள்ளார். ஸ்ரீசாந்தை மறைமுகமாக வைத்துத்தான் ஹர்பஜன் சிங் பதிலடி கொடுத்திருப்பதாக ரசிகர்கள் கருதுகின்றனர். மேலும், இவ்விவகாரம் அவர்கள் இருவருடைய மோதல் கண்ணோட்டத்தில் பார்க்க வழிவகுத்துள்ளது.