கவுதம் கம்பீர் web
கிரிக்கெட்

விராட், ரோகித் எதிர்காலம் என்ன? பும்ரா காயம்? அணியில் இருக்கும் பாசிட்டிவ்! - ஓப்பனாக பேசிய கம்பீர்

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடரை 3-1 என இழந்த போதிலும் இந்திய அணியில் நிறைய பாசிட்டிவான விஷயங்கள் இருப்பதாக கவுதம் கம்பீர் கூறியுள்ளார்.

Rishan Vengai

ஆஸ்திரேலியாவுக்கு சுற்றுப்பயணம் செய்த இந்திய அணி 5 டெஸ்ட் போட்டிகள் கொண்ட பார்டர் கவாஸ்கர் தொடரில் பங்கேற்று விளையாடியது. பரபரப்பாக தொடங்கிய டெஸ்ட் தொடரில் பெர்த்தில் நடந்த முதல் போட்டியிலேயே வெற்றிபெற்ற இந்திய அணி 1-0 என முன்னிலை பெற்றாலும், அதற்குபிறகு 3-1 என தொடரை இழந்தது இந்தியா.

தொடரில் முன்னிலை வகித்தபோதும் அடுத்து 3 போட்டிகளில் தோல்வியை சந்தித்தது, இந்திய அணி மீது பல்வேறு விமர்சனங்களை பெற்றுக்கொடுத்துள்ளது. இந்திய வீரர்கள் பல முக்கியமான தருணங்களை தங்களுடைய பக்கம் திருப்பாமல், ஆஸ்திரேலியாவின் கைகளுக்கு வெற்றியை பரிசளித்தனர்.

ஜெய்ஸ்வால்

பும்ராவை தவிர வேறு எந்த வீரரும் பெரிதாக சோபிக்கவில்லை, விராட் கோலி, யஷஸ்வி ஜெய்ஸ்வால், நிதிஷ் ரெட்டி சதமடித்தாலும், கேஎல் ராகுல் அரைசதங்களாக அடித்தாலும், சிராஜ் நல்ல ஸ்பெல்களை வீசினாலும் முக்கியமான நேரத்தில் ஒரே அணியாக இந்தியா செயல்பட தவறவிட்டது. தனித்தனியாக சிறப்பான ஆட்டங்கள் இருந்தபோதிலும் ஒரு அணியாக செயல்பட முடியாமல் இந்தியா 10 வருடத்திற்கு பிறகு தொடரை இழந்துள்ளது.

nitish kumar reddy

இத்தகைய சூழலில் 3-1 என BGT தொடரை இழந்ததற்கு பிறகு இந்திய அணியின் தலைமை பயிற்சியாளர் கவுதம் கம்பீர் இந்திய அணியில் இருக்கும் பாசிட்டிவான விசயங்கள் குறித்தும், விராட் கோலி மற்றும் ரோகித் எதிர்காலம் குறித்தும், பும்ரா காயம் குறித்தும் பேசியுள்ளார்.

ரோகித், விராட் எதிர்காலம் என்ன?

ரோகித் சர்மா தன்னுடைய குடும்ப சூழல் காரணமாக முதல் டெஸ்ட் போட்டியை தவறவிட்டார். பின்னர் அணிக்கு திரும்பிய ரோகித் சர்மா 3, 6, 10, 3, 9 என 32 ரன்களை மட்டுமே சேர்த்து மிகவும் மோசமான ஃபார்மை கொண்டிருந்தார். அவரின் மோசமான ரன்களால் 5வது டெஸ்ட் போட்டியிலிருந்து அவராகவே விலகினார் ரோகித் சர்மா.

அதேபோல விராட் கோலி முதல் போட்டியில் சதமடித்தாலும், அதற்கடுத்த போட்டிகளில் 7, 11, 3, 36, 5, 17 மற்றும் 6 ரன்கள் என மிக மோசமான தொடரையே கொண்டிருந்தார். இந்த சூழலில் ரோகித் சர்மா மற்றும் விராட் கோலி இருவரும் டெஸ்ட்டில் ஓய்வை அறிவிக்க வேண்டும் என்ற விமர்சனங்கள் எழுந்தது.

இந்நிலையில் செய்தியாளர்கள் சந்திப்பில் பங்கேற்ற தலைமை பயிற்சியாளர் கவுதம் கம்பீர் விராட் கோலி மற்றும் ரோகித் சர்மாவின் எதிர்காலம் குறித்த கேள்விக்கு பதிலளித்தார். அப்போது பேசிய அவர், "பாருங்கள், எந்த வீரரின் எதிர்காலம் குறித்தும் என்னால் கருத்து கூற முடியாது, அது அவர்களின் சொந்த முடிவை பொறுத்தது. ஆனால் நான் சொல்லவிரும்புவது ஒன்றுதான், அவர்களுக்கு இன்னும் இந்த விளையாட்டின்மீது பசி இருக்கிறது, வெற்றியை தேடவேண்டும் என்ற பேரார்வம் இருக்கிறது, அவர்கள் கடினமான மனிதர்கள். அவர்களால் இந்திய கிரிக்கெட்டை தொடர்ந்து முன்னேற்ற முடியும் என்று நான் நம்புகிறேன்" என தெரிவித்தார்.

ரோகித் சர்மா

அதேவேளையில் 5வது டெஸ்ட்டில் ரோகித் கேப்டனாக விலகிய முடிவை பாராட்டிய கம்பீர், “அணிக்காக ஒரு கேப்டன் விலகுவது என்பதை நான் நல்ல விசயமாக பார்க்கிறேன். அணியை முன்னிலையில் வைத்து ரோகித் எடுத்த அந்த முடிவு பாராட்டிற்குரியது” என்று தெரிவித்தார்.

அணியில் இருக்கும் நிறைய நல்ல விசயங்கள்..

பார்டர் கவாஸ்கர் தொடரை இழந்தபோதிலும் இந்திய அணியில் சில அல்ல பல பாசிட்டிவான விசயங்கள் இருப்பதாக கவுதம் கம்பீர் தெரிவித்தார்.

நிறைய நல்ல விசயங்கள் இருப்பதாக கூறிய கம்பீர், “முதலில், ஜஸ்பிரித் பும்ரா இல்லாததால்தான், எங்களால் வெற்றியை பெற முடியவில்லை என்பதை நான் ஒப்புக்கொள்ளவில்லை. வெளிப்படையாக எங்களுடைய தருணங்கள் ஆட்டத்தில் இருந்தன, நாங்கள் வெற்றியின் பக்கம் இருந்திருந்தால் நன்றாக இருந்திருக்கும். ஆனால் ஒரு நல்ல அணி வெற்றி பெற்றுள்ளது, வெற்றி என்பது ஒரு தனி நபரைச் சார்ந்தது அல்ல.

எங்களுக்கு நிறைய பாசிட்டிவான விசயங்கள் இந்த தொடரில் உள்ளன. உண்மையில், சில சில பாசிட்டிவான விசயங்கள் சொல்லப்போனால் நிறையவே பாசிட்டிவான விஷயங்கள் இருந்தன. ஆஸ்திரேலியாவில் தங்களுடைய முதல் சுற்றுப்பயணத்தில் நிறைய இளம்வீரர்கள் இருந்தனர், அவர்களை கையாள்வது கடினமானது என்று உங்களுக்குத் தெரியும். யஷஸ்வி ஜெய்ஸ்வால், நிதீஷ் ரெட்டி, வாஷிங்டன் சுந்தர் ஆகட்டும், ஆகாஷ் தீப் ஆகட்டும் அனைவருமே சிறப்பாக செயல்பட்டனர். தனித்தனியாக யாரையும் நான் குறிப்பிட விரும்பவில்லை, ஆனால் முகமது சிராஜின் அணுகுமுறை இந்த தொடரில் சிறப்பாக இருந்தது.

நான் சிராஜை போலவும், அவருடைய அர்ப்பணிப்பை போலவும் நிறையப் பார்த்ததில்லை, சில சமயங்களில் 100% உடற்தகுதி இல்லாத போதிலும் ஒவ்வொரு பந்திலும் ஓடிய ஒரு பையனை நான் பார்த்தேன். அவர் நாட்டுக்காக விளையாடுவதன் அர்த்தம் இதுதான். நாங்கள் கடைசி வரை அவரை போலவே போராட விரும்பினோம்.

மேலும், நீங்கள் எண்களைப் பற்றி நிறைய பேசலாம், ஜஸ்பிரித் பும்ரா ஒரு சிறந்த தொடரைக் கொண்டிருந்தார். ஜெய்ஸ்வால் ரன்கள் எடுத்தார். இந்தத் தொடரில் நிறைய வீரர்கள் ஓட்டங்களைப் பெற்றுள்ளனர். ஆனால் அணுகுமுறையின் பார்வையில், முகமது சிராஜ் எனக்கு முற்றிலும் அற்புதமானவர் என்று நான் நினைக்கிறேன்” என்று கம்பீர் கூறினார்.

இந்த தொடர் முழுவதும் பும்ராவிற்கு எவ்வளவு வேலைப்பளு இருந்ததோ, அதே அளவு சிராஜிற்கும் இருந்தது. பும்ரா 151 ஓவர்கள் வீசியிருக்கும் நிலையில், சிராஜ் 157 ஓவர்களை வீசியுள்ளார் என்பது குறிப்பிட வேண்டியது.

பும்ரா காயம் எப்படி இருக்கிறது?

பும்ரா

பும்ராவின் காயம் குறித்து பேசிய கம்பீர், “தற்போதைக்கு எந்த அப்டேட்டும் இல்லை. மருத்துவக் குழு அவருடைய முன்னேற்றத்திற்கு வேலை செய்கிறது, சரியான நேரத்தில் நல்ல அப்டேட்டை உங்களுக்கு வழங்குவோம்” என்று தெரிவித்தார்.