WTC இறுதிப்போட்டிக்கான வாய்ப்பை இழந்தது இந்தியா.. ஃபைனலில் AUS vs SA மோதல்!
2024-2025 பார்டர் கவாஸ்கர் டிரோபி தொடரில் இந்தியாவை 3-1 என வீழ்த்தி வெற்றிபெற்ற ஆஸ்திரேலியா, 10 வருட தொடர் தோல்விக்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளது.
ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 5வது டெஸ்ட் போட்டியில் 161 ரன்களை மட்டுமே இலக்காக நிர்ணயித்த இந்திய அணி, 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் படுதோல்வியை சந்தித்தன் மூலம் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டிக்கு செல்வதற்கான வாய்ப்பை இழந்தது.
5 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரை வென்றால் WTC இறுதிப்போட்டிக்கு செல்லலாம் என்பதாக இருந்த வாய்ப்பு, 2-2 என தொடரை சமன்செய்தால் ஆஸ்திரேலியா மற்றும் இலங்கை டெஸ்ட் தொடரின் முடிவை பொறுத்து வாய்ப்பு அமையும் என மாறியது. இந்த சூழலில் 3-1 என தொடரை இழந்த இந்திய அணி அனைத்து வாய்ப்புகளையும் தவறவிட்டு இறுதிப்போட்டிக்கு செல்வதற்கான ரேஸிலிருந்து விலகியுள்ளது.
இறுதிப்போட்டியில் AUS vs SA..
உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டிக்கு செல்வதற்கான ரேஸ்ஸிலேயே இல்லாத தென்னாப்பிரிக்கா அணி, ஆசிய மண்ணில் வங்கதேசத்துக்கு எதிரான டெஸ்ட் தொடரை வென்றதன் மூலம் வாய்ப்பை பிரகாசித்தது. அங்கிருந்து ஒரு தோல்வியை கூட சந்திக்காத டெம்பா பவுமா தலைமையிலான தென்னாப்பிரிக்கா, முதல் அணியாக WTC இறுதிப்போட்டிக்கு சென்று அசத்தியது.
இந்த சூழலில் நடப்பு சாம்பியன் அணியான ஆஸ்திரேலியா இந்தியாவிற்கு எதிரான டெஸ்ட் தொடரை 3-1 என வென்றதன் மூலம் இறுதிப்போட்டிக்கு தகுதிபெற்றது.
இரண்டு அணிகளுக்கும் இடையேயான 2024-2025 உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டியானது, ஜூன் 11 முதல் 15-ம் தேதி வரை லண்டனில் உள்ள லார்ட்ஸ் மைதானத்தில் நடக்கவிருக்கிறது.