ஆஸ்திரேலியா மற்றும் தென்னாப்பிரிக்காவிற்கு எதிரான தொடர்களில் சிறப்பாக விளையாடிய பிறகும், ரோகித் சர்மாவும், விராட் கோலியும் அடுத்த உலகக் கோப்பையில் விளையாடுவார்கள் என்ற உத்தரவாதத்தை அளிக்க தலைமைப் பயிற்சியாளர் கவுதம் கம்பீர் மறுத்துள்ளார்.
டெஸ்ட் மற்றும் டி20 வடிவங்களில் இருந்து ஓய்வு பெற்றுள்ள முன்னாள் கேப்டன்கள் ரோகித் சர்மா மற்றும் விராட் கோலி ஆகியோர் தற்போது ஒருநாள் போட்டிகளில் மட்டும் கவனம் செலுத்தி வருகின்றனர். அதன்பிறகு, நீண்ட இடைவெளிக்குப் பிறகு ஆஸ்திரேலியாவுக்கு எதிராகக் களமிறங்கிய அவர்கள், அத்தொடரில் சிறப்பான பங்களிப்பை அளித்தனர். அது, தற்போது தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான தொடரிலும் எதிரொலித்தது. இருவரும் தனது நேர்த்தியான ஆட்டத்தால் தொடரையே வென்று கொடுத்துள்ளனர். ரோகித் சர்மா, இந்த தொடரில் 2 அரைசதங்கள் அடிக்க, விராட் கோலியோ 2 சதம், 1 அரைசதம் அடித்து ரசிகர்களையும் தேர்வாளர்களையும் திரும்பிப் பார்க்கவைத்தார். எனினும், அவர்களுடைய எதிர்கால திட்டம் குறித்து இன்றும் பேசப்பட்டு வருகிறது.
குறிப்பாக, அவர்கள் இருவரும் 2027 உலகக்கோப்பையை மனதில் வைத்து ஆடி வருகின்றனர். ஆனால், அதுவரை அவர்கள் நிரந்தரமாக விளையாட முடியுமா என்பதே தேர்வாளர்களின் கணிப்பாக உள்ளது. இந்த நிலையில், ரோகித் சர்மாவும், விராட் கோலியும் அடுத்த உலகக் கோப்பையில் விளையாடுவார்கள் என்ற உத்தரவாதத்தை அளிக்க தலைமைப் பயிற்சியாளர் கவுதம் கம்பீர் மறுத்துள்ளார். தென்னாப்பிரிக்காவிற்கு எதிரான மூன்றாவது ஒருநாள் போட்டிக்குப் பின்னர், இந்திய அணி தலைமைப் பயிற்சியாளர் கம்பீர் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவரிடம், ரோகித் சர்மாவும், விராட் கோலியும் 2027 உலகக் கோப்பையில் விளையாடுவது குறித்து கேள்வி எழுப்பப்பட்டது. அதற்குப் பதிலளித்த கம்பீர், ஒருநாள் உலகக் கோப்பைக்கு இன்னும் இரண்டு வருடங்கள் இருக்கிறது என்பதை, நீங்கள் உணர வேண்டுமென தெரிவித்தார். நிகழ்காலத்தில் இருப்பது முக்கியம் எனவும், இளம் வீரர்கள் தங்கள் வாய்ப்புகளை பயன்படுத்திக் கொள்கிறார்கள் எனவும் கூறினார்.