varun chakravarthy - gary stead web
கிரிக்கெட்

”பெரிய அச்சுறுத்தலாக வருண் சக்கரவர்த்தி இருப்பார்..” நியூசிலாந்தை எச்சரிக்கும் பயிற்சியாளர்!

2025 சாம்பியன்ஸ் டிராபி இறுதிப் போட்டியில் நியூசிலாந்து மற்றும் இந்திய அணிகள் நாளை பலப்பரீட்சை நடத்துகின்றன.

Rishan Vengai

2025 சாம்பியன்ஸ் டிராபியின் இறுதிப்போட்டியானது துபாயில் உள்ள சர்வதேச மைதானத்தில் மார்ச் 9-ம் தேதியான நாளை நடக்கவிருக்கிறது.

2002 சாம்பியன்ஸ் டிராபி மற்றும் 2013 சாம்பியன்ஸ் டிராபி கோப்பைகளை வென்ற இந்திய அணி 3வது கோப்பைக்காகவும், அதேவேளையில் 2000 சாம்பியன்ஸ் டிராபி வென்ற நியூசிலாந்து அணி 2வது கோப்பைக்காகவும் மோதவிருக்கின்றன.

இந்தியா - நியூசிலாந்து

2000 சாம்பியன்ஸ் டிராபி இறுதிப்போட்டி, 2021 உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டி என இரண்டு ஐசிசி ஃபைனல்களில் நியூசிலாந்திடம் இந்திய அணி தோல்வியை சந்தித்திருக்கும் நிலையில், 2025 சாம்பியன்ஸ் டிராபியில் பதிலடி கொடுத்து கோப்பை வெல்லும் என்ற எதிர்பார்ப்புடன் இந்திய ரசிகர்கள் காத்திருக்கின்றனர்.

இந்நிலையில் நியூசிலாந்து அணிக்கு இறுதிப்போட்டியில் அச்சுறுத்தலாக இருக்கும் வீரர் குறித்து அவ்வணியின் பயிற்சியாளர் கேரி ஸ்டீட் பேசியுள்ளார்.

வருண் சக்கரவர்த்தி பெரிய அச்சுறுத்தலாக இருப்பார்..

இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகள் மோதிய கடைசி லீக் போட்டியில் சுழற்பந்துவீச்சில் சிறப்பாக செயல்பட்ட வருண் சக்கரவர்த்தி, நியூசிலாந்து பேட்ஸ்மேன்களை திணறடித்தார். 5 விக்கெட்டுகள் வீழ்த்திய அவர் இந்திய அணிக்கு கடினமற்ற வெற்றியை உறுதிசெய்தார்.

இந்த நிலையில் இறுதிப்போட்டியில் நியூசிலாந்து அணிக்கு வருண் சக்கரவர்த்தி தான் பெரிய அச்சுறுத்தலாக இருப்பார் என்று நியூசிலாந்து அணியின் பயிற்சியாளர் கேரி ஸ்டீட் கூறியுள்ளார்.

varun chakravarthy

இதுகுறித்து போட்டிக்கு முன்னதான செய்தியாளர்கள் சந்திப்பில் பேசிய அவர், “கடைசி லீக் ஆட்டத்தில் எங்களுக்கு எதிராக 5/42 என விக்கெட்டுகளை வீழ்த்திய பிறகு, இறுதிப்போட்டியிலும் வருண் சக்கரவர்த்தி விளையாடுவார் என்று நாங்கள் எதிர்பார்க்கிறோம். அவர் ஒரு தரமான பந்து வீச்சாளர், கடந்த முறை எங்களுக்கு எதிராக தனது திறமைகளைக் காட்டினார். இறுதிப்போட்டியில் அவர் எங்களுக்கு பெரிய அச்சுறுத்தலாக இருப்பார், அதனால் அவருக்கு எதிரான திட்டங்களோடு வருவோம்” என்று பேசியுள்ளார்.

மேட் ஹென்றி

மேலும் தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான அரையிறுதிப்போட்டியில் கேட்ச் எடுக்கும்போது தோள்பட்டையில் காயம் ஏற்பட்ட மேட் ஹென்றி விளையாடுவதில் பிரச்னை இருப்பதாக கூறிய அவர், ஹென்றி திரும்பி வருவதற்கான அத்தனை சாத்தியக்கூறுகளை எதிர்நோக்குவதாக தெரிவித்துள்ளார்.