இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் மகேந்திர சிங் தோனி, ஒருநாள் உலகக்கோப்பை, டி20 உலகக்கோப்பை மற்றும் சாம்பியன்ஸ் டிரோபி உலகக்கோப்பை என மூன்று ஐசிசி கோப்பைகளை வென்ற ஒரே கேப்டன் என்ற பெருமையை தன்வசம் வைத்துள்ளார். அவரது தலைமையில் தான் இந்திய அணி ஐசிசி டெஸ்ட் தரவரிசையில் முதல் இடத்தை பிடித்து தலைசிறந்த அணியாக தலைநிமிர்ந்தது. அதுமட்டுமல்லாமல் ஒரு வீரராக போட்டியை முடித்துவைக்கும் சிறந்த பினிசராக இன்றளவும் போற்றப்படும் ஒரு வீரராக தோனி இருந்துவருகிறார்.
இவ்வளவு பெருமைகளுக்கு சொந்தக்காரராக இருந்தபோதும் கூட, முடிவில் இந்திய அணிக்காக தோனி எடுத்த சில முடிவுகள் பல்வேறு வீரர்களால் விமர்சிக்கப்பட்டுவருகிறது. இந்திய அணிக்குள் தோனி எடுத்துவந்த சில கட்டுப்பாடுகள் மற்றும் விதிமுறைகள், அப்போதைய வீரர்களான யுவராஜ் சிங், கவுதம் கம்பீர், வீரேந்தர் சேவாக், ஹர்பஜன் சிங் போன்ற வீரர்களுக்கு பாதிப்பாக அமைந்தது.
முக்கியமாக சொல்லப்போனால் 2011 உலகக்கோப்பை வெல்ல காரணமாக இருந்த யுவராஜ் சிங் மற்றும் கவுதம் கம்பீர் இருவருமே 2013 சாம்பியன்ஸ் டிராபி அணியில் இடம்பெறவில்லை. இப்படியான பல விசயங்கள் தோனியை விமர்சிக்க காரணங்களாக இருந்துள்ளன.
அந்தவரிசையில் தன்னுடைய மகன் யுவராஜ் சிங்கின் கிரிக்கெட் வாழ்க்கையை அழித்துவிட்டதாக, அவரின் தந்தை யோகராஜ் சிங் தொடர்ச்சியாக தோனிமீது விமர்சனத்தை வைத்துவருகிறார்.
தோனி மற்றும் யுவராஜ் சிங் காம்போ என்பது எப்போதும் இந்திய கிரிக்கெட் ரசிகர்களின் விருப்பமான ஒன்றாக இன்றளவும் இருந்துவருகிறது. 2007 டி20 உலகக்கோப்பையில் தோள் கொடுக்கும் தோழனாக சேர்ந்து போராடி உலகக்கோப்பையை வென்ற இவர்களிடையே, 2008ம் ஆண்டு ஒருநாள் கேப்டனாக தோனி அறிவிக்கப்பட்ட போது விரிசல் விழுந்தது.
ஒருநாள் அணியின் கேப்டனாக இருக்க விரும்பினேன் என்று தன்னுடைய எண்ணத்தை வெளிப்படுத்திய யுவராஜ் சிங், ஒரு கேப்டனாக தோனிக்கும், துணை கேப்டனாக எனக்கும் நிறைய கருத்து வேறுபாடுகள் இருந்ததாகவும் தெரிவித்தார்.
2011 ஒருநாள் உலகக்கோப்பை வரை உச்சத்தில் இருந்த யுவராஜ் சிங், புற்றுநோயால் கிரிக்கெட் வாழ்க்கையிலும் சரிவை கண்டார். புற்றுநோயிலிருந்து வெளிவந்து இந்திய கிரிக்கெட் அணியில் கம்பேக் கொடுக்க காத்திருந்த யுவராஜ் சிங்கை, யோ-யோ டெஸ்ட்டில் தகுதிபெறவில்லை என தோனி தலைமையிலான இந்திய அணி நிராகரித்தது. 2013 சாம்பியன்ஸ் டிராபி அணிக்கும் யுவராஜ் தேர்வுசெய்யப்படவில்லை.
அப்போது தான் யுவராஜ் சிங்கின் தந்தை ”யுவராஜ் எடுத்த 17 பாய்ண்ட் என்பதே உடற்தகுதிக்கு போதுமானது தான், திட்டமிட்டு அவரை ஒதுக்கிவிட்டார்கள்” என பகிரங்கமாக தோனி மீதும், இந்திய அணி மீதும் குற்றச்சாட்டை வைத்தார். அதற்கு பிறகு ஐபிஎல், ரஞ்சிக்கோப்பை என ஃபார்மிற்கு திரும்பிய யுவராஜ் மீண்டும் இந்திய அணியில் இடம்பெற்றார்.
2014 டி20 உலகக்கோப்பை பைனலில் இந்தியா இலங்கையிடம் படுதோல்வியை சந்தித்தது. அந்த போட்டியில் யுவராஜ் சிங் 21 பந்தில் 11 ரன்கள் எடுத்ததால் தான் இந்தியா தோல்வியை சந்தித்தது என குற்றஞ்சாட்டப்பட்டு, 2015 ஒருநாள் உலகக்கோப்பை அணியிலிருந்து யுவராஜ் சிங்கின் பெயர் நீக்கப்பட்டது. ஆனால் அப்போதும் தோனியை குறைகூறிய யுவராஜ் சிங் தந்தை, அந்த போட்டியில் ரோகித் சர்மா, தோனி யாருமே சரியாக விளையாடவில்லை “என் மகன் மீதான என்னுடைய கனவை தோனி சிதைத்துவிட்டார்” என்று விரக்தியை வெளிப்படுத்தினார். அதற்கு பிறகான ஒரு உரையாடலில் “நானும் தோனியும் கிரிக்கெட்டை தாண்டி நெருங்கிய நண்பர்கள் இல்லை” என யுவராஜ் சிங் நேர்காணலில் வெளிப்படையாக கூறியிருந்தார். முடிவில் இந்தியாவிற்காக 2 உலகக்கோப்பை வென்றுகொடுத்தவரான யுவராஜ் சிங்கிற்கு ஒரு ஃபேர்வெல் போட்டி கூட இல்லாமல் கிரிக்கெட் வாழ்க்கை முடிவுக்கு வந்தது.
இந்த சூழலில் தோனியை கடுமையாக விமர்சித்து பேசிய யுவராஜ் சிங்கின் தந்தை, “நான் தோனியை மன்னிக்கவே மாட்டேன். அவர் தனது முகத்தை கண்ணாடியில் பார்க்க வேண்டும். அவர் மிகப்பெரிய கிரிக்கெட் வீரர் தான். ஆனால், எனது மகனுக்கு எதிராகச் செயல்பட்டு இருக்கிறார். யுவராஜ் சிங் இன்னும் நான்கு அல்லது ஐந்து ஆண்டுகள் விளையாடி இருப்பார். தோனிதான் எனது மகனின் வாழ்க்கையையே அழித்துவிட்டார்” என்று பகிரங்கமாக குற்றஞ்சாட்டியிருந்தார்.
இந்நிலையில் சமீபத்தில் யுவராஜ் சிங்கிற்காக தோனி போராடினார் என்று முன்னாள் இந்திய பயிற்சியாளர் கேரி கிர்ஸ்டன் கூறியிருப்பது, யுவராஜ் சிங்கின் தந்தையின் விமர்சனத்தை எல்லாம் முறியடிக்கும் விதமாக உள்ளது.
2011 உலகக்கோப்பை அணி குறித்து பேசியிருக்கும் கேரி கிர்ஸ்டன், “2011 உலகக்கோப்பை அணியில் யுவராஜ் சிங்கை தேர்வுசெய்வதை இறுதிவரை தேர்வுக்குழு உறுதிசெய்யவில்லை. நானும், தோனியும் மிகவும் போராடித்தான் யுவராஜ் சிங்கை அணிக்குள் கொண்டுவந்தோம், 15 வீரர்கள் கொண்ட ஸ்குவாட் மீது அதிகப்படியான விவாதம் நடந்தது.
தேர்வுக்குழுவினர் யுவராஜ் சிங்கின் அப்போதைய ஃபார்மை கருத்தில்கொண்டு அவரை அணியில் எடுக்க தயாராக இல்லை; ஆனால் அவரின் அனுபவம் இந்தியாவிற்கு தேவை என்பதில் நானும், தோனியும் இறுதிவரை உறுதியாக இருந்தோம். நல்லவேளையாக அவரை அணிக்குள் எடுத்துச்சென்றோம், கடவுளுக்கு நன்றி” என்று உண்மையை உடைத்துள்ளார்.
இதுவரை யுவராஜ் சிங்கின் கிரிக்கெட் வாழ்க்கையை தோனி அழித்துவிட்டார் என அவருடைய தந்தை குற்றஞ்சாட்டி வந்த நிலையில், யுவராஜ் சிங்கிற்காக தோனி போராடினார் என்ற உண்மை வெளிவந்திருப்பது யோகராஜ் சிங்கின் விமர்சனத்திற்கு முற்றுப்புள்ளி வைப்பதாக உள்ளது. இதைப்பார்த்த தோனியின் ரசிகர்கள் ‘இதை அப்படியே யுவராஜ் சிங்கோட அப்பாக்கு யாராவது எடுத்து சொல்லுங்கப் பா’ என கருத்திட்டு வருகின்றனர்.