gautam gambhir pti
கிரிக்கெட்

‘17 ஆண்டல்ல.. 17 மாதத்தில் டி20 உலகக்கோப்பை’ - மீண்டும் தன்னைத் தானே புகழ்ந்துகொண்ட கம்பீர்!

இந்திய அணி கத்துக்குட்டி அணியான ஜப்பானிடம் 2 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றது கடுமையான விமர்சனத்தை பெற்றது.

Rishan Vengai

ஜப்பான் மீது 2 ரன் வித்தியாசத்தில் தப்பித்த இந்திய அணியின் சமீபத்திய மோசமான ஆட்டங்கள் குறித்து எழுந்த விமர்சனங்களுக்கு பதிலளித்த கவுதம் கம்பீர், 17 மாதத்தில் மூன்றாவது கோப்பை வென்ற அணி தாங்கள் என பேசியுள்ளார்.

கடந்த 22ஆம் தேதி ஜப்பானுக்கு எதிரான டி20 போட்டியில் விளையாடிய இந்திய அணி, மழையால் 5 ஓவர்களாக குறைக்கப்பட்ட போட்டியில் வெறும் 32 ரன்கள் மட்டுமே அடித்தது. தொடர்ந்து விளையாடிய ஜப்பான் அணி பலம் வாய்ந்த இந்தியாவை வீழ்த்தும் நிலையிலேயே இருந்தது. ஆனால் துரதிருஷ்டவசமாக 2 ரன்கள் வித்தியாசத்தில் ஜப்பான் தோல்வியை தழுவியது. ஒருவேளை ஜப்பான் வென்றிருந்தால் அது அவர்களுக்கு வரலாற்று வெற்றியாகவும், இந்தியாவிற்கு ஒரு மோசமான வரலாற்று தோல்வியாகவும் இருந்திருக்கும்.

இந்தசூழலில் டி20 உலகக்கோப்பை வென்ற கையோடு கேப்டன்ஷிப்பை மாற்றிய பிறகு, இந்திய அணி அயர்லாந்து தொடர் முதல் ஜப்பான் டி20 போட்டிவரை மோசமாக செயல்படுவது கடுமையான விமர்சனத்தை பெற்றது. இந்நிலையில் தான் விமர்சனங்களுக்கு இந்திய தலைமை பயிற்சியாளர் கவுதம் கம்பீர் பதிலளித்து பேசியுள்ளார்.

gambhir

இதுகுறித்து பேசியிருக்கும் அவர், “கிரிக்கெட் வரலாற்றில் எந்த அணி ஒரு உலகக் கோப்பையிலிருந்து அடுத்த உலகக் கோப்பை வரை தோல்வியடையாமல் சென்று, பின்னர் உலகக் கோப்பையை வென்றுள்ளது? என்று கேள்வி எழுப்பினார். மேலும், இரண்டாவது உலகக் கோப்பையை வெல்ல இந்த வீரர்களுக்கு 17 ஆண்டுகள் ஆகவில்லை. மூன்றாவது உலகக் கோப்பையை வெல்ல அவர்களுக்கு 17 மாதங்கள் மட்டுமே ஆனது. திடீரென்று, ஒன்றிரண்டு மோசமான தொடர்கள் அல்லது மூன்று மோசமான ஆட்டங்கள் அவர்களை மோசமான வீரர்களாகவோ அல்லது எங்களை ஒரு மோசமான அணியாகவோ ஆக்கிவிடாது" என பேசியுள்ளார்.

அவர் சொன்ன 17 ஆண்டுகள் கணக்கு 2007 டி20 உலகக்கோப்பைக்கு பிறகு டிராவிட் தலைமையில் 17 ஆண்டுகளுக்கு பிறகு 2024ஆம் ஆண்டு வென்றதை குறிக்கிறது. ஒருவேளை இவர் டிராவிட்டை விமர்சித்து பேசுகிறாரா அல்லது தன்னுடைய சாதனையை தானே புகழ்ந்து பேசுகிறாரா என்ற கேள்வியை நெட்டிசன்கள் எழுப்பியுள்ளனர்.