15 வயது அதிரடி தொடக்க வீரர் வைபவ் சூர்யவன்ஷி, சச்சினை நினைவூட்டும் திறமையுடன் லிஸ்ட் ஏ கிரிக்கெட்டில் சாதனைகள் படைத்தும், அயர்லாந்து தொடரில் புறக்கணிக்கப்பட்டது சர்ச்சையாகியுள்ளது. கவாஸ்கர், மஞ்ச்ரேக்கர் போன்ற முன்னாள் வீரர்கள், மிடில் ஆர்டரை வலுப்படுத்த சஞ்சு சாம்சனை கீழிறக்கி சூர்யவன்ஷியோடு சென்றிருக்க வேண்டும், இது தவறான தேர்வு என கடுமையாக சாடுகின்றனர்.
2026 டி20 உலகக்கோப்பையை வென்ற பிறகு அயர்லாந்துக்கு சுற்றுப்பயணம் செய்த இந்திய அணி முதல் டி20 தொடரில் விளையாடியது. கோப்பை வென்று கொடுத்திருந்தபோதும் சூர்யகுமார் யாதவின் கேப்டன் பதவி பறிக்கப்பட்டு ஸ்ரேயாஸ் ஐயருக்கு கேப்டன்சி பொறுப்பு வழங்கப்பட்டது.
இந்தசூழலில் ஸ்ரேயாஸ் ஐயர் தலைமையிலான இந்திய அணி 2 டி20 போட்டிகள் கொண்ட தொடரில் அயர்லாந்துக்கு எதிராக விளையாடியது. அயர்லாந்தின் ஆடுகளத்திற்கு ஏற்ப தங்களை தகவமைத்துக்கொள்ளாத இந்திய பேட்ஸ்மேன்கள் மோசமான ஆட்டத்தை வெளிப்படுத்தி சொற்ப ரன்களில் ஆட்டமிழந்தனர். இதன்விளைவாக தொடர்ச்சியாக 16 இருதரப்பு டி20 தொடர்களை இழக்காத இந்திய அணி 1,050 நாட்கள் வெற்றி ஓட்டத்திற்கு பிறகு தோல்வியை சந்தித்தது. அதிலும் 2-0 என அயர்லாந்திடம் இந்தியா சரணடைந்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
இந்நிலையில் தான் இத்தொடருக்கான இந்திய அணி ஸ்குவாடில் இடம்பெற்றிருந்த 15 வயது சூர்யவன்ஷியை ஏன் களமிறக்கவில்லை என்ற கேள்வி அதிகரித்துள்ளது. ஒருபக்கம் இந்திய ரசிகர்கள் கேள்வி எழுப்பிவரும் நிலையில், இந்திய முன்னாள் வீரர்களும் கேள்வி எழுப்பியுள்ளனர்.
தன்னுடைய அதிரடி பேட்டிங்கால் கிரிக்கெட் உலகையே தன்பக்கம் இழுத்துள்ள வைபவ் சூர்யவன்ஷி, 15 வயதில் சச்சின் டெண்டுல்கரை பிரதிபலிப்பதாக புகழப்படுகிறார். தொடக்க வீரராக களமிறங்கும் இவர் முதல் 6 ஓவரிலேயே எதிரணியிடமிருந்து தனியாளாக வெற்றியை பெறிக்கும் ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறார்.
இந்தசூழலில் தான் சூர்யவன்ஷியின் திறமை வீணடிக்கப்பட கூடாது என நினைக்கும் இந்திய ரசிகர்கள், அவர் இந்தியாவிற்காக விளையாடுவதை பார்க்க வேண்டும் என்ற ஆர்வத்துடன் காத்திருக்கிறார்கள். லிஸ்ட் ஏ கிரிக்கெட்டில் பல அசாத்தியமான சாதனைகளை படைத்துவரும் சூர்யவன்ஷி தான் சர்வதேச போட்டிக்கு தயாராகிவிட்டேன் என்பதை ஆருடம் செய்துள்ளார்.
இந்நிலையில் தான் அயர்லாந்துக்கு எதிரான டி20 தொடரில் சூர்யவன்ஷிக்கு வாய்ப்பு வழங்கப்படாததை கேள்விஎழுப்பிவருகின்றனர். அந்தவகையில் முன்னாள் வீரர்களான சுனில் கவாஸ்கர் மற்றும் மஞ்ச்ரேக்கர் இருவரும் சூரய்வன்ஷி விளையாடி இருக்கவேண்டும் என கேள்வி எழுப்பியுள்ளனர்.
மஞ்ச்ரேக்கர் பேசுகையில், “இது ஒரு நல்ல கிரிக்கெட் முடிவு அல்ல. உண்மையில், நான் வைபவ் சூர்யவன்ஷி விளையாடாததை ஆதரிக்கவில்லை. முதல் டி20 போட்டியில் நடந்த சம்பவங்களுக்குப் பிறகு, இந்தியாவுக்கு ஒரு நல்ல மிடில்-ஆர்டர் பேட்ஸ்மேன் தேவை இருந்தது. தொடக்க ஆட்டக்காரர்கள் அதிரடியாக விளையாடுவது மட்டும் போதாது. அதன்பிறகும் வரும் வீரர்களும் அதிரடியாக விளையாட வேண்டும். அந்தப் பகுதியில்தான் இந்தியாவுக்கு ஒரு முழுமையான பேட்டர் தேவைப்பட்டார். அதனால் மிடில் ஆர்டரில் சஞ்சு சாம்சனுக்கு வாய்ப்பு வழங்கப்பட்டு தொடக்க வீரராக வைபவ் சூர்யவன்ஷியை களமிறக்கியிருக்க வேண்டும்” என கூறியுள்ளார்.
சுனில் கவாஸ்கர் கூறுகையில், “அயர்லாந்து தொடரில் வைபவ் சூர்ய வன்ஷி அறிமுகமாவார் என நான் எதிர்பார்த்தேன். அவர் இரண்டு போட்டிகளிலும் விளையாடுவார் என்று நினைத்தேன். வரவிருக்கும் கடுமையான சோதனைகளுக்கு முன்பு. சர்வதேச கிரிக்கெட்டிற்கு அவரை மெதுவாகப் பழக்கப்படுத்துவதற்கு அது ஒரு மிகச் சிறந்த வழியாக இருந்திருக்கும். முதல் போட்டியில் அபிஷேக் சர்மா அல்லது சஞ்சு சாம்சனுடன் இளம் சூர்யவன்ஷிக்கு அறிமுக வாய்ப்பு கொடுப்பார்கள் என்றும், இரண்டாவது போட்டியிலும் அபிஷேக் அல்லது சஞ்சு இருவர் ஒருவரில் மாறி சூர்யவன்ஷியே விளையாடுவார் என்று உண்மையாகவே நினைத்தேன். இங்கிலாந்து தொடரில் நிச்சயம் அவருக்கு வாய்ப்பு வழங்குவார்கள் என்று நினைக்கிறேன்” என பேசியுள்ளார்.