பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் அசார் அலி. இவர், அணியின் தேர்வுக் குழு உறுப்பினர் மற்றும் இளைஞர் மேம்பாட்டுத் துறையின் தலைவர் பதவிகளை வகித்து வந்தார். இந்நிலையில் யாரும் எதிர்பாராத வகையில் தேர்வுகுழு உறுப்பினர் பதவியில் இருந்து விலகினார். அத்துடன் இளைஞர் மேம்பாட்டுத் தலைவர் பதவியை ராஜினாமா செய்துள்ளார். 12 மாத பதவிக்காலத்திற்குப் பிறகு இந்த முடிவை அவர் எடுத்துள்ளார். அவர் ராஜினாமா செய்வதாக பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத்துக்கு கடிதம் எழுதியுள்ளார். அதை பிசிபியும் ஏற்றுக் கொண்டுள்ளது.
பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத்துக்கும் அசார் அலிக்கும் நீண்டகாலமாக இருந்த கருத்து வேறுபாடு காரணமாக அவர் இந்த முடிவை எடுத்ததாக கூறப்படுகிறது. மற்றொரு முன்னாள் டெஸ்ட் கேப்டனான சர்பராஸ் அகமதுவுக்கு, பாகிஸ்தான் ஷாஹீன்ஸ் மற்றும் 19 வயதுக்குட்பட்ட அணிகளின் முழுமையான கட்டுப்பாடு வழங்கப்பட்டதை அடுத்து அவர் ஏமாற்றமடைந்ததாகக் கூறப்படுகிறது. இதனால்தான் அசார் பதவியை ராஜினாமா செய்ததாக தகவல் வெளியாகி உள்ளது. ஆனால், அசாரின் சில செயல் திட்டங்கள் விரக்தியை ஏற்படுத்தியதாக பிசிபி வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. எனினும், இந்த சம்பவம் பாகிஸ்தான் கிரிக்கெட்டில் சலசலப்பை ஏற்படுத்தி உள்ளது.
முதலில் வாரியத்தின் வழிகாட்டியாகப் பயணப்பட்ட சர்ஃபராஸ், பின்னர் கிரிக்கெட் விவகாரங்களில் ஆலோசகராகவும் பணியாற்றத் தொடங்கினார். இந்த நிலையில்தான்,, கடந்த வாரம் இரு அணிகளையும் பொறுப்பேற்கவும், பயிற்சியாளர்களின் செயல்திறன், தேர்வு விஷயங்கள், பயிற்சி முகாம்களை ஏற்பாடு செய்தல் உள்ளிட்ட அனைத்து அம்சங்களையும் மேற்பார்வையிடவும் நியமிக்கப்பட்டார். அணிகளுடன் பயணம் செய்யும் அதிகாரமும் அவருக்கு வழங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
மறுபுறம் பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத்தில் சமீபகாலமாக தேர்வாளர்கள் மீதும் அமைப்பினர் மீதும் குற்றச்சாட்டு வைக்கப்பட்டு வருகிறது. இதனால், வெளிநாட்டினர் உட்பட முன்னாள் வீரர்கள் மற்றும் பயிற்சியாளர்கள் தங்கள் ஒப்பந்தங்களை முடிக்காமல், வெளியேறினர் என்பது நினைவுகூரத்தக்கது. இதற்கிடையே, உலகக் கோப்பையில் தோல்வி கண்ட மகளிர் அணியின் தலைமைப் பயிற்சியாளராக இருக்கும் முகமது வாசிமின் ஒப்பந்தத்தையும் பிசிபி புதுப்பிக்கவில்லை.