england bazball cricket
england bazball cricket Cricinfo
கிரிக்கெட்

’சோத்துலையும் வாங்கியாச்சு.. சேத்துலையும் வாங்கியாச்சு’! - Bazball-ஐ விமர்சித்த முன். ENG வீரர்கள்!

Rishan Vengai

இங்கிலாந்து பயிற்சியாளர் ப்ரெண்டன் மெக்கல்லம் மற்றும் பென் ஸ்டோக்ஸ் இருவரும் சேர்ந்து இங்கிலாந்து டெஸ்ட் அணியை வழிநடத்திய பிறகு, மிக மோசமான ஒரு வெற்றியை முதன்முதலாக இந்தியாவிற்கு எதிராக பெற்றுள்ளனர். அதுமட்டுமல்லாமல் இங்கிலாந்து அணி பாஸ்பால் கிரிக்கெட்டை ஆட ஆரம்பித்த பிறகு, ஒரு எதிரணி பாதியிலேயே டிக்ளார் செய்து இங்கிலாந்தை பேட்டிங் செய்ய அழைத்தது இதுவே முதல்முறை.

இந்நிலையில், இந்தியாவிற்கு எதிராக 434 ரன்கள் வித்தியாசத்தில் இங்கிலாந்து அணி தோல்வியை சந்தித்த பிறகு, இங்கிலாந்தின் பாஸ்பால் அணுகுமுறை குறித்து முன்னாள் வீரர்கள் கேள்வி எழுப்பியுள்ளனர். 3வது போட்டிக்கு முன்புவரை இந்த இங்கிலாந்து அணி இந்திய மண்ணில் டெஸ்ட் தொடரை கைப்பற்றும் என்று கூறிவந்த மைக்கேல் வாகன், நாசர் ஹூசைன் மற்றும் அலைஸ்டர் குக் முதலிய வீரர்கள் தற்போது பாஸ்பால் ஆட்டத்தை விமர்சித்துள்ளனர்.

புலம்பி தள்ளிய முன்னாள் வீரர்கள்!

முதல் டெஸ்ட் போட்டியின் முதல் இன்னிங்ஸில் 100 ரன்களுக்கு மேல் முன்னிலை பெற்ற இந்திய அணியை, அதன் சொந்த மண்ணில் வைத்து முதல்முதலாக தோற்கடித்து வரலாறு படைத்தது இங்கிலாந்து அணி. இங்கிலாந்தின் பாஸ்பால் இந்திய ஸ்பின்னர்களிடம் எடுபடாது என்று கூறிய இந்திய முன்னாள் வீரர்களை எல்லாம் வாயடைக்க வைத்த இங்கிலாந்து, தொடரை கைப்பற்றக்கூடிய ஒரு பிரகாசனமான வாய்ப்பை ஏற்படுத்தியது.

ben stokes

ஆனால் இரண்டாவது போட்டியில் வெற்றிபெற்ற இந்திய அணி தொடரை 1-1 என சமன்செய்து நிம்மதி பெருமூச்சு விட்டது. அதன்பிறகு நடைபெற்ற 3வது டெஸ்ட் போட்டியில் 33 ரன்களுக்கு 3 விக்கெட்டை இழந்த இந்திய அணி தடுமாறியது, அதற்கு பிறகு நிதானித்த ரோகித் சர்மா மற்றும் ரவிந்திர ஜடேஜா இருவரும் சதமடித்து இந்திய அணியை நல்ல டோட்டலுக்கு எடுத்துச்சென்றனர். இரண்டாவது இன்னிங்ஸில் யஷஸ்வி ஜெய்ஸ்வால் இரட்டைசதமடிக்க, 557 ரன்கள் என்ற வெற்றி இலக்கை நோக்கி விளையாடிய இங்கிலாந்து அணி 122 ரன்களுக்கே ஆல் அவுட்டாகி படுதோல்வியை சந்தித்தது.

ben stokes

இந்நிலையில், இங்கிலாந்து அணி இந்திய மண்ணில் மீண்டும் டெஸ்ட் தொடரை கைப்பற்றும் என்று நம்பிக்கை தெரிவித்திருந்த முன்னாள் வீரர்கள், தற்போது விமர்சனத்தை முன்வைத்துள்ளனர்.

மைக்கேல் வாகன்:

டெலிகராப் உடன் பேசியிருக்கும் முன்னாள் இங்கிலாந்து கேப்டன் மைக்கேல் வாகன், “இங்கிலாந்தின் இந்த தோல்வியை என் கண்களாலேயே நம்பமுடியவில்லை. பிரண்டன் மெக்கல்லம் மற்றும் பென் ஸ்டோக்ஸ் தலைமையில் இங்கிலாந்து அணி அடைந்திருக்கும் மிகப்பெரிய தோல்வி இது. இந்திய வீரர்கள் அவர்களுடைய ஆட்டத்தை தெளிவாக வெளிப்படுத்தி வெற்றியை பதிவுசெய்துள்ளனர். ஆனால் இங்கிலாந்து வீரர்கள் எந்த இடத்தில் அதிரடியாக விளையாட வேண்டும் என்ற தெளிவு இல்லாமல், அனைத்து பந்துகளிலும் அடிக்கசென்று விக்கெட்டை பறிகொடுத்தனர்.

மைக்கேல் வாகன்

நீங்கள் உங்கள் மொமண்ட் எது என்பதை தெரிந்து ஆடவேண்டும், அதுதான் டெஸ்ட் கிரிக்கெட். இந்திய அணி 228.5 ஓவரில் 875 ரன்களை அடித்தது, ஆனால் பார்த்த யாருக்கும் அது போறிங்காகவோ, இல்லை பார்ப்பதற்கே பிடிக்கவில்லை என்று கூறுமளவிலோ இருக்கவில்லை. அதனால் இங்கிலாந்து அணி எங்கு நிதானிக்க வேண்டும், எங்கு அடிக்க வேண்டும் என்று புரிந்து தெளிவாக ஆடவேண்டும். இதுதான் இங்கிலாந்துக்கு கடைசி வாய்ப்பு விரைவாக விழித்துக்கொள்ள வேண்டும்” என்று வாகன் தெரிவித்துள்ளார்.

நாசர் ஹுசைன்:

ஸ்கை ஸ்போர்ட்ஸ் உடன் பேசியிருக்கும் முன்னாள் இங்கிலாந்து கேப்டன் நாசர் ஹுசைன், “பாஸ்பால் என்பது வெறும் அடித்து ஆடும் ஆட்டம் மட்டுமல்ல, அழுத்தத்தை எப்படி கையாளவேண்டும் என்பதும் அதில் அடங்கும். இங்கிலாந்து அணி அதற்கான சிறந்த எடுத்துக்காட்டாக சுப்மன் கில் மற்றும் யஷஸ்வி ஜெய்ஸ்வாலின் மூன்றாம் நாள் ஆட்டத்தை பார்க்கவேண்டும். அவர்கள் இருவரும் முதல் 30 முதல் 40 பந்துகளில் அழுத்தத்தை சமாளித்துவிட்டு, அதற்குபிறகு தான் அதிரடிக்கு திரும்பினர்.

நாசர் ஹூசைன்

ஜோ ரூட் போன்ற ஒரு வீரர் போட்டியின் நிலைமையை புரிந்து விளையாட வேண்டும். அஸ்வின் ஆட்டத்தில் இல்லை, ஜடேஜா காயத்திலிருந்து மீண்டு வந்துள்ளார், பும்ரா தொடர்ச்சியாக 3வது போட்டியில் விளையாடுகிறார், இதுபோன்ற பல சூழல்கள் இங்கிலாந்துக்கு சாதகமாக இருக்கும் போது அப்படியொரு ஷாட்டுக்கு வெளியேறியிருக்க கூடாது. பும்ராவை டீப்பாக எடுத்துச்சென்றுவிட்டு அதற்குபிறகு ஆடியிருக்க வேண்டும்” என்று கூறியுள்ளார்.

அலைஸ்டர் குக்:

ஸ்கை கிரிக்கெட் உடன் பேசியிருக்கும் முன்னாள் இங்கிலாந்து தொடக்க வீரர் அலைஸ்டர் குக், “இங்கிலாந்து அணி பாஸ்பால் கிரிக்கெட் மூலம் டெஸ்ட் கிரிக்கெட்டை காப்பாற்றும் வகையில், தங்களுடைய வழியில் சிறப்பாக செயல்பட்டுவருகிறது. ஆனால் அதை இன்னும் எப்படி தரமாக மாற்றவேண்டும் என்பதில் அதிக கவனம் செலுத்தவேண்டும். நியூசிலாந்தில் டெஸ்ட் தொடரை இழந்தாச்சு, ஆஷஷ் டெஸ்ட் தொடரிலும் தோற்றாச்சு, இப்படியே சென்றால் இந்தியாவிலும் தொடரை இழந்துவிடுவோம்” என்று எச்சரிக்கை செய்துள்ளார் குக்.

Alaistair Cook

எப்படியிருப்பினும் இந்த மூன்று முன்னாள் வீரர்களும் இங்கிலாந்து மீதமிருக்கும் இரண்டு போட்டிகளில் மீண்டுவந்து தொடரை கைப்பற்றவேண்டும் என நம்பிக்கை தெரிவித்துள்ளனர்!