rcb - csk web
கிரிக்கெட்

’இந்த சிஎஸ்கே அணியால் ஆர்சிபியை வெல்லமுடியாது..’ - முன்னாள் சிஎஸ்கே வீரர் கருத்து

இன்றைய ஐபிஎல் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி ஆர்சிபியை எதிர்கொண்டு விளையாடவிருக்கிறது.

Rishan Vengai

2026 ஐபிஎல் தொடரில் தொடர் தோல்வியால் புள்ளிப்பட்டியலில் கடைசியில் இருக்கும் சென்னை சூப்பர் கிங்ஸ், சின்னசாமியில் நடப்பு சாம்பியன் ஆர்சிபியை எதிர்கொள்ளும் நிலையில், காயம் காரணமாக முக்கிய வீரர்கள் இல்லாமை அணிக்கு பெரும் பின்னடைவு கொடுத்துள்ளது. 18 ஆண்டுகளில் முதன்முறையாக இந்த மைதானத்தில் ஆர்சிபியே ஃபேவரட் என சிஎஸ்கே முன்னாள் வீரர் கருத்து தெரிவிக்கிறார்.

2026 ஐபிஎல் தொடர் மார்ச் 28ஆம் தேதி முதல் தொடங்கி பரபரப்பாக நடந்துவருகிறது. முதலிரண்டு போட்டியில் ராஜஸ்தானுக்கு எதிராக 8 விக்கெட் வித்தியாசத்திலும், பஞ்சாப் கிங்ஸிலும் 5 விக்கெட் வித்தியாசத்திலும் தோல்வியடைந்த சென்னை சூப்பர் கிங்ஸ் அணி -2.562 புள்ளிகளுடன் 10வது இடத்தில் நீடிக்கிறது.

சிஎஸ்கே, 2026

இந்நிலையில் இன்று நடக்கவிருக்கும் 3வது லீக் போட்டியில் நடப்பு சாம்பியனான ஆர்சிபியை எதிர்கொண்டு சின்னசாமி மைதானத்தில் மோதவிருக்கிறது சென்னை அணி. பிரெவிஸ், எல்லிஸ் மற்றும் தோனி 3 பேருக்கும் காயம் ஏற்பட்டிருப்பது சிஎஸ்கேவிற்கு பின்னடைவை ஏற்படுத்தியிருக்கும் நிலையில், 2 தோல்விக்கு பிறகு வெற்றிபெற வேண்டிய கட்டாயத்தில் சிஎஸ்கே அணிக்கு செல்கிறது.

இந்தசூழலில் 18வருட ஐபிஎல்லில் பெங்களூரு சின்னசாமி ஸ்டேடியத்தில் முதல்முறையாக சிஎஸ்கேவிற்கு எதிராக ஆர்சிபி அணி ஃபேவரட்டாக இருப்பதாக முன்னாள் சிஎஸ்கே வீரர் சுப்ரமணியம் பத்ரிநாத் கூறியுள்ளார்.

சிஎஸ்கே வெற்றிபெற்றால் ஆச்சரியம்தான்..

தன்னுடைய யூடியூப் சேனலில் பேசியிருக்கும் முன்னாள் சிஎஸ்கே வீரர் சுப்ரமணியம் பத்ரிநாத், “சேப்பாக்கம் சிஎஸ்கேவின் கோட்டை என்ற உணர்வை எல்லாம் ஒதுக்கி வைத்துவிட வேண்டும் என்று நினைக்கிறேன். தொடர்ச்சியாக சேப்பாக்கத்தில் 6 தோல்விகளை சிஎஸ்கே கண்டுள்ளது. என்னால் இதை நம்பமுடியவில்லை. முன்பெல்லாம் சேப்பாக்கத்தில் விளையாட இறங்கும்போதே கெத்தாக இறங்கி, வேற லெவல் கிரிக்கெட்டை ஆடுவோம். ஆனால் தற்போது சேப்பாக்கம் சிஎஸ்கேவின் கோட்டை என்பது எல்லாம் இல்லாமல் போய்விட்டது” என்று கூறினார்.

சிஎஸ்கே, 2026

மேலும் இன்றைய ஆர்சிபிக்கு எதிரான போட்டி குறித்து பேசிய அவர், “18 வருட ஐபிஎல்லை கடந்து 19வது சீசன் நடக்கிறது, இவ்வளவு வருசம் சின்னசாமியில் நான் ஆர்சிபியை ஃபேவரட் சென்று சொன்னதில்லை. ஆனால் இந்தமுறை சிஎஸ்கேவிற்கு எதிராக ஆர்சிபி அணி தான் வெற்றிபெறும் நிலையில் உள்ளது. ஒருவேளை ஆர்சிபிக்கு எதிராக சிஎஸ்கே நன்றாக விளையாடினால் அதுதான் எனக்கு ஆச்சரியமாக இருக்கும். ஆர்சிபி அணி அனைத்து விதத்திலும் பலமான அணியாக இருக்கிறது, விராட் கோலியும் நல்ல ஃபார்முடன் தொடங்கியுள்ளார். ஹசல்வுட் இல்லையென்றாலும் அவர்களுடைய பவுலிங் யூனிட் பேலன்ஸாகவே இருக்கிறது. ஒருவேளை பிரெவிஸ் சிஎஸ்கே அணிக்குள் வந்தால் ரிசல்ட் மாற வாய்ப்பு இருக்கிறது” என்று பேசியுள்ளார்.