ஆஸ்திரேலியாவுக்கு சுற்றுப்பயணம் செய்திருக்கும் இந்திய அணி 5 டெஸ்ட் போட்டிகள் கொண்ட பார்டர் கவாஸ்கர் தொடரில் விளையாடிவருகிறது.
'நியூசிலாந்துக்கு எதிராக சொந்த மண்ணில் படுதோல்வி' என்னும் பதக்கத்துடன் சென்ற இந்திய அணி, ஆஸ்திரேலியாவுக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியை வென்று தரமான கம்பேக் கொடுத்தது. ஆனால் இரண்டாவது டெஸ்ட் போட்டியை அசால்ட்டாக வென்ற ஆஸ்திரேலியா அணி 5 போட்டிகள் கொண்ட தொடரை 1-1 என சமன்செய்தது.
இந்நிலையில் இரண்டு அணிகளுக்கும் இடையேயான 3வது டெஸ்ட் போட்டியானது பிரிஸ்பேனில் உள்ள கப்பா மைதானத்தில் தொடங்கி நடைபெற்றுவருகிறது.
முதலில் பேட்டிங் செய்த ஆஸ்திரேலியா அணியில் டிராவிஸ் ஹெட் 152 ரன்கள், ஸ்மித் 101 ரன்கள் என அடித்து அசத்த கடைசியாக வந்த விக்கெட் கீப்பர் அலெக்ஸ் கேரியும் அவருடைய பங்கிற்கு 70 ரன்களை குவித்து அசத்தினார். மூன்று பேரின் அசத்தலான ஆட்டத்தால் முதல் இன்னிங்ஸில் 445 ரன்களை சேர்த்துள்ளது ஆஸ்திரேலியா அணி.
ஆஸ்திரேலியாவை தொடர்ந்து விளையாடிய இந்திய அணியில் டாப் ஆர்டர் வீரர்களான யஷஸ்வி ஜெய்ஸ்வால் 4 ரன், சுப்மன் கில் 1 ரன் என அடுத்தடுத்து வெளியேற 6 ரன்னுக்கு 2 விக்கெட்டுகளை இழந்து இந்திய அணி தடுமாறியது.
இக்கட்டான நிலைமையில் களமிறங்கிய விராட் கோலி அணியை மீட்டு எடுத்துவருவார் என நினைத்த நிலையில், எப்போதும் போல ஆஃப் சைடில் ஐந்தாவது ஸ்டம்ப் லைனை துரத்திச்சென்று ஸ்லிப் திசையில் கேட்ச் கொடுத்து 6 ரன்னில் வெளியேறினார்.
இந்த பார்டர் கவாஸ்கர் தொடரில் விராட் கோலி இப்படியான முறையில் வெளியேறுவது இது 4வது முறை. தொடர்ந்து பொறுப்பற்ற விராட் கோலியை பார்த்து ரசிகர்கள் கடும் அதிருப்தியில் தள்ளப்பட்டுள்ளனர்.
அடுத்து வந்த ரிஷப் பண்ட்டும் அவுட்டாகி வெளியேற மூன்றாவது நாள் ஆட்டம் முடிவில் இந்தியா 51 ரன்களுக்கு 4 விக்கெட்டுகளை இழந்துள்ளது. கேஎல் ராகுல் 33 ரன்களுடனும், ரோகித் சர்மா 0 ரன்னுடனும் களத்தில் உள்ளனர்.
தொடர்ந்து விராட் கோலி எளிதான முறையில் 4வது மற்றும் 5வது ஸ்டம்ப் லைனில் வெளியேறுவது ரசிகர்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.
இதுகுறித்து சமூகவலைதளங்களில் ரசிகர்கள் பதிவுகளை பகிர்ந்துவருகின்றனர். ஒரு பதிவை பகிர்ந்திருக்கும் ரசிகர் ஒருவர், “டியர் விராட் கோலி, நான் உங்களை ரோகித் சர்மா உடனோ வேறு எந்த கிரிக்கட்டருடனோ ஒப்பிட விரும்பவில்லை. ஏனென்றால் நீங்கள் உங்களுடன் மட்டுமே போட்டிப்போட்டு கொண்டிருக்கிறீர்கள். நீங்கள் உருவாக்கிவைத்த லெகஸியானது, கடந்த 5 வருடங்களாக சரிவை காண்பதால் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. ஏமாற்றம் என்பது ரன்கள் குறைவதை சார்ந்து அல்ல, ஒரு போட்டியில் ரன்களை அடிக்கவில்லை என்றால் நீங்கள் அடுத்த போட்டியில் அடித்துவிடுவீர்கள். ஆனால் இப்போது ஏற்பட்டிருப்பது தொடர்ந்து ஒரே மாதிரியான முறையில் நீங்கள் ஏமாற்றமளித்து வெளியேறுவது தான். தொடர்ந்து ஒரே முறையில் வெளியேறுவது உங்களிடம் நம்பிக்கை இல்லாததை காட்டுகிறது. அதுவே ஒரு ரசிகராக எங்களுக்கு ஏமாற்றமளிக்கிறது. உங்களுடைய சராசரி 47-ஐ நெருங்கவதை பார்க்க எங்களால் முடியவில்லை, நீங்கள் உங்களையே சுயசரிபார்ப்பு செய்துகொள்ள வேண்டிய நேரம் இது. இப்படிக்கு ஏமாற்றமடைந்த ரசிகர்” என பதிவிட்டுள்ளார்.
மற்றொரு ரசிகரோ, டெஸ்ட் கிரிக்கெட்டை தனது ஆக்ரோஷமான மற்றும் மாஸ்டர் கிளாஸ் பேட்டிங் மூலம் SENA நாடுகளில கூட முன்னோக்கை எடுத்துச்சென்று, இந்திய டெஸ்ட் கிரிக்கெட்டை உயர்மட்டத்திற்கு கொண்டு சென்றவர், வேடிக்கைக்காக சதங்கள் அடித்து குவித்தவர், இப்போது டெஸ்ட் கிரிக்கெட்டில் ஃபேப் 4-ன் மோசமான பேட்ஸ்மேனாக ஓய்வு பெறுவார் என்பதை கற்பனை செய்து பாருங்கள்.
நீங்களே உங்களை மரபை உடைத்து கொண்டிருக்கிறீர்கள் விராட். உங்கள் பேட்டிங்கில் நீங்கள் உண்மையிலேயே அக்கறை கொண்டிருந்திருந்தால், ஒவ்வொரு போட்டியிலும் இதே தவறுகள் நடந்திருக்காது, ஆனால் நீங்கள் அதை மீண்டும் மீண்டும் செய்கிறீர்கள். இது உங்கள் விளையாட்டைப் பற்றி நீங்கள் கவலைப்படவில்லை என்பதைக் காட்டுகிறது” என விரக்தியுடன் பதிவிட்டுள்ளார்.
சிலர் இந்த வருடத்தில விராட் கோலியின் மோசமான சராசரியையும், சிலர் சச்சினுடன் ஒப்பிடாதீர்கள் என பல்வேறு அதிருப்திகளை பதிவுகளாக பகிர்ந்துவருகின்றனர்.
ஃபேப் 4 என அழைக்கப்படும் விராட் கோலி, ஜோ ரூட், ஸ்டீவ் ஸ்மித், கேன் வில்லியம்சன் அனைவரை விடவும் அதிக டெஸ்ட் சதங்களை அடித்த கோலி, தற்போது டெஸ்ட் சதங்கள் பட்டியலில் 30 சதங்களுடன் கடைசி இடத்தில் நீடிக்கிறார். அவருடைய கம்பேக் என்பது விராட் கோலியின் கையிலேயே தான் இருக்கிறது.