Sanju Samson
Sanju Samson PT
கிரிக்கெட்

என்ன தவறு செய்தார் சஞ்சு சாம்சன்? ஏன் ஓரங்கட்டுகிறீர்கள்? டிரெண்டாகும் ”Justice for Sanju”!

Rishan Vengai

இந்திய அணி 2023 ஒருநாள் உலகக்கோப்பையின் இறுதிப்போட்டியில் ஆஸ்திரேலியாவிடம் படுதோல்வியை சந்தித்து கோப்பையை பறிகொடுத்தது. ஒரு மிகப்பெரிய தோல்விக்கு பிறகு ஆஸ்திரேலியா அணிக்கு எதிரான டி20 தொடரில் பங்கேற்கும் இந்திய அணி, 5 போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடவிருக்கிறது. நவம்பர் 23ஆம் தேதி தொடங்கும் இந்த தொடரானது டிசம்பர் 3ஆம் தேதிவரை நடக்கிறது.

Travis Head

இந்நிலையில் டி20 தொடருக்கான 16 வீரர்கள் அடங்கிய இந்திய அணியை அறிவித்துள்ளது பிசிசிஐ நிர்வாகம். இந்த இந்திய அணியில் மீண்டும் சஞ்சு சாம்சனின் பெயர் இடம்பெறாமல் இருப்பது இந்திய ரசிகர்கள் இடையே அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. 2022 டி20 உலகக் கோப்பையில் அடைந்த மோசமான தோல்விக்கு பிறகு, அடுத்த வருடம் 2024 ஜூன் மாதம் நடக்கவிருக்கும் டி20 உலகக்கோப்பைக்கான இந்திய அணியை கட்டமைப்பதில் இந்திய நிர்வாகம் செயல்பட்டுவருகிறது.

இந்நிலையில், அதற்கான இந்திய அணியிலும் சஞ்சு சாம்சன் மறுக்கப்பட்டிருப்பது வேதனையளிப்பதாக ரசிகர்கள் தங்களுடைய அதிருப்தியை வெளிப்படுத்திவருகின்றனர்.

ஆஸ்திரேலியா டி20 தொடருக்கான இந்திய அணி:

சூர்யகுமார் யாதவ் (கேப்டன்), ருதுராஜ் கெய்க்வாட் (துணை கேப்டன்), இஷான் கிஷன், யஷஸ்வி ஜெய்ஸ்வால், திலக் வர்மா, ரின்கு சிங், ஜிதேஷ் சர்மா (WK), வாஷிங்டன் சுந்தர், அக்சர் படேல், சிவம் துபே, ரவி பிஷ்னோய், அர்ஷ்தீப் சிங், பிரசித் கிருஷ்ணா, அவேஷ் கான், முகேஷ் குமார், ஸ்ரேயாஸ் ஐயர்

ASIA CUP, ASIAN Games, ODI WC.. தற்போது டி20 தொடரிலும் இல்லாத வாய்ப்பு?

இந்திய விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேனாக இருந்துவரும் சஞ்சு சாம்சன் ஒருநாள் போட்டிகளில் மிடில் ஆர்டரில் விளையாடி 55.71 சராசரி வைத்திருக்கிறார். முன்னாள் இந்திய கேப்டன் எம் எஸ் தோனி மற்றும் கேஎல் ராகுல் இருவருக்கு பிறகு 50க்கும் மேலான சராசரி வைத்திருக்கும் ஒரே மிடில் ஆர்டர் வீரர் என்றால் அது சஞ்சு சாம்சன் மட்டும் தான். அதுமட்டுமல்லாமல் 148 ஐபிஎல் இன்னிங்ஸ்களில் விளையாடி இருக்கும் சஞ்சு சாம்சன் 30 சராசரி மற்றும் 137 ஸ்டிரைக் ரேட்டுடன் 3,888 ரன்களை குவித்திருக்கிறார். அதுமட்டுமல்லாமல் 2021ஆம் ஆண்டு ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு கேப்டனாக தேர்வுசெய்யப்பட்ட சஞ்சு சாம்சன், அந்த அணிக்காக அதிக போட்டிகளில் (22) வெற்றிபெற்ற கேப்டனாக ஜொலித்து வருகிறார்.

sanju samson

இந்நிலையில், தான் சஞ்சு சாம்சனுக்கான வாய்ப்பு தொடர்ந்து மறுக்கப்பட்டு வருகிறது. ஒவ்வொரு முறை இந்திய அணியில் இடம்பெறும் போதும் சிறப்பான ஆட்டத்தையே வெளிப்படுத்தும் சஞ்சு சாம்சன் அதற்கு பிறகு ஏன் காணாமல் போகிறார்?, எதற்காக காணாமல் போகிறார்? என்ற கேள்விக்கு மட்டும் விடைதெரியாமலே இருந்துவருகிறது.

*2023 ஆசியக்கோப்பையில் ஆடும் 11 வீரர்களில் திலக் வர்மா மற்றும் சூர்யகுமார் யாதவ் இருவருக்கும் வாய்ப்பளிக்கப்பட்டு சஞ்சு சாம்சனுக்கு வாய்ப்பு மறுக்கப்பட்டது.

* 2023 ஆசிய விளையாட்டு போட்டிகளில் இருந்தும் சஞ்சு சாம்சன் பெயர் இடம்பெறாமல் ஓரங்கட்டப்பட்டது.

* 2023 ஒருநாள் உலகக்கோப்பையிலும் சஞ்சு இடம்பெறவில்லை. சஞ்சு தயாராக இருந்தும் அவரை ஒரு உலகக்கோப்பை வீரராக இந்தியா பார்க்கவில்லை என முகமது கைஃப் வருத்தம் தெரிவித்திருந்தார்.

* தொடர்ந்து ஒருநாள் போட்டிகளில் மறுக்கப்பட்டுவரும் சஞ்சு சாம்சனுக்கு, தற்போதையை ஆஸ்திரேலியா டி20 தொடரிலும் வாய்ப்பு மறுக்கப்பட்டுள்ளது.

என்ன தவறு செய்தார் சஞ்சு சாம்சன்? X-ல் வைரலாகும் ”Justice for Sanju Samson”!

சஞ்சு சாம்சனுக்கான வாய்ப்பு தொடர்ந்து மறுக்கப்பட்டுவரும் நிலையில், அப்படி என்ன சஞ்சு சாம்சன் தவறு செய்தார்? ஏன் அவரை ஓரங்கட்டுகிறீர்கள் என்ற கேள்விகளை எழுப்பி ”Justice for Sanju Samson” என டிரெண்ட் செய்துவருகின்றனர் இந்திய ரசிகர்கள்.

டி20 தொடரில் சஞ்சு சாம்சனுக்கு வாய்ப்பு மறுக்கப்பட்டிருப்பது குறித்து பதிவுசெய்திருக்கும் ஒருவர், “சஞ்சு சாம்சன் மீதான தேர்வாளர்களின் நிலைப்பாடு நிச்சயமற்ற ஒன்றாக இருக்கிறது. அவரின் திறமையை இந்திய தேர்வாளர்கள் கண்டுகொள்ளவில்லையா? அவர் என்ன தான் தவறு செய்தார்? ODI போட்டிகளில் ரன்கள் அடித்த போதும் அவரை நீக்கினார்கள், தற்போது T20-களில் இருந்தும் நீக்கியுள்ளார்கள். இது வெறுப்பாக இருக்கிறது” என்று பதிவிட்டுள்ளார்.

மேலும் ஒருவர், “ஆஸ்திரேலியா டி20 தொடருக்கான இந்திய அணி அறிவிக்கப்பட்டதில், எந்த அனுபவமும் இல்லாமல் சூர்யகுமார் யாதவ் கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார். அதே நேரத்தில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு பல ஆண்டுகளாக கேப்டனாக செயல்பட்டுவரும் சஞ்சு சாம்சன் அணியில் கூட இல்லை. தயவுசெய்து இதை டிரெண்ட் செய்யுங்கள்” என பதிவிட்டுள்ளார்.

மேலும் ஒருவர், “இந்திய கிரிக்கெட் வரலாற்றில் மிகவும் அநியாயமாக நடத்தப்பட்ட ஒரு வீரர் என்றால் அது சஞ்சு சாம்சன் மட்டும் தான்” என எழுதியுள்ளார்.