dhoni retirement bcci
கிரிக்கெட்

தோனி எனும் சகாப்தம்.. நம்பிக்கை நாயகனாக மாறிய சாமான்யனின் கதை!

ஒரு சாதாரண வீரராகத் தொடங்கி, கிரிக்கெட் உலகின் அடையாளங்களில் ஒருவராக உயர்ந்த தோனியின் பயணம் எப்படி அமைந்தது? விரிவாகப் பார்க்கலாம்.

PT WEB

கிரிக்கெட் உலகில் சாதாரண வீரராக தொடங்கி, இந்திய அணியின் அடையாளமாக உயர்ந்த தோனி, ஐபிஎல் தொடரிலிருந்தும், ஒட்டுமொத்த கிரிக்கெட்டிலிருந்தும் ஓய்வு பெற்றார். இந்திய அணிக்காகவும், சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காகவும் ஒரு கேப்டனாக தலைமை வீரராக இருந்த, அவரது பயணம் ரசிகர்களின் மனதில் நீங்கா இடம் பிடித்துள்ளது.

செய்தியாளர் - ராஜ்குமார். ர

கிரிக்கெட் என்று வந்தாலே, எம்.எஸ். தோனி என்ற சகாப்தத்தைத் தவிர்த்துவிட்டு அந்தப் பேச்சை நிறைவு செய்துவிட முடியாது. அந்த அளவுக்கு கிரிக்கெட் ரசிகர்களின் மனதில் நீங்கா இடம்பிடித்தவர் தோனி. குறிப்பாக, சென்னை சூப்பர் கிங்ஸ் அணியுடன் அவருக்கு இருக்கும் பந்தம் தனித்துவமானது. 19 ஆண்டுகளாக ஐபிஎல் தொடரில் விளையாடி வந்த தோனி, அந்தத் தொடரிலிருந்தும் ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார். ஒரு சாதாரண வீரராகத் தொடங்கி, கிரிக்கெட் உலகின் அடையாளங்களில் ஒருவராக உயர்ந்த தோனியின் பயணம் எப்படி அமைந்தது? விரிவாகப் பார்க்கலாம்.

ms dhoni

ஜார்க்கண்ட் மாநிலம் ராஞ்சியில், 1981-ஆம் ஆண்டு ஜூலை 7-ஆம் தேதி பிறந்தவர் மகேந்திர சிங் தோனி. ஆரம்பத்தில் உள்ளூர் கிரிக்கெட் போட்டிகளில் விளையாடி வந்த அவர், 2004-ஆம் ஆண்டு வங்கதேச அணிக்கு எதிரான ஒருநாள் போட்டியின் மூலம் இந்திய அணியில் அறிமுகமானார். அடுத்தடுத்த போட்டிகளில் தனது அதிரடி ஆட்டத்தால் கவனம் ஈர்த்த தோனி, இந்திய அணியின் நம்பிக்கை நட்சத்திரமாக உருவெடுத்தார்.

அதிலும் 2007 உலகக்கோப்பையில் லீக் சுற்றோடு இந்தியா வெளியேறிய பிறகு, சச்சின், டிராவிட் போன்ற மூத்த வீரர்கள் எல்லாம் டி20 உலகக்கோப்பை தொடரிலிருந்து விலகிக்கொண்டனர். அப்போது துவண்டு போயிருந்த இந்திய அணியை தன்னுடைய கேப்டன்சியின் மூலம் தூக்கி நிறுத்தினார் எம்எஸ் தோனி. நீண்ட சடையுடன் யார்ரா இந்த பையன், இவனெல்லாம் கேப்டனா என விமர்சித்த ரசிகர்களுக்கு 2007 டி20 உலகக்கோப்பை இறுதிப்போட்டியில் பரம எதிரியான பாகிஸ்தானை வீழ்த்தி கோப்பை வென்று கொடுத்தார் தோனி. அங்கிருந்து தோனியின் சகாப்தம் இந்திய கிரிக்கெட்டில் ஆரம்பமானது.

2008-ஆம் ஆண்டு இந்தியாவில் ஐபிஎல் தொடர் அறிமுகமானபோது, சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டனாக ஒப்பந்தம் செய்யப்பட்டார் தோனி. அப்போது நடைபெற்ற ஏலத்தில் அதிக தொகைக்கு வாங்கப்பட்ட வீரர்களில் ஒருவராகவும் அவர் இருந்தார். ஏற்கனவே இந்திய அணிக்கு டி20 உலகக் கோப்பையை வென்று கொடுத்திருந்ததால், தோனி மீதான எதிர்பார்ப்பு அதிகமாக இருந்தது. அந்த எதிர்பார்ப்புக்கு ஏற்ப, முதல் ஐபிஎல் சீசனிலேயே சென்னை அணியை இறுதிப்போட்டி வரை அழைத்துச் சென்றார். ஆனால், இறுதிப்போட்டியில் கோப்பையைத் தவறவிட்டது சென்னை அணி.

ms dhoni

இருப்பினும், அடுத்தடுத்த சீசன்களில் தனது தலைமைப் பண்பால் அணியை வலுப்படுத்திய தோனி, 2010-ஆம் ஆண்டு சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு முதல் ஐபிஎல் கோப்பையைப் பெற்றுத்தந்தார். இதைத் தொடர்ந்து, 2011-ஆம் ஆண்டிலும் கோப்பையை வென்று, தொடர்ந்து இரண்டு முறை சாம்பியன் பட்டம் வென்ற முதல் அணியாக சென்னை சூப்பர் கிங்ஸ் சாதனை படைத்தது. இந்நிலையில், 2015-ஆம் ஆண்டுக்குப் பிறகு சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு இரண்டு ஆண்டுகள் தடை விதிக்கப்பட்டதால், 2016 மற்றும் 2017-ஆம் ஆண்டுகளில் அந்த அணி ஐபிஎல் தொடரில் பங்கேற்க முடியவில்லை. இந்தக் காலகட்டத்தில் தோனி, ரைசிங் புனே சூப்பர்ஜெயன்ட்ஸ் அணிக்காக விளையாடினார். 2017-ஆம் ஆண்டு அந்த அணியை இறுதிப்போட்டி வரை அழைத்துச் சென்றார். இதற்கிடையே, 2018-ஆம் ஆண்டு சென்னை சூப்பர் கிங்ஸ் அணி மீண்டும் ஐபிஎல் தொடரில் களமிறங்கியது. அணிக்குத் திரும்பிய தோனி, சர்வதேச கிரிக்கெட்டில் ஓய்வுபெற்ற வீரர்களை கொண்ட அணியை கட்டமைத்தார். அப்போதும் டாடி ஆர்மி, வயசான அணி என ரசிகர்களால் கிண்டல்செய்யப்பட்டது சிஎஸ்கே. ஆனால் அந்த சீசனிலேயே மீண்டும் கோப்பையை வென்று கொடுத்து எல்லோரையும் வாயடைக்க வைத்தார். இதனால், 'டாடீஸ் ஆர்மி' என்ற விமர்சனத்தையே பெருமையாக மாற்றியது சென்னை அணி.

2019-ஆம் ஆண்டு சீசனிலும் இறுதிப்போட்டி வரை முன்னேறிய சென்னை அணி, மும்பை இந்தியன்ஸ் அணியிடம் ஒரு ரன் வித்தியாசத்தில் தோல்வியடைந்து கோப்பையைத் தவறவிட்டது. தொடர்ந்து, 2020-ஆம் ஆண்டு முதல் முறையாக பிளேஆஃப் சுற்றுக்குத் தகுதி பெறாமல் தொடரிலிருந்து வெளியேறியது. ஆனால், அடுத்த ஆண்டே வலுவான கம்பேக் கொடுத்த சிஎஸ்கே, 2021-ஆம் ஆண்டு இறுதிப்போட்டியில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியை வீழ்த்தி நான்காவது முறையாகக் கோப்பையைக் கைப்பற்றியது. இதனைத் தொடர்ந்து, 2022-ஆம் ஆண்டு கேப்டன் பொறுப்பிலிருந்து தோனி விலகி, ரவீந்திர ஜடேஜாவிடம் தலைமைப் பொறுப்பை ஒப்படைத்தார். ஆனால், அணியின் செயல்பாட்டில் ஏற்பட்ட மாற்றங்களைத் தொடர்ந்து மீண்டும் கேப்டன் பொறுப்பை ஏற்றார்.

தோனியின் ஐபிஎல் பயணத்தில் மற்றொரு முக்கியமான மைல்கல்லாக 2023-ஆம் ஆண்டு அமைந்தது. அந்த சீசனில் சிறப்பாகச் செயல்பட்ட சென்னை சூப்பர் கிங்ஸ் அணி, இறுதிப்போட்டியில் குஜராத் டைட்டன்ஸ் அணியை எதிர்கொண்டது. மழையால் பாதிக்கப்பட்ட இறுதிப்போட்டியில், கடைசிப் பந்தில் ரவீந்திர ஜடேஜா பவுண்டரி அடித்து சென்னை அணிக்கு வெற்றியைத் தேடித்தந்தார். இதன் மூலம், ஐந்தாவது முறையாகக் கோப்பையை வென்ற சென்னை அணி, மும்பை இந்தியன்ஸ் அணியின் சாதனையையும் சமன் செய்தது. இதற்கிடையே, 2024-ஆம் ஆண்டு ஐபிஎல் தொடங்குவதற்கு முன்பாக கேப்டன் பொறுப்பிலிருந்து விலகிய தோனி, இளம் வீரரான ருதுராஜ் கெய்க்வாட்டிடம் தலைமைப் பொறுப்பை ஒப்படைத்தார். இருப்பினும், வீரராகத் தொடர்ந்து விளையாடி வந்தார் தோனி.

csk

2025-ஆம் ஆண்டு ஐபிஎல் தொடரிலும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக விளையாடினார் தோனி. ஆனால், 2026-ஆம் ஆண்டு ஐபிஎல் தொடரில் காயம் காரணமாக அவரால் ஒரு போட்டியில்கூட விளையாட முடியவில்லை. இதனால், அவரது ஐபிஎல் எதிர்காலம் குறித்த கேள்விகள் ரசிகர்கள் மத்தியில் எழுந்தன. இந்நிலையில், ஐபிஎல் போட்டிகளிலிருந்து தோனி ஓய்வு பெறுவதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது. அதேநேரத்தில், சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் ஆலோசகராக அவர் புதிய பொறுப்பை ஏற்க உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

சென்னை அணியின் அடையாளமாகவே மாறிப்போன தோனி, வெற்றிகளையும் தோல்விகளையும் கடந்து, ரசிகர்களின் அன்பையும் நம்பிக்கையையும் சம்பாதித்துள்ளார். ஒரு அணியின் கேப்டனாக மட்டுமின்றி, அதன் அடையாளமாகவே மாறிய தோனி, இனி மைதானத்திற்கு வெளியே என்ற செய்தி அவரது ரசிகர்களுக்கு அதிர்ச்சியையும் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

ஒரு சாதாரண குடும்பத்தில் பிறந்து கிரிக்கெட்டராக மாறவேண்டும் என்ற கனவோடு சுற்றித்திரியும் இளைஞர்களுக்கு எல்லாம் தோனி மாத்திரமே நம்பிக்கை.. எத்தனை இன்னல்கள் வந்தாலும் இலக்கிற்காக ஓடவேண்டும் என்ற அவருடைய கதையும், கடைசிவரை வெற்றிக்காக போராட வேண்டும் என்ற அவரின் தன்னம்பிக்கையும் ஒவ்வொரு மனிதனுக்கும் சொல்லிக்கொடுக்க வேண்டிய பாடமாகும்! 20 ஆண்டுகள் எங்களை கொண்டாட வைத்து, எங்களுக்கு உத்வேகமாக இருந்ததற்கு நன்றி ஜாம்பவான் தோனி!