இங்கிலாந்து cricinfo
கிரிக்கெட்

PAK, BAN அணிகளை விட மோசம்.. 0 புள்ளியோடு பரிதாபமாக முடித்த ENG! தெ.ஆப்ரிக்கா அபார வெற்றி!

2025 சாம்பியன்ஸ் டிராபி போட்டியில் இங்கிலாந்தை 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வீழ்த்தி பிரமாண்ட வெற்றியை பதிவுசெய்தது தென்னாப்பிரிக்கா.

Rishan Vengai

2025 சாம்பியன்ஸ் டிராபி தொடரானது பரபரப்பான இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. பிப்ரவரி 19-ம் தேதி முதல் தொடங்கி நடைபெற்றுவரும் தொடரில் ‘இந்தியா, பாகிஸ்தான், ஆஸ்திரேலியா, இங்கிலாந்து, தென்னாப்பிரிக்கா, நியூசிலாந்து, வங்கதேசம் மற்றும் ஆப்கானிஸ்தான்’ என 8 அணிகள் கோப்பைக்காக பலப்பரீட்சை நடத்திவருகின்றன.

11 லீக் போட்டிகள் முடிவை பெற்றுள்ள நிலையில் 8 அணிகளிலிருந்து ‘இந்தியா, நியூசிலாந்து, ஆஸ்திரேலியா மற்றும் தென்னாப்பிரிக்கா’ என 4 அணிகள் அரையிறுதியை சீல் செய்துள்ளன.

தென்னாப்பிரிக்கா அபார வெற்றி..

இந்நிலையில் குரூப் பி பிரிவின் கடைசி லீக் போட்டியாக தென்னாப்பிரிக்கா மற்றும் இங்கிலாந்து அணிகள் இன்று மோதின. முதலில் பேட்டிங் செய்த இங்கிலாந்து அணி மோசமான பேட்டிங்கை வெளிப்படுத்தி 38.2 ஓவரிலேயே 179 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. அதிகபட்சமாக ஜோ ரூட் மட்டுமே 37 ரன்கள் எடுத்தார்.

180 ரன்கள் எடுத்தால் வெற்றி என களமிறங்கிய தென்னாப்பிரிக்கா அணியில், அதிரடி வீரர் கிளாசன் 64 ரன்கள் மற்றும் டஸ்ஸென் 72 ரன்கள் குவித்து அசத்த, 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் பிரமாண்ட வெற்றியை பதிவுசெய்தது தென்னாப்பிரிக்கா.

இந்த வெற்றியின் மூலம் குரூப் பி பிரிவின் புள்ளிப்பட்டியலில் ஆஸ்திரேலியாவை பின்னுக்குத் தள்ளி முதலிடத்தை பிடித்தது தென்னாப்பிரிக்கா.

0 புள்ளியோடு பரிதாபமாக வெளியேறிய ENG..

இங்கிலாந்து அணியை பொறுத்தவரையில் மூன்று லீக் போட்டிகளிலும் படுதோல்வியை சந்தித்து தொடரை விட்டே வெளியேறியுள்ளது. இதில் சோகம் என்னவென்றால் பாகிஸ்தான், வங்கதேச அணிகள் கூட 1 புள்ளியோடு வெளியேறியுள்ளன, ஆனால் இங்கிலாந்து அணி ஒரு புள்ளியை கூட பெறாமல் 0 புள்ளியுடன் பரிதாபமாக வெளியேறியுள்ளது.

நாளை நடைபெறும் தொடரின் கடைசி லீக் போட்டியில் இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன.