ஆகாஷ் தீப் - ட்ரெஸ்கோதிக் web
கிரிக்கெட்

’என் காலத்தில் செய்திருந்தால் நடப்பதே வேறு..’ - ஆகாஷ் தீப்பை எச்சரித்த இங்கிலாந்து பயிற்சியாளர்!

இங்கிலாந்து தொடக்க வீரர் பென் டக்கெட்டை வித்தியாசமான முறையில் ஆகாஷ் தீப் சென்ட்-ஆஃப் செய்தது இங்கிலாந்து பயிற்சியாளர் ட்ரெஸ்கோதிக்கை எரிச்சலடையச்செய்தது.

Rishan Vengai

இங்கிலாந்துக்கு சுற்றுப்பயணம் செய்திருக்கும் சுப்மன் கில் தலைமையிலான இந்திய அணி 5 டெஸ்ட் போட்டிகள் கொண்ட ஆண்டர்சன்-டெண்டுல்கர கோப்பைக்காக விளையாடிவருகிறது.

தொடர் முழுவதுமே இரண்டு அணி வீரர்களும் வார்த்தை மோதல்களில் ஈடுபட்டு வருவது, வித்தியாசமான முறையில் சென்ட்-ஆஃப் செய்வது என பல டிராமாக்களை உருவாக்கிவருகிறது.

கையில் அடிப்பட்டது போல ஜாக் கிராவ்லி நடித்தது, அதற்கு சுப்மன் கில் வசைபாடியது, கில்லின் செயலுக்கு பென் ஸ்டோக்ஸ் எச்சரிக்கும் வகையில் பேசியது, ஜடேஜா-கார்ஸ் மோதல், ஆகாஷ்தீப்பை சீண்டிய பென் டக்கெட், போட்டிக்கான டிராவிற்கு கைக்குலுக்க மறுத்தது, இந்தியா சுய சாதனைகளுக்காக விளையாடுகிறது என்ற விமர்சனம், பிரசித் கிருஷ்ணா- ஜோ ரூட் மோதல் என 5 டெஸ்ட் போட்டிகளும் அனல்பறக்கும் போட்டிகளாக இருந்துள்ளது.

இந்த சூழலில் நேற்றைய நாள் ஆட்டத்தில் இங்கிலாந்து தொடக்க வீரர் பென் டக்கெட்டை தோளில் கைப்போட்டு பேசி ஆகாஷ் தீப் வழியனுப்பி வைத்தது பல இங்கிலாந்து வீரர்களை எரிச்சலடையச்செய்துள்ளது.

என் காலத்தில் நடந்திருந்தால் நடப்பதே வேறு..

இங்கிலாந்து மற்றும் இந்தியாவிற்கு இடையேயான 5வது டெஸ்ட் போட்டி லண்டன் ஓவலில் நடந்துவருகிறது. முதலில் விளையாடிய இந்திய அணி 224 ரன்கள் அடித்தபிறகு, இங்கிலாந்து அணி ஒரு அற்புதமான பேட்டிங்கை வெளிப்படுத்தியது. தொடக்க வீரர்களாக களமிறங்கிய பென் டக்கெட் மற்றும் ஜாக் கிராவ்லி இருவரும விக்கெட்டையே விட்டுக்கொடுக்காமல் இந்திய வேகப்பந்துவீச்சாளர்களுக்கு தண்ணி காட்டினர்.

92 ரன்கள் வரை இங்கிலாந்து விக்கெட்டையே இழக்காத நிலையில், ஆகாஷ்தீப் வீசிய பந்தில் ரிவர்ஷ் ஷாட் ஆட முயற்சித்த பென் டெக்கெட் விக்கெட் கீப்பரிடம் கேட்ச் கொடுத்து அவுட்டானார். அப்போது விக்கெட்டை வீழ்த்தியபிறகு கத்திய ஆகாஷ் தீப், அவுட்டான டக்கெட்டின் தோள்மீது கைப்போட்டு பேசியபடி வழியனுப்பி வைத்தார்.

முந்தைய போட்டியில் ஆகாஷ் தீப் மற்றும் பென் டக்கெட்டுக்கு இடையே மோதல் இருந்த நிலையில், இந்த போட்டியின் தொடக்கத்தில் உன்னால் விக்கெட் வீழ்த்த முடியாது என்று பென் டக்கெட் ஆகாஷ் தீப்பை விமர்சித்திருந்தார். அதனைத்தொடர்ந்து இந்த சம்பவம் நடந்தது.

இந்த சூழலில் ஆகாஷ் தீப்பின் வித்தியாசனமான சென்ட்-ஆஃப் கண்டு எரிச்சலடைந்த துணை பயிற்சியாளர் ட்ரெஸ்கோதிக் ஆகாஷ் தீப்பை எச்சரித்தார்.

செய்தியாளர் சந்திப்பில் பேசிய அவர், “ஒரு பேட்ஸ்மேனை அவுட் செய்த பிறகு ஒரு பந்துவீச்சாளர் இப்படிச் செய்ததை நான் இதற்குமுன்பு பார்த்ததில்லை. இத்தொடரில் இரு அணி பவுலர்களும் அவ்வப்போது பேட்ஸ்மேன்களிடம் சில வார்த்தைகளை பகிர்ந்து கொண்டதை பார்த்தோம். ஆனால் இந்த செயல் அதிலிருந்து முற்றிலும் மாறுபட்டது. ஆகாஷ் தீப்பின் செயலுக்கு பென் அங்கே பெரிதாக எதுவும் செய்யவில்லை.

இதுவே என் காலத்தில் நடந்திருந்தால் வேறு மாதிரி நடந்திருக்கும், கவுண்டி கிரிக்கெட்டில் நடந்திருந்தால் கையை தட்டிவிட்டிருப்பார்கள், இல்லையென்றால் அதற்கு எதிராக வேறு ஏதேனும் செய்திருப்பார்கள். பவுலர் அந்த பாணியில் பேட்ஸ்மேனை வெளியேற்ற வேண்டிய அவசியமில்லை" என்று கூறினார்.

அதேபோல ஸ்கை ஸ்போர்ட்ஸ் தொகுப்பாளர் இயன் வார்டு ரிக்கி பாண்டிங்கிடம் ஆகாஷ் தீப்பின் செயல் குறித்து, ”இப்படி ஒரு பவுலர் உங்களை இந்தமுறையில் வெளியேற்றியிருந்தால் என்ன செய்திருப்பீர்கள். பதிலை உங்களிடமே விட்டுவிடுகிறேன், நீங்கள் பஞ்ச் செய்திருப்பீர்கள் தானே?” என கேட்க, பாண்டிங்கும் ’ஆமாம்’ என பதிலளித்தார்.