Jos Buttler
Jos Buttler twitter
கிரிக்கெட்

4 போட்டியில் வெறும் 87 ரன்கள்! பேட்டிங்கில் தொடர்ந்து சொதப்பும் இங்கிலாந்து கேப்டன் ஜோஸ் பட்லர்

Prakash J

13வது ஆடவர் ஒருநாள் உலகக்கோப்பை தொடர், இந்தியாவில் பல்வேறு மாநிலங்களில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்த நிலையில், தொடரின் 20வது லீக் போட்டி, மும்பை வான்கடே மைதானத்தில் நடைபெற்றது. இதில் நடப்பு சாம்பியன் இங்கிலாந்து அணியும் தென்னாப்ரிக்காவும் பலப்பரீட்சை நடத்தின.

eng vs sa

முன்னதாக டாஸ் ஜெயித்த இங்கிலாந்து அணி, தென்னாப்ரிக்காவை பேட் செய்ய பணித்தது. இதையடுத்து அவ்வணியின் தொடக்க பேட்டரான டி.காக் இந்தப் போட்டியிலும் ஏமாற்றினாலும், மற்றொரு தொடக்க பேட்டரான ஹெண்ட்ரிக்ஸ் நல்ல அடித்தளத்தை ஏற்படுத்திக் கொடுத்தார். அவர் 75 பந்துகளில் 85 ரன்கள் எடுத்தார். அவருக்குப் பின் களமிறங்கிய துஷேன் (60 ரன்கள்), மார்க் ரம் (42), கிளாஸன் (109), ஜேன்சன் (75) ஆகியோர் நல்ல பங்களிப்பை அளிக்க, அந்த அணி நடப்புத் தொடரில் 2வது முறையாக பெரிய ஸ்கோரை எடுத்தது. இறுதியில் அந்த அணி 50 ஓவர்களில் 7 விக்கெட் இழப்புக்கு 399 ரன்களைக் குவித்தது.

இதையும் படிக்க: AUS Vs PAK: ஒரே போட்டியில் ஆஸி. படைத்த பல சாதனைகள்... ருத்ரதாண்டவம் ஆடிய டேவிட் வார்னர்!

பின்னர், மிகக் கடினமான இலக்குடன் களமிறங்கிய இங்கிலாந்து அணியில், ஆரம்பம் முதலே வீரர்கள் யாரும் நிலைத்து நின்று விளையாடாததால், அந்த அணி விரைவிலேயே நிலைகுலைந்து தோல்வியைத் தழுவியது. அந்த 22 ஓவர்களில் 170 ரன்களுக்கு அனைத்து விக்கெட்களையும் இழந்தது. இதில் 15 ரன்கள் எக்ஸ்ட்ராக வந்தவை ஆகும். இதையடுத்து, அந்த 229 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியைத் தழுவியது.

Jos Buttler

மேலும் இதுவரை 4 போட்டிகளில் விளையாடியுள்ள இங்கிலாந்து அணி, 1இல் மட்டுமே வெற்றிபெற்றிருப்பதுடன், புள்ளிப் பட்டியலிலும் 9வது இடத்துக்குத் தள்ளப்பட்டுள்ளது. இதனால் அவ்வணியின் கேப்டன் மீது அதிக விமர்சனங்கள் வைக்கப்பட்டு வருகிறது. அதிலும், அவருடைய பேட்டிங் குறித்து கடுமையாக விமர்சிக்கப்படுகிறது.

இதையும் படிக்க: உடற்பயிற்சி வீடியோக்களால் பிரபலமான நியூசி. பெண் பாடி பில்டர் மர்ம மரணம்! சோகத்தில் ஃபாலோவர்ஸ்!

இதுவரை 4 போட்டிகளில் விளையாடியுள்ள அவர், நியூசிலாந்துக்கு எதிரான முதல் போட்டியில் மட்டுமே அதிகபட்சமாக 43 ரன்கள் எடுத்துள்ளார். அதற்குப் பிறகு விளையாண்ட போட்டிகளில் ஆப்கானிஸ்தானுக்கு எதிராக 9 ரன்களும், வங்கதேசத்துக்கு எதிராக 20 ரன்களும், தென்னாப்ரிக்காவுக்கு எதிராக 15 ரன்களும் (இன்றைய போட்டியில் மட்டுமே எடுத்துள்ளார். இதுவரை அவர், பெரிதாக சோபிக்கவில்லை. அதாவது ஓர் அரைசதத்தைக்கூட அவர் பதிவு செய்யவில்லை. மொத்தமாக அவர் இதுவரை 87 ரன்களே எடுத்துள்ளார். இதனாலேயே அவர்மீது அதிகம் விமர்சனம் வைக்கப்படுகிறது.

Jos Buttler

மிடில் ஆர்டரில் அதிகம் கவனம் செலுத்த வேண்டிய கேப்டனே, பொறுப்பில்லாமல் செயல்படுவதுதான் விமர்சனத்தை எழுப்பியுள்ளது. இதனாலேயே அவ்வணி தொடக்கம் முதலே தடுமாறி வருவதாக விமர்சனங்கள் வைக்கப்படுகிறது. இனிவரும் போட்டிகளிலாவது அவர் கூடுதலாக பேட்டிங்கில் கவனம் செலுத்தி, அணிக்கு நல்ல பங்களிப்பை அளிக்க வேண்டும் என்பதே ஜாம்பவான்களின் ஆலோசனையாக உள்ளது.

இதையும் படிக்க: இதுவா நாகரீகம்! வங்கதேச ரசிகரை அவமானப்படுத்திய இந்திய ரசிகர்கள்..ரோகித் கொடுத்த எதிர்பாராத சர்ப்ரைஸ்