Ellyse Perry
Ellyse Perry pt
கிரிக்கெட்

WPL 2024 | பெங்களூரு அணியின் கனவை நனவாக்கிய ஆஸ்திரேலிய பெண்! யார் இந்த எல்லிஸ் பெர்ரி..? #RCB

யுவபுருஷ்

டெல்லி - பெங்களூரு அணிகளுக்கு இடையேயான மகளிர் பிரீமியல் லீக்கின் இறுதிப்போட்டி டெல்லி அருண் ஜெட்லி மைதானத்தில் நேற்று நடைபெற்றது. இதில், முதலில் பேட்டிங் செய்த டெல்லி அணி 18 ஓவர்களில் 113 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. இரண்டாவதாக பேட்டிங்கை தொடங்கிய பெங்களூரு அணியில் 3வதாக களமிறங்கிய ஆஸ்திரேலிய வீராங்கனை எல்லிஸ் பெர்ரி, 4 ஃபோர்களை பறக்கவிட்டு 37 பந்துகளில் 35 ரன்களை எடுத்து அணிக்கு வெற்றியை பெற்றுத்தந்தார்.

நடப்பு தொடரில் பெங்களூரு அணிக்கான தனது ஆக்ரோஷமான ஆட்டத்தை வெளிப்படுத்தி வந்த எல்லி பெர்ரி 9 இன்னிங்ஸ்களில் 2 அரைசதங்களை விளாசியுள்ளார். மொத்தமாக 347 ரன்களை குவித்துள்ளார். இதன் மூலம் ஆரஞ்சு தொப்பியையும் கைப்பற்றியுள்ளார் எல்லிஸ். நேற்றைய போட்டியிலும் 2 ஓவர்களில் பந்து வீசிய எல்லிஸ், 14 ரன்களை மட்டுமே விட்டுக்கொடுத்தார். கடினமான நேரத்தில் தனது ஆட்டத்தால் வெற்றியை பெற்றுத்தந்து RCB-ன் 16 ஆண்டுகால ‘ஈ சாலா கப் நமதே’ கனவை நிறைவேற்றியுள்ளார் எல்லிஸ் பெர்ரி.

ஒருநாள் மற்றும் டி20 போட்டிகளில் கடந்த 2008ம் ஆண்டு முதல் விளையாடி ஆல் ரவுண்டராக கலக்கி வரும் எல்லிஸ், குறிப்பாக வாரியர்ஸ் அணிக்கு எதிராக கடந்த 4ம் தேதி நடைபெற்ற போட்டியில் 37 பந்துகளில் 4 சிக்ஸர், 4 ஃபோர் என்று அனல் பறக்க விளையாடி 58 ரன்களை குவித்தார். அதில், போட்டியில் வெல்பவருக்கு பரிசாக வழங்க இருந்த காரின் கண்ணாடியையும் தனது பந்தால் முத்தமிட்டு உடைத்தெறிந்தார் எல்லிஸ். இதில் குறிப்பிட வேண்டிய விஷயமே, இறுதிப்போட்டிக்கு பெங்களூரு அணி முன்னேறியபோது, உடைந்த தங்களது காரின் கண்ணாடி துகள்களை ஃப்ரேம் போட்டு எல்லிஸ் பெர்ரிக்கு பரிசாக வழங்கியது டாடா மோட்டார்ஸ் நிறுவனம்.

கடந்த தொடரில் எலிமினேட்டர் தொடரில் கூட நுழையாத ஆர்.சி.பி, இந்த முறை கோப்பையை வென்றுள்ளதென்றால் அதற்கு முக்கிய பங்களிப்பை தந்துள்ளார் எல்லிஸ். ஆம், எப்போதெல்லாம் அணி தொய்வை நோக்கி செல்கிறதோ அப்போதெல்லாம் பேட்டிங், பௌலிங் மற்றும் ஃபீல்டிங் என ஆல்ரவுண்டராக கலக்கி அணியை வெற்றிப்பாதைக்கு அழைத்து வந்துள்ளார் எல்லிஸ். பெங்களூரு தொடர்ந்து டெல்லி சாலைகள் வரை வெற்றிக்கு நன்றியையும், வாழ்த்துகளையும் பகிர்ந்து வரும் ரசிகர்கள் மனதில் எல்லிஸ் ஒரு முக்கிய இடத்தை பிடித்துவிட்டார் என்பதில் சந்தேகமில்லை.