புவனேஷ்வர் குமார் pti
கிரிக்கெட்

2 போட்டியில் ரன் மழை.. புவனேஷ்வர் குமார் அணிக்கு தேவையா..? முன்னாள் வீரர் ஓபன் பதில்!

4 ஆண்டுகளுக்கு பிறகு இந்திய அணிக்கு திரும்பிய புவனேஷ்வர் குமார் 2 போட்டிகளில் ரன்களை வாரி வழங்கியுள்ளார்.

Rishan Vengai

புவனேஷ்வர் குமாரின் பந்துவீச்சு திறன் குறைந்ததற்கு மனதளவிலான தளர்ச்சி காரணம் என அஸ்வின் கூறியுள்ளார். அவர் மீண்டும் சிறப்பாக கம்பேக் கொடுக்க, ஒரு நல்ல போட்டி போதுமானது எனவும், அவரது திறமையை மீண்டும் காணலாம் என நம்பிக்கை தெரிவித்தார்.

இந்திய அணியின் பேட்டிங் அசுரபலமாக ஜொலித்துவரும் நிலையில், பந்துவீச்சோ படுமோசமாக இருந்துவருகிறது. இதனால் ஐபிஎல்லில் ஆர்சிபிக்கு அணிக்காக சிறப்பாக செயல்பட்டு 2 ஐபிஎல் கோப்பைகள் வென்றுகொடுத்த புவனேஷ்வர் குமாரை, மீண்டும் இந்திய அணிக்குள் கொண்டுவந்துள்ளது பிசிசிஐ.

bhuvaneshwar kumar

2021க்கு பிறகு கிட்டத்தட்ட ஆயிரம் நாட்களுக்கு பிறகு கம்பேக் கொடுத்திருக்கும் புவனேஷ்வர் குமார், 2 டி20 போட்டிகளில் 99 ரன்களை விட்டுக்கொடுத்து ஒரேயொரு விக்கெட்டை மட்டுமே வீழ்த்தியுள்ளார். அவருடைய பந்துவீச்சு வேகம் 130-க்கு குறைந்திருப்பதும், நோ பால்களை வீசுவதும், தவறான லைன்களை வீசுவதும் பெரிய பிரச்னையாக இருக்கிறது. விரைவில் அவர் கம்பேக் கொடுக்க வேண்டும் என ரசிகர்கள் விரும்பினாலும், சிலர் புவனேஷ்வர் குமாரை நீக்கிவிட்டு வருண் சக்கரவர்த்தியை அணியில் சேர்க்கவேண்டும் என கோரிக்கை வைத்துவருகின்றனர்.

இந்தசூழலில் தான் புவனேஷ்குமார் சரியாக பந்துவீசாதது குறித்து அஸ்வின் ஓபனாக பேசியுள்ளார். அவருடைய யூடியூப் சேனலில் பேசியிருக்கும் அவர், “புவனேஷ்வர் குமார் அவருடைய கம்பேக்கிற்கு தகுதியானவர். ஆனால் ஆயிரம் நாட்களுக்கு பிறகு கம்பேக் கொடுக்கும்போது நீங்கள் மனதளவில் திடமாக இருக்கவேண்டும்.

ஆர்சிபிக்கு சிறிய மைதானத்தில் அவர் செய்தது மிகவும் கடினமான வேலை. அதையே தான் தற்போதும் செய்ய நினைக்கிறார். துரதிருஷ்டவசமாக நல்லபந்துகளுக்கான ரிசல்ட் அவர் பக்கம் போகவில்லை.

அனைத்தும் சரியாகதான் செய்கிறோம் ஆனால் ரிசல்ட் கிடைக்கவில்லை எனும்போது, அவர் மனதளவில் தளர்வாகி தன்னை தற்காத்துக்கொள்ள நினைக்கிறார். அதனால் பந்தின் லைன்களை தவறாக வீசுகிறார்.

இதை அனைத்தையும் மீறி அவர் திரும்பிவர, அவருக்கு ஒரு நல்ல போட்டி அமைந்துவிட்டால் போதும். புவனேஷ்வர் குமாரின் சிறந்த பந்துவீச்சை நாம் பார்க்கலாம்” என பேசியுள்ளார்.