இந்திய கிரிக்கெட் வீரர் மகேந்திர சிங் தோனி ட்ரோன் பைலட் லைசன்ஸ் பெற்று சத்தமில்லாமல் மற்றொரு சாதனையை படைத்துள்ளார்.
இந்திய அணியின் கிரிக்கெட் வரலாற்றில் 3 ஐசிசி கோப்பைகளை வென்ற ஒரே இந்திய கேப்டனாக வலம்வருபவர் மகேந்திர சிங் தோனி. கிரிக்கெட்டை கடந்து பைக் மற்றும் கார், ராணுவம், விவசாயம் என பல்வேறு விசயங்கள் மீது தோனி ஆர்வம் செலுத்திவருகிறார்.
அந்தவகையில் கடந்த 2011-ம் ஆண்டு இந்திய ராணுவத்தின் மீது மிகுந்த மரியாதை கொண்டிருக்கும் தோனிக்கு, பிராந்திய ராணுவத்தின் பாராசூட் ரெஜிமென்ட்டில் (106 பாரா டிஏ பட்டாலியன்) லெப்டினன்ட் கர்னல் என்ற கௌரவப் பதவி வழங்கப்பட்டது. தனது அர்ப்பணிப்பை வெளிப்படுத்தும் விதமாக, 2019-ம் ஆண்டில் ஜம்மு காஷ்மீரில் உள்ள தனது பட்டாலியனுடன் 15 நாள் ரோந்து மற்றும் பாதுகாப்புப் பணிகளில் பணியாற்றினார்.
அதைத்தொடர்ந்து சி-130ஜே சூப்பர் ஹெர்குலஸ் விமானத்தில் இருந்து ஐந்து பாராசூட் தாவல்களை முடித்த பிறகு, பயிற்சி பெற்ற பாராசூட்டராக மாறினார் தோனி.
இந்த சூழலில் தற்போது கருடா ஏரோஸ்பேஸிடமிருந்து முறையான பயிற்சி பெற்ற ட்ரோன் விமானியாக உரிமம் பெற்றுள்ளார் தோனி.
அக்டோபர் 8-ம் தேதியான இன்று, ட்ரோன் பைலட் உரிமத்தை அதிகாரப்பூர்வமாக பெற்றதாக சமூகவலைதள பக்கத்தில் தோனி அறிவித்தார். இந்தியாவின் முன்னணி ட்ரோன் உற்பத்தியாளர்களில் ஒன்றான கருடா ஏரோஸ்பேஸ், அனுபவம் வாய்ந்த பயிற்றுனர்களின் மேற்பார்வையின் கீழ் 2,500க்கும் மேற்பட்ட ஆர்வமுள்ள விமானிகளுக்கு பயிற்சி அளித்துள்ளது. அதில் பங்கேற்று முறையான பயிற்சி பெற்ற எம் எஸ் தோனி ட்ரோன் பைலட் உரிமத்தை அதிகாரப்பூர்வமாக பெற்றுள்ளார்.
தோனியின் சமீபத்திய சாதனை குறித்து கருடா ஏரோஸ்பேஸின் நிறுவனர் மற்றும் தலைமை நிர்வாக அதிகாரி அக்னேஷ்வர் ஜெயபிரகாஷ் எக்ஸ்தளத்தில், தோனி மிகவும் விரைவாக கற்றுக்கொண்டு உரிமம் பெற்றதாக பெருமையுடன் கூறியுள்ளார்.