தோனி தனது ஜெர்சி எண் 7-ஐ 8-ஆக மாற்றியிருப்பது ரசிகர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தோனி தனது சமூக வலைதளத்தில் இதற்கான காரணத்தை விரைவில் அறிவிப்பதாக தெரிவித்துள்ளார். இதனால் 'Thala For a Reason' என்ற பிரபலமான வாசகம் இனி கிடையாதா என ரசிகர்கள் குழப்பத்தில் உள்ளனர்.
உலக விளையாட்டில் சில எண்கள் ஒரு வீரரின் அடையாளமாகவே மாறிவிடும், அந்தவகையில் கால்பந்தில் நம்பர் 7, நம்பர் 10 எப்படி ரொனால்டோ மற்றும் மெஸ்ஸியின் ஐகானிக் எண்களாக மாறிவிட்டதோ, அப்படியே கிரிக்கெட்டிலும் நம்பர் 7, நம்பர் 10 ஜெர்ஸி எண்கள் என்றால் சச்சின், தோனி என்ற அடையாளத்தை குறிக்கின்றன.
தோனி என்றால் 7, ஏழு என்றால் தோனி என ரசிகர்கள் கொண்டாடிவரும் நிலையில், சமீபத்தில் 7 ரன்கள் வித்தியாசத்திலோ, 7 பந்துகள் வித்தியாசத்திலோ இந்தியா வென்றால் கூட ‘Thala For a Reason' என அஸ்வின் போன்ற கிரிக்கெட்டர்கள் தொடங்கி, அனைத்து ஐபிஎல் பிரான்சைஸ் அணிகள் வரை தோனியின் நம்பர் 7-க்கு என பெரிய ரசிகர் பட்டாளமே உண்டு.
இந்தசூழலில் தான் இனிமேல் நம்பர் 7 ஜெர்சியை பயன்படுத்தபோவதில்லை என்றும், நம்பர் 8-க்கு மாறுவதாகவும் தோனியின் அதிகாரப்பூர்வ சமூக வலைதள பக்கத்தில் சொல்லப்பட்டுள்ளது. தோனியின் ஃபேஸ்புக் பக்கத்தில் உள்ள பதிவில், ”சில எண்கள் உங்களுடன் நீடித்து இருக்கும், அப்படியான எண்களில் ஒன்று தான் 7. ஆனால் இன்று.. 8 ஆம் எண்ணிற்கு மாறுகிறேன். இதற்கான காரணத்தை விரைவில் நீங்கள் அறிவீர்கள்” என்று பதிவிடப்பட்டுள்ளது. மேலும் அதனுடன் நம்பர் 7-லிருந்து 8-க்கு மாற்றப்பட்ட ஜெர்சியின் வீடியோவும் இணைக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் எதற்காக தோனி இந்த முடிவை எடுத்தார்..? இனிமேல் ‘Thala For a Reason' கிடையாதா என்றெல்லாம் ரசிகர்களிடையே குழப்பம் ஏற்பட்டுள்ளது. அதேவேளையில் தோனியின் முடிவுக்கான காரணங்களாக சில விசயங்கள் பேசப்பட்டு வருகின்றன.
அந்தவகையில், தோனி பதிவிட்டிருக்கும் இந்த வீடியோ வணிக விளம்பரத்திற்கானதாக இருக்கலாம் என்று சொல்லப்படுகிறது. அதேவேளையில் தோனி தற்போது மாற்றியிருக்கும் நம்பர் 8-ஆனது ஜடேஜாவின் ஜெர்சி நம்பராகும், அதனால் தோனி ஜடேஜாவின் வெற்றிடத்தை நிரப்புவதற்காக அதை செய்கிறாரா? என்றும் ரசிகர்கள் பதிவிட்டு வருகின்றனர்.
No.7 ஜெர்சியை பொறுத்தவரையில், தோனி தன்னுடைய பிறந்த நாள் மற்றும் பிறந்த மாதத்தை பிரதிபலிக்கும் விதமாகவே அதை தேர்வுசெய்தார் என ஒருமுறை கூறியிருந்தார். பொதுவாக நம்பர் 7-ஐ பலரும் நியூட்ரல் எண் என சொல்வார்கள். அது நமக்கு ராசியாக இல்லை என்றாலும் எதிராக வேலை செய்யாது என சொல்வார்கள். ஆனால் எனக்கு அது மாதிரியான மூடநம்பிக்கை எல்லாம் கிடையாது. இருந்தாலும் அந்த எண் எனக்கு மிகவும் பிடித்தமான எண்” என தோனி விளக்கம் கொடுத்திருந்தார்.
கடந்த 2023-ஆம் ஆண்டு தோனி இந்திய கிரிக்கெட்டிற்கு ஆற்றிய பங்களிப்பிற்காக அவரின் ஜெர்சி எண் 7-ஐ பிசிசிஐ ஓய்வுபெற செய்ய முடிவுசெய்தது. சச்சின் டெண்டுல்கரின் ஜெர்சி எண் ‘10’-க்கு பிறகு, பிசிசிஐ ஓய்வளித்த இரண்டாவது எண் தோனியின் 7-ஆகும். ஆனாலும் தொடர்ந்து அவர் ஐபிஎல் போட்டிகளில் எண் 7-ஐ பயன்படுத்தியே வந்தார். தற்போது தோனி நம்பர் 7-ஐ 8ஆக மாற்றுவதற்கு பல ரசிகர்கள் மறுப்பு தெரிவித்து வருகின்றனர். நம்பர் 7 வெறும் எண் அல்ல என்றும், அது ஒரு எமோசன் என்றும் தோனியின் ரசிகர்கள் பதிவிட்டு வருகின்றனர். தோனி எதற்காக No.7-லிருந்து 8-க்கு மாறுகிறார் என்பது விரைவில் தெரியவரும்..