தேவ்தத் படிக்கல் bcci
கிரிக்கெட்

இலங்கை மண்ணில் சதம்.. 21ஆம் நூற்றாண்டில் படிக்கல் செய்த மாபெரும் சாதனை!

இலங்கைக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் சதமடித்து சாதனை படைத்தார் இந்திய வீரர் தேவ்தத் படிக்கல்..

Rishan Vengai

இலங்கைக்கு எதிரான காலே டெஸ்டில் கில் தலைமையிலான இந்திய அணி, 600வது டெஸ்ட் ஆடி வரலாற்று மைல்கல்லை எட்டியது. ஜெய்ஸ்வால் ரன்அவுட் ஆன பின்னர், கேஎல் ராகுல்–படிக்கல் ஜோடி 100 ரன்கள் கூட்டணி அமைத்தது. ராகுல் 77 ரன்களுக்கு ரிட்டயர்டு ஹர்ட் ஆனார். 11 பவுண்டரி, 1 சிக்சருடன் சதமடித்த இடதுகை படிக்கல், கங்குலிக்கு பிறகு புதிய சாதனை படைத்தார்.

இலங்கைக்கு சுற்றுப்பயணம் செய்துள்ள சுப்மன் கில் தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி, 2 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்றுள்ளது. இரண்டு அணிகளுக்கும் இடையேயான முதல் டெஸ்ட் போட்டி இந்தியாவின் சுதந்திர தினமான இன்றைய நாளில் இலங்கையில் உள்ள காலே மைதானத்தில் நடைபெற்றுவருகிறது.

இலங்கைக்கு எதிரான இன்றைய போட்டியில் களமிறங்குவதன் மூலம் டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் 600வது டெஸ்ட் போட்டியில் விளையாடும் 3வது உலக அணியாக இந்தியா வரலாற்று சாதனை படைத்துள்ளது. 

ind vs sl

பரபரப்பாக தொடங்கிய போட்டியில் டாஸ் வென்ற இந்தியா பேட்டிங்கை தேர்வுசெய்தது. இந்திய அணியில் ஸ்பின்னர் மனவ் சுதர் அறிமுக வாய்ப்பாக இடம்பிடித்தார். முதலில் பேட்டிங் செய்த இந்திய அணியில் ஜெஸ்வால் 3வது முறையாக டெஸ்ட் போட்டியில் ரன்அவுட் மூலம் வெளியேறினார். 32 ரன்னுக்கு ஜெய்ஸ்வால் வெளியேற, 2வது விக்கெட்டுக்கு ஜோடி சேர்ந்த கேஎல் ராகுல் மற்றும் தேவ்தத் படிக்கல் இருவரும் 100 ரன்கள் பார்ட்னர்ஷிப் போட்டு அசத்தினர்.

படிக்கல்

அரைசதமடித்த கேஎல் ராகுல் ரிட்டயர்டு ஹர்ட் மூலம் 77 ரன்கள் அடித்திருந்தபோது வெளியேறினார். தொடர்ந்து அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்திய தேவ்தத் படிக்கல், 11 பவுண்டரிகள் 1 சிக்சர்களுடன் சதமடித்து அசத்தினார்.

2002ஆம் ஆண்டு ஜிம்பாப்வேவுக்கு எதிராக கங்குலி சதமடித்த பிறகு, 21ஆம் நூற்றாண்டில் இந்தியாவிற்கு 3ஆம் வரிசை வீரராக களமிறங்கி டெஸ்ட் சதமடிக்கும் 2வது இடதுகை வீரராக படிக்கல் சாதனை படைத்தார். சமீபத்திய அப்டேட்டின் படி 2 விக்கெட்டுகளை இழந்துள்ள இந்திய அணி 272 ரன்கள் அடித்துள்ளது, படிக்கல் 121 ரன்களுடனும், பண்ட் 22 ரன்களுடனும் பேட்டிங் செய்து வருகின்றனர்.