19வது ஐபிஎல் சீசனில் டெல்லி கேபிடல்ஸ், அருண் ஜெட்லி மைதானத்தில் ராஜஸ்தான் ராயல்ஸை 5 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வீழ்த்தி பரபரப்பான வெற்றி பெற்றது. 193 ரன்களை 19.2 ஓவரில் துரத்தி அடித்த இந்த வெற்றி, பஞ்சாப் கிங்ஸ், சிஎஸ்கே, டெல்லி, கொல்கத்தா, ராஜஸ்தான் ஆகிய 5 அணிகளுக்கும் பிளேஆஃப் வாய்ப்பை திறந்து, புள்ளிப்பட்டியலில் பரமபத விளையாட்டை உருவாக்கியுள்ளது.
19வது ஐபிஎல் சீசனானது கடந்த மார்ச் 28ஆம் தேதி முதல் தொடங்கி பரபரப்பாக நடைபெற்றுவருகிறது. தொடக்கத்தில் பஞ்சாப் கிங்ஸ் அணியும், ராஜஸ்தான் ராயல்ஸ் அணியும் மிரட்டலான தொடக்கத்தை பெற்று புள்ளிப்பட்டியலில் ஆதிக்கம் செலுத்தின. ஆனால் போகப்போக மற்ற அணிகள் தங்களுடைய ஃபார்மிற்கு திரும்ப புள்ளிப்பட்டியலில் பரமபத விளையாட்டு நடந்துவருகிறது.
இந்நிலையில் பஞ்சாப் கிங்ஸை ஆர்சிபி அணி தோற்கடித்த பிறகு டாப் 4 இடத்திற்கான பிளேஆஃப் கதவு பரவலான வாய்ப்பை திறந்துவிட்டது. இந்தசூழலில் தான் டெல்லி கேபிடல்ஸுக்கு எதிரான போட்டியில் வெற்றிபெற்றால் பிளேஆஃப் வாய்ப்பை உறுதிசெய்துவிட முடியும் என்ற பிரகாசமான வாய்ப்பு ராஜஸ்தானுக்கு இருந்தது.
டெல்லி கேபிடல்ஸ் மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸுக்கு இடையேயான போட்டி டெல்லி அருண் ஜெட்லி மைதானத்தில் நடைபெற்றது. முதலில் பேட்டிங் செய்த ராஜஸ்தான் அணி 20 ஓவரில் 193 ரன்கள் சேர்த்தது. அதனைத்தொடர்ந்து விளையாடிய டெல்லி கேபிடல்ஸ் அணி 19.2 ஓவரில் இலக்கை எட்டி 5 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் அசத்தல் வெற்றியை பதிவுசெய்தது.
ராஜஸ்தானுக்கு எதிரான டெல்லி அணியின் வெற்றி பஞ்சாப் கிங்ஸ், சிஎஸ்கே, டெல்லி, கொல்கத்தா மற்றும் ராஜஸ்தான் முதலிய 5 அணிகளுக்கான பிளேஆஃப் கதவை திறந்துவிட்டுள்ளது. இந்தசூழலில் அடுத்தடுத்த போட்டிகள் அனைத்தும் அதிக கவனம் ஈர்க்கும் போட்டிகளாக மாறியுள்ளன.