delhi team x
கிரிக்கெட்

விராட் கோலி அவுட்.. ஆனால் இன்னிங்ஸ் வெற்றிபெற்ற டெல்லி அணி! வேற லெவல் கம்பேக்!

12 வருடங்களுக்கு பிறகு ரஞ்சி போட்டியில் விராட் கோலி விளையாடிய நிலையில், அவர் 6 ரன்னில் அவுட்டான பிறகு ரசிகர்கள் மைதானத்தை விட்டு வெளியேறினர்.

Rishan Vengai

பிசிசிஐ புதிய உத்தரவின்படி ரோகித் சர்மா மற்றும் விராட் கோலி முதலிய அனைத்து இந்திய வீரர்களும் ரஞ்சிப் போட்டியில் பங்கேற்று விளையாடுகின்றனர்.

அந்தவகையில் 12 வருடங்களுக்கு பிறகு விராட் கோலி டெல்லி அணிக்கான ரஞ்சிப்போட்டியில் பங்கேற்று விளையாடினார். உள்நாட்டு கிரிக்கெட்டில் விராட் கோலியை காண மைதானத்தில் ரசிகர்கள் கூட்டம் நிரம்பி வழிந்தது. கூட்ட நெரிசலில் சிக்க பலபேருக்கு காயமும் ஏற்பட்டது.

விராட் கோலி போல்ட்

தங்கள் ஹீரோவை பார்க்க எதிர்ப்பார்த்து காத்திருந்த ரசிகர்களுக்கு 6 ரன்னில் போல்டாகி வெளியேறிய விராட் கோலி அதிர்ச்சி கொடுத்தார். அவர் அவுட்டாகி வெளியேறியபோதே விரக்தியடைந்த ரசிகர்கள் மைதானத்தை விட்டு வெளியேற தொடங்கினர்.

இந்நிலையில், ரசிகர்கள் அதிகம் இல்லாமல் காலியான மைதானத்தோடு இன்று போட்டி தொடங்கிய நிலையில், விராட் கோலியின் டெல்லி அணி தரமான கம்பேக் கொடுத்து இன்னிங்ஸ் வெற்றியை பெற்றுள்ளது.

114 ரன்னுக்கு சுருண்ட ரயில்வே அணி.. டெல்லி இன்னிங்ஸ் வெற்றி!

ரயில்வே மற்றும் டெல்லி அணிகளுக்கு இடையேயான ரஞ்சிப் போட்டியில் முதலில் விளையாடிய ரயில்வே அணி முதல் இன்னிங்ஸில் 241 ரன்கள் சேர்த்தது.

அதனைத்தொடர்ந்து விளையாடிய டெல்லி அணியில் விராட் கோலி 6 ரன்னிலும், மற்ற டாப் ஆர்டர்கள் 10, 30, 32 ரன்னிலும் அடுத்தடுத்து வெளியேற டெல்லி தடுமாறியது. ஆனால் அதற்குபிறகு சிறப்பாக விளையாடிய கேப்டன் ஆயுஸ் பதோனி 99 ரன்கள், சுமித் மதூர் 86 ரன்கள் என அடித்து அசத்த டெல்லி முதல் இன்னிங்ஸில் 374 ரன்கள் குவித்தது.

133 ரன்கள் பின்தங்கிய நிலையில் இரண்டாவது இன்னிங்ஸில் விளையாடிய ரயில்வே அணி 114 ரன்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து சுருண்டது. அபாரமாக பந்துவீசிய ஷிவம் சர்மா 5 விக்கெட்டுகளை கைப்பற்றி அசத்தினார்.

இதன் மூலம் ஒரு இன்னிங்ஸ் மற்றும் 19 ரன்கள் வித்தியாசத்தில் டெல்லி அணி அபார வெற்றியை பதிவுசெய்தது.