உலகின் மிகப்பெரிய கிரிக்கெட் தொடர்களில் ஒன்றாக இருக்கும் ஐபிஎல் கடந்த 2008-ம் பிசிசிஐ-ஆல் அறிமுகப்படுத்தப்பட்டு இருந்தாலும், இதன் உருவாக்கத்திலும், நடைமுறைப்படுத்தியதிலும் முக்கியப்பங்காற்றியவர் லலித் மோடி. மேலும், ஐபிஎல் தொடரின் முதல் ஆணையரும் இவர்தான். இந்தசூழலில் தான், 2010 ஆண்டு நிதி முறைகேடுகள், டெண்டர் முறைகேடுகள் உள்ளிட்ட பல குற்றச்சாட்டுகள் காரணமாக ஐபிஎல் ஆணையர் பதவியில் இருந்து பிசிசிஐ இவரை இடைநீக்கம் செய்தது. பின்னர் நீண்டகால ஒழுங்கு நடவடிக்கைக்குப் பிறகு, 2013ஆம் ஆண்டு பிசிசிஐ அவருக்கு ஆயுள் தடை (life ban) விதித்தது. இதன் மூலம் இந்திய கிரிக்கெட் நிர்வாகத்தில் அவரது பங்கு முற்றிலுமாக முடிவுக்கு வந்தது.
இதற்கிடையில், பிசிசிஐ நடவடிக்கை மற்றும் அமலாக்கத்துறை விசாரணைகளுக்கு மத்தியில், 2010ஆம் ஆண்டு லலித் மோடி லண்டனுக்கு சென்றார். அதன் பிறகு அவர் இந்தியா திரும்பவில்லை. இந்தசூழலில் தான், இன்று தனியார் செய்தி ஊடகம் ஒன்றிற்கு பேட்டியளித்துள்ள அவர், தான் நிரந்தரமாக கிரிக்கெட் உலகை விட்டு விலகியதில், நிழலுலக தாதா தாவூத் இப்ராஹிம் மற்றும் அவனது 'டி-கம்பெனி' நெட்வொர்க் கொடுத்த கொலை மிரட்டல்களே காரணம் என்ற பரபரப்பு குற்றச்சாட்டு ஒன்றை முன்வைத்துள்ளார்.
இதுகுறித்து அவர் அளித்த பேட்டியில், ஐபிஎல் தொடங்கப்பட்ட ஆரம்ப காலத்திலேயே நிழலுலக தாதா தாவூத் இப்ராஹிமின் D-Company தரப்பு, ஒரு அணியில் பங்குகளைப் பெற்று அதன் மீது செல்வாக்கு செலுத்த முயன்றதாக அவர் தெரிவித்துள்ளார். இந்த முயற்சிக்கு தாம் அனுமதி அளிக்க மறுத்ததாகவும், அதன்பிறகு தனது குடும்பத்தினருக்கும் தனக்கும் பல்வேறு அச்சுறுத்தல்கள் வந்ததாகவும் லலித் மோடி கூறியுள்ளார். மேலும், ஐபிஎல்லை சுற்றி செயல்பட்டு வந்த சட்டவிரோத சூதாட்ட மாஃபியாக்களுக்கு எதிராக தான் எடுத்த நடவடிக்கைகளும், அதை கண்டுகொள்ளாமல் இருப்பதற்கு தனக்கு கொடுக்கப்பட்ட பல நூறு மில்லியன் டாலர் பணத்தை தான் மறுத்ததுமே இந்த மிரட்டல்களுக்கு காரணமாக இருந்தன. குறிப்பாக, மும்பை, கேப்டவுன் மற்றும் லண்டனின் ஸ்லோன் ஸ்ட்ரீட் ஆகிய 3 இடங்களில் தாவூத் இப்ராஹிம் தரப்பு கொல்ல முயன்றதாக தெரிவித்திருக்கிறார்.
எனினும், தாவூத் இப்ராஹிம் எந்த ஐபிஎல் அணியை குறிவைத்தார் என்பது குறித்த விவரங்களை லலித் மோடி வெளியிடவில்லை. அதேபோல், இந்த குற்றச்சாட்டுகளை உறுதிப்படுத்தும் அதிகாரப்பூர்வ ஆதாரங்கள் அல்லது விசாரணை அமைப்புகளின் அறிக்கைகளும் இதுவரை வெளியாகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.