2026 ஐபிஎல் சீசனில் புள்ளிப்பட்டியலில் 7, 8வது இடத்தில் இருந்த சிஎஸ்கே, மும்பை அணிகள் வான்கடேவில் மோதின. சஞ்சு சாம்சனின் சதம், இறுதிவரை ஆட்டமிழக்காத 101* ரன்கள், அகீல் ஹொசைனின் சுழற்பந்து மாயாஜாலம், முகேஷ் சௌத்ரியின் ஆதரவு ஆகியவை சேர்ந்து மும்பையை 104 ரன்களுக்கு சுருக்கின. இதன் மூலம் சிஎஸ்கேக்கு ஐபிஎல் வரலாற்றிலேயே மிகப்பெரிய வெற்றி கிடைத்தது.
ஐபிஎல் தொடரின் 19வது சீசனானது கடந்த மார்ச் 28ஆம் தேதி முதல் தொடங்கி நடைபெற்றுவருகிறது. 10 அணிகளும் தங்களுடைய திறமையை வெளிப்படுத்திவரும் நிலையில், பெஸ்ட் vs பெஸ்ட் என பல அதிரடி போட்டிகளுடன் களைகட்டி வருகிறது 2026 ஐபிஎல்.
ஒருபக்கம் நடப்பு சாம்பியன் ஆர்சிபி, மறுபக்கம் ரன்னர்-அப் பஞ்சாப் கிங்ஸ், இன்னொரு பக்கம் சுட்டிக்குழந்தைகள் சூர்யவன்ஷி-ஜெய்ஸ்வால் கொண்ட ராஜஸ்தான் ராயலஸ் என 3 அணிகளும் அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தி வரும் நிலையில், 5 முறை கோப்பை வென்ற OG அணிகளான சிஎஸ்கே மற்றும் மும்பை இரண்டு அணிகளும் 6 போட்டிகளில் தலா 4 போட்டிகளில் இருவரும் தோற்று தடுமாறி வந்தன.
புள்ளிப்பட்டியலில் 7வது மற்றும் 8வது இடத்தில் இருந்த இந்த 2 அணிகளுக்கும் இடையேயான போட்டி நேற்று மும்பை வான்கடேவில் நடைபெற்றது.
மும்பை வான்கடே மைதானத்தில் தொடங்கிய போட்டியில் டாஸ் வென்ற மும்பை இந்தியன்ஸ் அணி பந்துவீச்சை தேர்வுசெய்ய அந்த அணிக்கு எல்லாமே சரியாகத்தான் சென்றது. ஆனால் தொடக்க வீரராக களமிறங்கிய சஞ்சு சாம்சன் ஒரு பக்கம் விக்கெட் சரிந்தாலும், இறுதிவரை ஆட்டமிழக்காமல் 54 பந்தில் 10 பவுண்டரிகள் 6 சிக்சர்கள் என துவம்சம் செய்து 101* ரன்கள் குவித்து அசத்தினார். சேட்டாவின் அதிரடியால் 20 ஓவரில் 207 ரன்கள் என்ற நல்ல டோட்டலை குவித்தது சென்னை சூப்பர் கிங்ஸ் அணி.
வான்கடேவில் 208 ரன்களை எளிதாக எட்டிவிடலாம் என களமிறங்கிய மும்பை இந்தியன்ஸ் அணியை சென்னை அணியின் சுழற்பந்துவீச்சாளர் அகீல் ஹொசைன் கதிகலங்க வைத்தார். டனிஸ் மலேவர், நமன் திர் இருவரையும் 0 ரன்னில் வெளியேற்றிய அகீல் ஹொசைன் மிரட்டிவிட, 7 ரன்னில் டிகாக்கை காலிசெய்த முகேஷ் சௌத்ரி அசத்தினார். 11 ரன்னுக்கு 3 விக்கெட்டுகளை இழந்து தடுமாறிய மும்பை அணியை மீட்டுஎடுத்துவர சூர்யகுமார் யாதவ் மற்றும் திலக் வர்மா போராடினர்.
ஆனால் மீண்டும் மும்பைக்கு வில்லனாக வந்த அகீல் ஹொசைன் திலக்வர்மாவை 37 ரன்னிலும், சூர்யகுமாரை 36 ரன்னிலும் அடுத்தடுத்து வெளியேற்றை மும்பையின் நம்பிக்கை பறிபோனது. அடுத்துவந்த ஹர்திக் பாண்டியா 1 ரன்னிலும், ரூதர்போர்டு 0 ரன்னிலும் பேட்டை சுற்றி அவுட்டாக 104 ரன்களுக்கே அனைத்துவிக்கெட்டுகளையும் இழந்த மும்பை இந்தியன்ஸ் அணி படுதோல்வியை சந்தித்தது.
ஐபிஎல் வரலாற்றில் மும்பை இந்தியன்ஸ் அணி பதிவுசெய்யும் மிகப்பெரிய் தோல்வி இதுவாகும், அதேபோல சிஎஸ்கே அணியின் மிகப்பெரிய ஐபிஎல் வெற்றியும் இதுவாகும். இந்த அற்புதமான வெற்றிக்கு பிறகு சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 7 போட்டிகளில் 3 வெற்றிகளுடன் 5வது இடத்திற்கு முன்னேறியுள்ளது.