CSK-விற்காக 2வது சதமடித்தார் சஞ்சு சாம்சன்.. மும்பைக்கு 208 ரன்கள் இலக்கு!
வான்கடே மைதானத்தில் மும்பை இந்தியன்ஸ் டாஸ் வென்று பந்துவீச்சை தேர்வு செய்த நிலையில், சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு சஞ்சு சாம்சன் தனியாளாக சதமடித்து மிரட்டினார். ருதுராஜ் கெய்க்வாட், சர்பராஸ் கான், ஷிவம் துபே ஆகியோர் விரைவில் அவுட்டான சூழலில், 54 பந்தில் 10 பவுண்டரி, 6 சிக்சர்களுடன் சஞ்சு சாம்சன் சதமடித்து, அணியை 20 ஓவரில் 207 ரன்கள் என்ற பெரிய ஸ்கோருக்கு அழைத்துச் சென்றார்.
ஐபிஎல் தொடரின் 19வது சீசனானது கடந்த மார்ச் 28ஆம் தேதி முதல் தொடங்கி நடைபெற்றுவருகிறது. 10 அணிகளும் தங்களுடைய திறமையை வெளிப்படுத்திவரும் நிலையில், பெஸ்ட் vs பெஸ்ட் என பல அதிரடி போட்டிகளுடன் களைகட்டி வருகிறது 2026 ஐபிஎல்.
5 முறை கோப்பை வென்ற அணிகளான சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் மும்பை இந்தியன்ஸ் இரண்டு அணிகளும் நடப்பு ஐபிஎல் தொடரில் மோசமாகவே தொடங்கியுள்ளனர். 6 போட்டிகளின் முடிவில் தலா 4 தோல்வியுடன் 7வது மற்றும் 8வது இடத்திலிருக்கும் மும்பை, சிஎஸ்கே அணிகள் இன்று முக்கியமான போட்டியில் பலப்பரீட்சை நடத்துகின்றன.
தனியாளாக போராடிய சஞ்சு சாம்சன்..
மும்பை வான்கடே மைதானத்தில் தொடங்கிய போட்டியில் டாஸ் வென்ற மும்பை இந்தியன்ஸ் அணி பந்துவீச்சை தேர்வுசெய்தது. அதன்படி முதலில் பேட்டிங் செய்த சென்னை அணியில் தொடக்க வீரர்களாக களமிறங்கிய ருதுராஜ் கெய்க்வாட் மற்றும் சஞ்சு சாம்சன் இருவரும் நிதானமாகவே தொடங்கினர்.
3 பவுண்டரிகள் 1 சிக்சர் என பாசிட்டிவாக தொடங்கிய கேப்டன் ருதுராஜ் இந்த போட்டியில் நல்ல ஸ்கோர் அடிப்பார் என்ற எதிர்ப்பார்ப்பு எழுந்த நிலையில், துரதிருஷ்டவசமாக 22 ரன்னில் அவுட்டாகி வெளியேறினார். அடுத்துவந்த சர்பராஸ் கான் அடுத்தடுத்து 3 பவுண்டரிகளை விரட்டி ரன்ரேட்டை உயர்த்த 6 ஓவரில் 73 ரன்கள் குவித்து நல்ல தொடக்கத்தை கொடுத்தது சென்னை அணி.
ஆனால் சர்பராஸ் கான் 14 ரன்னில் அவுட்டாக, அடுத்துவந்த ஷிவம் துபேவும் 5 ரன்னுக்கு வெளியேறி அதிர்ச்சி கொடுத்தார். 2 விக்கெட்டுகள் தொடர்ச்சியாக விழ அணியை மீட்டு எடுத்துவர வேண்டிய பொறுப்பு சஞ்சு சாம்சன் மற்றும் பிரேவிஸ் இருவரின் தோள்களில் வந்தது.
2 சிக்சர்களை பறக்கவிட்ட பிரேவிஸ் விரைவாகவே வெளியேறினாலும் பொறுப்பை தனதாக்கிக் கொண்ட சஞ்சு சாம்சன், கடைசிவரை ஆட்டமிழக்காமல் 54 பந்தில் 10 பவுண்டரிகள் 6 சிக்சர்கள் என பறக்கவிட்டு சதமடித்து அசத்தினார். சஞ்சு சாம்சனின் 101 ரன்கள் அபாரமான ஆட்டத்தால் 20 ஓவரில் 207 ரன்கள் சேர்த்தது சென்னை சூப்பர் கிங்ஸ் அணி.

