சையத் முஷ்டாக் அலி டிராபியில் குஜராத் அணியின் கேப்டன் உர்வில் படேல், டி20 கிரிக்கெட்டில் மீண்டும் அதிவேகமாய்ச் சதமடித்துள்ளார். முன்னதாக, அவர் 28 பந்துகளில் சதமடித்திருந்த நிலையில், தற்போது 31 பந்துகளில் சதமடித்துள்ளார்.
நாடு முழுவதும் சையத் முஷ்டாக் அலி டிராபி போட்டிகள் நடைபெற்று வருகின்றன. அந்த வகையில், ஹைதராபாத்தின் ஜிம்கானா மைதானத்தில் இன்று நடைபெற்ற சர்வீசஸ் அணிக்கு எதிரான போட்டியில், CSK வீரர் உர்வில் படேல் 31 பந்துகளில் சதமடித்து மீண்டும் சாதனை பட்டியலில் இணைந்தார். இன்று நடைபெற்ற போட்டியில், சர்வீஸஸ் மற்றும் குஜராத் ஆகிய அணிகள் பலப்பரீட்சை நடத்தின. இதில் முதலில் ஆடிய சர்வீஸஸ் அணி 20 ஓவர்களில் 9 விக்கெட் இழப்புக்கு 182 ரன்கள் எடுத்தது. பின்னர் ஆடிய குஜராத் அணி 12.3 ஓவர்களிலேயே இந்த இலக்கை விரட்டிப் பிடித்து 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபெற்றது. இந்தப் போட்டியில் உர்வில் படேல் 37 பந்துகளில் 12 பவுண்டரி, 10 சிக்ஸர்களுடன் ஆட்டமிழக்காமல் 119 ரன்கள் எடுத்தார்.
இந்த அணியின் கேப்டனாக உர்வில் படேல் உள்ளார். இவர், ஐபிஎல் அணிகளில் சென்னை அணியிலும் இடம்பிடித்துள்ளார். இவர், இன்றைய போட்டியில் 31 பந்துகளில் சதமடித்ததன் மூலம் டி20யில் அதிவேக சதமடித்த இந்திய வீரர்களின் பட்டியலில் மீண்டும் இணைந்துள்ளார். ஏற்கெனவே 28 பந்துகளில் அவர் சதமடித்து அந்தப் பட்டியலில் அபிஷேக் சர்மாவுடன் முதல் இடத்தில் இருக்கும் நிலையில், தற்போது 31 பந்துகளில் சதமடித்து 2வது இடம்பிடித்துள்ளார்.
இவருக்கு அடுத்து இடத்தில் ரிஷப் பண்ட் மற்றும் வைபவ் சூர்யவன்ஷி உள்ளனர். அவர்கள் இருவரும் 32 பந்துகளில் சதமடித்து உள்ளனர். முன்னதாக, கடந்த ஆண்டு நவம்பர் 27ஆம் தேதி, திரிபுரா அணிக்கு எதிராக 28 பந்துகளில் உர்வில் சதமடித்திருந்தார். இந்த வருடம் அதே நவம்பர் மாதத்தில் அந்த தேதிக்கு ஒருநாள் முன்பாகவே மீண்டும் ஒரு அதிவேக சதத்தை பதிவு செய்துள்ளார்.
இச்சாதனை குறித்துப் பேசிய உர்வில் படேல், “டி20 போட்டிகளில் 100 ரன்கள் எடுப்பது எப்போதுமே மிகவும் சிறப்பு வாய்ந்தது. அதனால் அதுதான் எனக்கு மிகவும் பிடித்த தருணம் என்று நான் கூறுவேன். மஹி பாயுடன் (தோனி) விளையாடுவது எனக்கு ஒரு கனவுபோல இருந்தது. நான் அவர்களுடன் நீண்டகாலம் இல்லாதபோது, அங்கு சில நல்ல பாடங்களைக் கற்றுக்கொண்டேன். அவை இங்கே சிறப்பாகச் செயல்பட எனக்கு உதவுகின்றன” எனத் தெரிவித்துள்ளார்.
உர்விலின் சாதனை குறித்து அவரது தந்தை முகேஷ் படேல், “உர்வில் சிறப்பாகச் செயல்பட்டு இவ்வளவு மகத்தான சாதனையைப் பதிவு செய்வதைப் பார்ப்பது எனக்கு மிகுந்த பெருமையைத் தருகிறது. இதுபோன்ற தரமான ஆட்டங்களைக் கருத்தில் கொண்டு, அவர் இந்திய டி20 அணியில் விரைவாக இடம்பெற வேண்டிய நேரம் இது. அவர் மிகவும் தகுதியானவர்” எனத் தெரிவித்துள்ளார்.