சென்னை சேப்பாக்கத்தில் நடந்த டி20 உலகக்கோப்பை போட்டியில் விசில் பயன்படுத்த தடை விதிக்கப்பட்டது. இது விஜய் தலைமையிலான கட்சியின் தேர்தல் சின்னமாக விசில் ஒதுக்கப்பட்டதன் பின்னணியில் நடந்ததாக பேசப்பட்டது. இந்த சூழலில் தற்போது சென்னை சூப்பர் கிங்ஸ் தலைமை நிர்வாகி காசி விஸ்வநாதன் விசில் குறித்து பேச மறுத்தார்.
2026 டி20 உலகக்கோப்பையில் நியூசிலாந்து மற்றும் ஆப்கானிஸ்தான் அணிகள் மோதிய போட்டி சென்னை சேப்பாக்கத்தில் நேற்று நடைபெற்றது. இப்போட்டியை காண மைதானத்திற்கு செல்லும் ரசிகர்கள் விசிலை கொண்டு செல்ல தடைவிதிக்கப்பட்டதாக தகவல் வெளியானது.
சமீபத்தில் விஜய் தலைமையிலான தமிழக வெற்றிக் கழகத்தின் தேர்தல் சின்னமாக விசிலை தேர்தல் ஆணையம் ஒதுக்கியிருந்த நிலையில், சென்னை சேப்பாக்கத்தில் விசிலுக்கு தடை என்பது பேசுபொருளாக மாறியது.
முதலில் காவல்துறையினர் விசிலை எடுத்துச்செல்ல அனுமதிக்கவில்லை என்றும், பிசிசிஐ-க்கும் இதுக்கும் எந்த சம்மந்தமும் இல்லை என சேப்பாக்கம் நிர்வாகமும் தெரிவித்ததாக தகவல் வெளியானது. ஆனால் பின்னர் ஐசிசி தான் விசில், ஒலிப்பெருக்கி போன்ற பொருட்களை மைதானத்திற்கு எடுத்துச்செல்ல தடை விதித்துள்ளதாக பின்னர் செய்தி வெளியானது.
இந்நிலையில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் தலைமை நிர்வாகி காசி விஸ்வநாதனிடமும் இன்று விசில் குறித்த கேள்வி கேட்கப்பட்டது.
2026 ஐபிஎல் தொடருக்கு முன்னதாக சென்னை சூப்பர் கிங்ஸ் அணி AI தொழில்நுட்பத்தை பயன்படுத்த முடிவுசெய்துள்ள நிலையில், அதுகுறித்த அறிவிப்பு நிகழ்ச்சி இன்று நடைபெற்றது.
அப்போது செய்தியாளர்களிடம் பேசிய காசி விஸ்வநாதன் இடம், விசில் குறித்து ஏதேனும் முடிவு எடுக்கப்பட்டதா? என கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு பதிலளித்த அவர், ‘அதுகுறித்து இப்போது நான் எதுவும் பேசவிரும்பவில்லை’ என பதிலளித்தார்.
மேலும் தோனியின் ஓய்வு குறித்து எழுப்பப்பட்ட கேள்விக்கு, ‘ஓய்வு குறித்து தோனி யாரிடமும் பேச மாட்டார், அவருக்கு எப்போது தோன்றுகிறதோ அப்போதுதான்’ என பதிலளித்தார்.