கால்பந்து சூப்பர் ஸ்டார் கிறிஸ்டியானோ ரொனால்டோ விளையாட்டு உலகில் வரலாற்றுச் சாதனையைப் படைத்துள்ளார்.
கால்பந்து சூப்பர் ஸ்டார் கிறிஸ்டியானோ ரொனால்டோ விளையாட்டு உலகில் வரலாற்றுச் சாதனையைப் படைத்துள்ளார். ஆம், கால்பந்து உலகின் ஜாம்பவானான ரொனால்டோ, தற்போது பில்லியனராக மாறியதற்காக தலைப்புச் செய்திகளில் இடம்பிடித்துள்ளார். புளூம்பெர்க் குறியீட்டின்படி, ரொனால்டோவின் நிகரமதிப்பு 12,352 கோடி ரூபாய்க்கு மேல் உயர்ந்துள்ளது. இதன்மூலம், கால்பந்து வரலாற்றில் பில்லியனர் ஆன முதல் வீரர் என்ற பெருமையை அவர் பெற்றுள்ளார். சவுதி கிளப் அல்-நஸ்ரில் அவர் வாங்கும் அதிகபட்ச சம்பளம், நைக் போன்ற உலகளாவிய விளம்பர ஒப்பந்தங்கள் மற்றும் அவரது CR7வணிகப் பேரரசு ஆகியவற்றின் மூலம் இந்த உச்சத்தைத் தொட்டுள்ளார். 2002 முதல் 2023 வரை ரொனால்டோ 550 மில்லியன் டாலர்களுக்கு மேல் ( ₹ 4,869.57 கோடி) சம்பளம் பெற்றதாக அறிக்கை கூறுகிறது. அந்தக் காலகட்டத்தில் அவர் மான்செஸ்டர் யுனைடெட், ரியல் மாட்ரிட் மற்றும் ஜுவென்டஸ் உள்ளிட்ட சில சிறந்த ஐரோப்பிய கிளப்புகளுக்காக விளையாடினார்.
அவர் நைக் நிறுவனத்துடன் ஆண்டுக்கு கிட்டத்தட்ட $18 மில்லியன் (தோராயமாக ₹ 159.25 கோடி) மதிப்புள்ள 10 ஆண்டுகால ஒப்பந்தத்தையும் கொண்டிருந்தார். அர்மானி மற்றும் காஸ்ட்ரோல் போன்ற பிராண்டுகளுடனான அவரது பிற ஒப்புதல்கள் அவரது நிகர மதிப்புக்கு $175 மில்லியனுக்கு ( ₹ 1,554 கோடி) மேல் சேர்த்தன. 2023ஆம் ஆண்டில், ரொனால்டோ சவுதி கிளப்பான அல்-நாசருக்குச் சென்றதன் மூலம் அவருக்கு ஆண்டுதோறும் சுமார் $200 மில்லியன் ( ₹ 17,760 கோடி) வரி இல்லாத சம்பளம் மற்றும் போனஸ்கள் கிடைத்தன. அதோடு $30 மில்லியன் ( ₹ 2,664 கோடி) ஒப்பந்த போனஸ் போன்ற சலுகைகளும் கிடைத்தன. அவரது ஒப்பந்தம் ஜூன் 2025இல் முடிவடையவிருந்த நிலையில், ரொனால்டோ கிளப்புடன் ஒரு புதிய இரண்டு ஆண்டு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டார், இதன்மூலம் அவர் $400 மில்லியனுக்கும் அதிகமாக (தோராயமாக ₹ 35,520 கோடி) சம்பாதித்தார்.
என்றாலும் உலகின் மிகப்பெரிய பணக்காரர் வீரர்கள் பட்டியலில் அவர் முதலிடத்தில் இல்லை. தாய்லாந்தில் உள்ள ராட்சபுரி எஃப்சிக்காக விங்கராக விளையாடி வரும் ஃபைக் போல்கியா, தற்போது உலகின் மிகப்பெரிய பணக்கார வீரராக உள்ளார். அவர், 2014 முதல் புருனே தேசிய அணியையும் பிரதிநிதித்துவப்படுத்துகிறார். மேலும் அந்த அணியின் கேப்டனாகவும் உள்ளார். அவரது சொத்து மதிப்பு $20 மில்லியன் ஆகும். புருனே அரச குடும்பத்தைச் சேர்ந்த அவரது சொத்து மதிப்பு அரச பரம்பரையில் இருந்து வருகிறது. இரண்டாது இடத்தில் உலகின் சிறந்த கால்பந்து வீரர்களில் ஒருவராகக் கருதப்படும் கிறிஸ்டியானோ ரொனால்டோ, 2வது இடத்தில் உள்ளார். அவரது தற்போதைய நிகர மதிப்பு $1.4 பில்லியன் ஆகும். அவர் தற்போது அல் நாசருக்காக விளையாடி வருகிறார்.
உலகின் மற்றொரு மிகச்சிறந்த கால்பந்து வீரர்களில் ஒருவராகக் கருதப்படும், அர்ஜென்டினாவைச் சேர்ந்த பார்சிலோனா வீரர் லியோனல் மெஸ்ஸி, தற்போது $650 மில்லியன் நிகர மதிப்புடன் மூன்றாவது இடத்தைப் பிடித்துள்ளார். அவர், தற்போது இன்டர் மியாமி எஃப்சியின் MLS வீரராக உள்ளார். அடுத்து 4வது இடத்தை மான்செஸ்டர் யுனைடெட் அணியின் ஜாம்பவானாகக் கருதப்படும் டேவிட் பெக்காமின் நிகர மதிப்பு $450 மில்லியன் ஆகும். இவர், MLS அணியான இன்டர் மியாமி FC-க்கும் உரிமையாளராக உள்ளார். இறுதியாக பிரேசிலின் மிகப்பெரிய கால்பந்து வீரர்களில் ஒருவரான நெய்மர் ஜூனியர், சுமார் $250 மில்லியன் மதிப்புள்ள சொத்துடன் தற்போது 5வது இடத்தில் உள்ளார். அவர், பிரேசிலிய லீக்கிற்காக, சாண்டோஸ் அணிக்காக விளையாடி வருகிறார்.