”இதுவரை இருந்ததிலேயே நான்தான் சிறந்த கால்பந்து வீரர்” - ரொனால்டோ!
உலகளவில் பிரபல கால்பந்து வீரரான ரொனால்டோ, தற்போது சவுதி அரேபியா கால்பந்து கிளப்பான அல் நாசர் அணிக்காக விளையாடி வருகிறார். இந்த நிலையில், “இதுவரை இருந்ததிலேயே நான்தான் சிறந்த கால்பந்து வீரர், என்னைவிடச் சிறந்த யாரையும் நான் பார்த்ததில்லை” என ரொனால்டோ ஊடகம் ஒன்றுக்குப் பேட்டியளித்துள்ளார். அதில் அவர், “ரசிகர்கள் மெஸ்ஸி, மரடோனா அல்லது பீலேவை விரும்பலாம். நான் அதை மதிக்கிறேன். ஆனால் அவர்களைவிட நான் சிறந்தவன். கால்பந்து வரலாற்றில் என்னைவிடச் சிறந்த யாரையும் நான் பார்த்ததில்லை. ஏனெனில், நான்தான் அதிக கோல் அடித்துள்ளேன். நான் கால்பந்தில் எல்லாவற்றையும் செய்கிறேன். நான் என் தலையால் கோல் அடிக்கிறேன்.
ஃப்ரீ கிக்குகளை எடுக்கிறேன். இடது, வலது காலால்கூட கோல் அடிக்க முடியும். அதுமட்டுமின்றி நான் வலிமையானவன். மெஸ்ஸியும், நானும் 15 வருடமாக பல்வேறு விருதுகளை பெற்றுள்ளோம். அவருடன் எனக்கு ஒருபோதும் மோசமான உறவு இல்லை. அவர் அவருடைய கிளப், தேசிய அணிக்காகச் சிறப்பாக செயல்பட்டார். நானும் அதேபோல செயல்பட்டேன். எங்களுக்குள் ஒரு ஆரோக்கியமான போட்டி இருந்தது. எப்போதும் நன்றாகப் பழகி வருகிறோம்.
நான் அவருக்காக ஒரு சமயம் ஆங்கிலத்தை மொழிபெயர்த்துள்ளேன். அது மிகவும் வேடிக்கையான நிகழ்வு. நாங்கள் ஒருவருக்கொருவர் கருத்து தெரிவித்துகொள்வோம். அவர் பல ஆண்டுகளாக கால்பந்தில் விரும்பிய எல்லாவற்றையும் விளையாடியுள்ளார். நானும் அப்படித்தான் செய்தேன்” என அதில் தெரிவித்துள்ளார்.