பாரம்பரிய டெஸ்ட் கிரிக்கெட் போட்டிகளை காண ரசிகர்கள் ஆர்வம் காட்டாததால் பல இடங்களில் கேலரிகள் காலியாகக் கிடக்கும் நிலையில் இளையோர் பட்டாளத்தை ஈர்க்கும் வகையில், புதிய டெஸ்ட் கிரிக்கெட் வடிவம் அறிமுகமாகிறது.
பாரம்பரிய டெஸ்ட் கிரிக்கெட் போட்டிகளை காண ரசிகர்கள் ஆர்வம் காட்டாததால் பல இடங்களில் கேலரிகள் காலியாகக் கிடக்கும் நிலையில் இளையோர் பட்டாளத்தை ஈர்க்கும் வகையில், புதிய டெஸ்ட் கிரிக்கெட் வடிவம் அறிமுகமாகிறது. பாரம்பரிய டெஸ்ட் கிரிக்கெட்டைக் காண மைதானங்களில் கூட்டம் குறைந்துவிட்ட நிலையில், 13 முதல் 19வயதுக்குட்பட்ட இளைஞர்களை ஈர்க்கும் ஒரு புதிய முயற்சியாக 'டெஸ்ட்டு வென்டி' வடிவம் அறிமுகமாகியுள்ளது.
இது பாரம்பரிய ஆட்டத்தின் ஆழத்தையும், டி20-யின் அதிரடியையும் கலந்து கட்டிய ஒரு சூப்பர் வடிவமாக இருக்கும் என கருதப்படுகிறது. இது மொத்தமே 80 ஓவர்களை மட்டுமே கொண்ட ஆட்டம். ஒவ்வொரு அணியும் தலா 20 ஓவர்களைக் கொண்ட இரண்டு இன்னிங்ஸ் விளையாட வேண்டும். ஒரேநாளில் விறுவிறுவென நான்கு இன்னிங்ஸ்களும் நிறைவடையும். டெஸ்ட் கிரிக்கெட்டின் மிக முக்கிய அம்சமான ஃபாலோ-ஆன் விதி இங்கும் உண்டு. முதல் இன்னிங்ஸில் 75 ரன்களைக் குறைவாகப் பெறும் அணி ஃபாலோ-ஆன் விளையாட நேரிடும்.
ஆட்டம் வழக்கமான டெஸ்ட் கிரிக்கெட் போலவே வெள்ளை உடையில், சிவப்புப் பந்துடன் நடைபெறும். கேப்டன்களுக்குச் சவால் விடுக்கும் வகையில், ஒரு போட்டியில் அதிகபட்சமாக ஐந்து பந்துவீச்சாளர்கள் மட்டுமே அனுமதிக்கப்படுவர். ஒவ்வொருவரும் அதிகபட்சம் 8 ஓவர்கள் வீச முடியும். ஆட்டத்தின் முடிவில் வெற்றி, தோல்வி, சமன், மற்றும் டிரா என நான்கு முடிவுகளும் சாத்தியம். இந்தப் புதிய வடிவத்தை விளையாட்டுத் தொழில்முனைவோர் கௌரவ் பஹிர்வானி உருவாக்கியுள்ளார்.
இதற்குப் பின்னால் ஜாம்பவான்கள் பட்டாளமே உள்ளது. சர் கிளைவ் லாயிட், ஏபி.டி.வில்லியர்ஸ், மேத்யூ ஹேடன், ஹர்பஜன் சிங் ஆகியோர் ஆலோசனைக் குழுவில் உள்ளனர். முதல் சீசன் ஜனவரி 2026இல் இந்தியாவில் தொடங்குகிறது. இதில் இந்தியா உள்ளிட்ட ஆறு சர்வதேச அணிகள் கலந்துகொள்ளும் என எதிர்பார்க்கப்படுகிறது. இது சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலின் அங்கீகாரத்தைப் பெற்றால், பாரம்பரிய டெஸ்ட் கிரிக்கெட்டின் எதிர்காலம் என்னவாகும்? இது காலத்திற்கேற்ப கிரிக்கெட்டைத் தகவமைத்துக்கொள்ளும் தொலைநோக்குத் திட்டமா அல்லது டெஸ்ட் கிரிக்கெட்டை அழிக்கும் முன்னெடுப்பா என்பதற்கு காலம் பதில்சொல்லும்!