virat kohlil as test captain
virat kohlil as test captainweb

’விராட் கோலியை இழந்தது டெஸ்ட் கிரிக்கெட்..’ ஏன் அவர் தலைசிறந்த TEST கேப்டன்? 4 காரணங்கள்!

ஒருவர் சிறந்த கிரிக்கெட் வீரராக மாறவேண்டுமென்றால் டெஸ்ட் கிரிக்கெட் விளையாட தெரிந்திருக்க வேண்டும் என்பது காலத்திற்குமான சான்று.. ஒருவர் டெஸ்ட் கேப்பை பெற்றுவிட்டாலே சிறந்த வீரன் என்றால், டெஸ்ட்டில் உலக அணிகளையே ஆட்டிப்படைத்த கோலி எந்தவகை வீரன்?
Published on

இந்திய கேப்டனாக இருப்பது எவ்வளவு பெரிய கடினமான விசயம் என்பது கங்குலி, சச்சின், டிராவிட், தோனி முதலிய தலைசிறந்த கிரிக்கெட் வீரர்களுக்கு அதிகமாகவே தெரியும். ஒரு தோல்வி உச்சத்தில் இருந்தாலும் உங்களை தரையில் தூக்கி எறிந்துவிடும், 2003 மற்றும் 2007 உலகக்கோப்பை தோல்விகள் எல்லாம் இந்திய கேப்டன் பதவிக்கான கடினமான சூழலை பறைச்சாற்றும் சம்பவங்களாக அமைந்துள்ளன.

அதையெல்லாம் கடந்துவந்து 2007 டி20 உலகக்கோப்பை, 2011 ஒருநாள் உலகக்கோப்பை, 2013 சாம்பியன்ஸ் டிராபி என 3 ஐசிசி கோப்பைகளை வென்று வெற்றிக்கேப்டனாக வலம்வந்த மகேந்திர சிங் தோனிக்கு கூட, டெஸ்ட் கிரிக்கெட்டில் கவனம் செலுத்துவது கடினமான விசயமாகவே இருந்தது.

virat kohli retires announcement from test cricket
விராட் கோலிஎக்ஸ் தளம்

டெஸ்ட் கிரிக்கெட்டில் இருக்கும் அதிகப்படியான அழுத்தம் காரணமாக கேப்டன்சியை விட்டு தோனி விலகிய பிறகு, விராட் கோலி ஒரு பெரிய பொறுப்பை தன் தோளில் சுமக்க தயாரானார்.

தோனியே போய்ட்டார், இவர் என்ன செய்யப்போகிறார் என்ற கேள்விக்கு ஆஸ்திரேலியா, இங்கிலாந்து போன்ற டெஸ்ட் கிரிக்கெட்டில் ஆதிக்கம் செலுத்திய அணிகளுக்கு எதிராக வலுவான ஒரு அணியை கட்டமைத்தார் விராட் கோலி. வெளிநாட்டு மண்ணில் இந்தியாவால் வெல்ல முடியுமா என்ற சூழலை மாற்றி, உலகத்தின் எந்த மூளைக்கும் சென்று அங்கிருக்கும் அணிகளை இந்தியாவால் வீழ்த்த முடியும் என்ற நம்பிக்கையை விதைத்தது மட்டுமில்லாமல், அதை செய்தும்காட்டிய பெருமை ’The Great’ விராட் கோலிக்கே சேரும்.

bcci request on virat kohli test retirement
விராட் கோலிx page

கோலி அப்படி என்ன டெஸ்ட் கிரிக்கெட்டில் செய்துவிட்டார், ஏன் அவர் நவீன டெஸ்ட் கிரிக்கெட்டின் முன்னோடி என்பதற்கான 4 காரணங்களை பார்க்கலாம்..

1. எந்த அணியை வேண்டுமானாலும் அவர்களின் சொந்த மண்ணில் வீழ்த்தலாம்..

டெஸ்ட் கிரிக்கெட்டின் முக்கியத்துவம் குறித்து எப்போதும் குரல் கொடுப்பதில் முதலிடத்தில் இருப்பவர் விராட் கோலி. அவர் எவ்வளவு டெஸ்ட் கிரிக்கெட்டை நேசித்தார், எவ்வளவு ஆர்வமாக இருந்தார் என்பதற்கு பல சான்றுகள் உள்ளன.

விராட் கோலி தலைமையிலான இந்திய நிர்வாகம், அட்டாக்கிங் பேட்டிங்கை மட்டுமில்லாமல் அட்டாக்கிங் பந்துவீச்சு என்பதையும் டெஸ்ட் கிரிக்கெட்டில் எடுத்துவந்தது. விராட் கோலியின் இந்த அணுகுமுறைதான் இந்திய அணியை வேகப்பந்துவீச்சாளர்கள் நிரம்பிய ஒரு யூனிட்டாக மாற்றியது. எந்த முடிவையும் துணிச்சலாக எடுக்கும் அவருடைய மாற்றத்திற்கான விதை, டெஸ்ட் கிரிக்கெட்டில் இந்திய அணியை இதற்கு முன் செய்யாத பல சாதனைகளை செய்ய வைத்தது.

ind vs aus
ind vs aus

அவர் ஏற்படுத்திய இந்த அட்டாக்கிங் அணுகுமுறையால்தான், தொடர்ச்சியாக இரண்டுமுறை இந்திய அணி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டிக்கு முன்னேறியது. உலக கிரிக்கெட் நாடுகளுக்கு எப்போதும் அச்சுறுத்தலாக இருந்துவரும் ஆஸ்திரேலியாவை அவர்களின் சொந்த மண்ணிலேயே வைத்து வீழ்த்தி 10 ஆண்டுகளாக இந்தியா ஆதிக்கம் செலுத்தியது. ”இந்தியா எங்கள் நாட்டிற்கே வந்து எங்களை டாமினேட் செய்தது எங்களுக்கு பெரிய காயத்தை ஏற்படுத்தியது” என்று தற்போதைய கேப்டன் பாட் கம்மின்ஸ் தெரிவித்தார்.

அதுமட்டுமில்லாமல் கோலியின் இந்த நவீன அணுகுமுறையால்தான் எந்த அணி வேண்டுமானாலும் எந்த நாட்டிற்கு வேண்டுமானாலும் சென்று யாரையும் வெற்றிபெற முடியும், தொடரையும் வெல்ல முடியும் என்ற நம்பிக்கை விதையை உலகத்திற்கே விதைத்தது. இதனால்தான் விராட் கோலி தலைசிறந்த டெஸ்ட் கேப்டனாக மிளிர்கிறார்.

virat kohli
virat kohli

இதை 2019 ஒருநாள் உலகக்கோப்பை வென்ற இங்கிலாந்து முன்னாள் கேப்டனான இயன் மோர்கனும் ஒப்புக்கொண்டுள்ளார். ஒருமுறை விராட் கோலி என்ற டெஸ்ட் கேப்டன் குறித்து பேசியிருந்த அவர், “என்னைப் பொறுத்தவரை டெஸ்ட் கிரிக்கெட் இன்னும் நம்பமுடியாததாகவே இருந்து வருகிறது. ஒரு கேப்டனாக விராட் கோலியை டெஸ்ட் கிரிக்கெட் இழந்துவிட்டது. அவர் அதை எவ்வளவு நேசித்தார், எவ்வளவு ஆர்வமாக இருந்தார் என்பதைப் பற்றி எப்போதும் பேசியுள்ளார். முன்பு விராட் கோலி செய்ததைதான் தற்போது பென் ஸ்டோக்ஸ் செய்துவருகிறார்” என்று கூறினார் மோர்கன்.

விராட் கோலி தலைமையில் இந்தியா ஆஸ்திரேலியா மண்ணிலும், இலங்கை மண்ணிலும், வெஸ்ட் இண்டீஸ் மண்ணிலும் வென்றது. அதுமட்டுமில்லாமல் SENA நாடுகள் என அழைக்கப்படும் தென்னாப்பிரிக்கா, இங்கிலாந்து, நியூசிலாந்து மற்றும் ஆஸ்திரேலியா மண்ணில் அதிக டெஸ்ட் வெற்றிகளை பெற்ற ஒரே ஆசிய கேப்டனாக விராட் கோலி வலம்வருகிறார்.

2. டெஸ்ட் போட்டியில் DRAW என்பது குறைந்துள்ளது..

விராட் கோலி டெஸ்ட் கிரிக்கெட்டில் செய்த மாற்றம் என மற்றொன்றை கூற வேண்டுமானால், அது வெற்றி அல்லது தோல்வி இரண்டுதான் வேண்டும், சமன் என்ற ஒருமனநிலைக்கு செல்ல கூடாது என்பதுதான். களத்தில் பல அதிரடியான முடிவுகளாலும், பவுலர்களிடம் உத்வேகத்தை வெளிப்படுத்தும் விதத்திலும் விராட் கோலி இதை செய்துகாட்டியுள்ளார்.

virat kohli
virat kohli

அதனால்தான் சொந்த மண்ணில் விராட் கோலி தலைமையிலான இந்திய அணி ஒரு தொடரை கூட சமன் செய்யவோ, இழக்கவோ செய்யவில்லை. சொந்த மண்ணில் அசைக்க முடியாத சக்தியாக உருமாறியதால்தான், விராட் கோலி தலைமையிலான அணியால் வெளிநாடுகளில் வெற்றியைத்தேடி முன்னேற முடிந்தது.

virat kohli
virat kohlicricinfo

ஒரு காலத்தில் வெளிநாடுகளுக்கு சென்று டெஸ்ட் தொடர் விளையாடினால், விடிந்து பார்க்கும்போது இந்திய அணி ஆல் அவுட்டாகியிருக்கும் என்ற நிலையை மாற்றி, எதிரணிகளை கூட ஆல் அவுட் செய்ய முடியும் என்ற மாற்றத்தை கொண்டுவந்தவர் விராட் கோலி. அதனால்தான் அதிக வெற்றி சதவீதத்தை வைத்திருக்கும் 4வது உலக டெஸ்ட் கேப்டனாகவும், முதல் இந்திய டெஸ்ட் கேப்டனாகவும் விராட் கோலி இருக்கிறார். ஒருவேளை அவர் தொடர்ந்து டெஸ்ட் கேப்டனாக செயல்பட்டிருந்தால், முதலிடத்திற்கு செல்வதற்கான வாய்ப்பு பிரகாசமாகவே இருந்தது. அப்போதைய கங்குலி மற்றும் விராட் கோலி இடையேயான மோதல் அவரை டெஸ்ட் கேப்டன் பதவியிலிருந்து விலகவைத்ததாக சொல்லப்படுகிறது.

3. டெஸ்ட் கேப்டனாக பேட்டிங்கிலும் வழிநடத்தியது..

ஒரு டெஸ்ட் கேப்டன் அணியை எப்படி பேட்டிங்கிலும் முன் நின்று வழிநடத்த வேண்டும் என்பதற்கு சாலச்சிறந்த உதாரணம் என்றால் அது விராட் கோலிதான். காரணம், ஒரு டெஸ்ட் கேப்டனாக அதிக இரட்டை சதங்களாக 7 முறை அடித்த வீரராகவும், அதிக ரன்களை குவித்த டெஸ்ட் கேப்டனாகவும் கோலி ஜொலிக்கிறார். அதுமட்டுமல்லாமல் கேப்டனாக அறிமுகமான முதல் போட்டியில் இரண்டு இன்னிங்ஸிலும் சதமடித்த ஒரே வீரர் விராட் கோலி மட்டும்தான்.

virat kohli
virat kohli

நிறைய பேட்ஸ்மேன்கள் கேப்டன்சி பொறுப்பேற்ற பிறகு அழுத்தம் காரணமாக சரியான எண்களை எடுத்துவர முடியாமல் சொதப்பி உள்ளனர். ஆனால் விராட் கோலி டெஸ்ட் கேப்டன்சியில் சிறந்த நம்பர்களை வெளிக்கொண்டு வந்தார். ஒட்டுமொத்தமாக கோலி டெஸ்ட் கேப்டனாக 20 சதங்கள் மற்றும் 18 அரைசதங்கள் அடித்துள்ளார். 54.80 சராசரியுடன் 5864 ரன்கள் எடுத்துள்ளார். அதில் 7 இரட்டை சதங்களும் அடங்கும்.

விராட் கோலி
விராட் கோலி

அதுமட்டுமல்லாமல் நியூசிலாந்தை தவிர கேப்டனாக தான் விளையாடிய அனைத்து நாடுகளிலும் விராட் கோலி சதமடித்துள்ளார். அணியை கேப்டனாக மட்டுமில்லாமல் ஒரு பேட்ஸ்மேனாகவும் கேப்டன்சியில் எப்படி செயல்பட வேண்டும் என்பதற்கு விராட் கோலியே தலைசிறந்த உதாரணம்.

4. பவுலர்களின் கேப்டன்..

விராட் கோலி எப்போதும் பவுலர்களின் கேப்டனாகவே இருந்துள்ளார், அதன் காரணமாகவே சிறந்த வேகப்பந்துவீச்சு யூனிட்டை இந்தியா கொண்டிருந்தது. விராட் கோலியின் கீழ் இந்திய பந்துவீச்சாளர்கள் தலைசிறந்த பவுலர்களாக ஜொலித்தனர். அவரது தலைமையின் கீழ், இந்திய அணி வெளிநாடுகளில் விளையாடிய 35 போட்டிகளில் 22 முறை எதிரணிகளின் 20 விக்கெட்டுகளையும் வீழ்த்தி மிரட்டியது.

விராட் கோலி
விராட் கோலி

1990 முதல், கோலியைத் தவிர வேறு எந்த இந்திய அணியும் 30-க்கும் குறைவான பந்துவீச்சு சராசரியையும், 60-க்கும் குறைவான பந்துவீச்சு வீதத்தையும் கொண்டிருக்கவில்லை. கோலியின் பந்துவீச்சாளர்கள் ஒவ்வொரு 52வது பந்திலும் விக்கெட்டை வீழ்த்தினர், ஒரு விக்கெட்டுக்கு சராசரியாக 25 ரன்கள் மட்டுமே விட்டுக்கொடுத்தனர். ஒப்பிட்டு பார்க்கவேண்டுமானால், ரிக்கி பாண்டிங்கின் கீழ் ஆஸ்திரேலிய பந்துவீச்சாளர்கள் சராசரியாக 29.9 மற்றும் 58 பந்துகளுக்கு ஒரு முறை விக்கெட்டை வீழ்த்தினர். மெக்ராத், பிரட்லீ, கில்லெஸ்பீ, ஷேன் வார்னே என வலுவான பவுலிங் யூனிட்டை கொண்டிருந்த ஆஸ்திரேலியா பவுலிங் யூனிட்டிற்கு சற்றும் குறைவில்லாத ஒரு பந்துவீச்சை விராட் கோலி தலைமையில் இந்தியா கொண்டிருந்தது.

விராட் கோலி
விராட் கோலி

கோலியின் கீழ் ஆறு பந்துவீச்சாளர்கள் 100 டெஸ்ட் விக்கெட்டுகளுக்கு மேல் எடுத்துள்ளனர், அஸ்வின் 55 போட்டிகளில் 293 விக்கெட்டுகளுடன் பட்டியலில் முதலிடத்தில் உள்ளார்.

ஒயிட் பால் கிரிக்கெட்டின் சிறந்த கேப்டனாக யார் வேண்டுமானாலும் இருக்கலாம், ஆனால் எக்காலத்திற்கும் சிறந்த டெஸ்ட் கேப்டன் என்றால் அது விராட் கோலி மட்டும்தான் என்று கூறினால் மிகையாகாது.

கோவிட் தொற்று, டி20 ஃபார்மேட், ஐபிஎல் கிரிக்கெட் போன்ற பல காரணிகள் விராட் கோலி என்ற தலைசிறந்த டெஸ்ட் பேட்ஸ்மேனை இழக்க காரணமாக அமைந்துவிட்டது. சாதனைகளை உடைக்கவே பிறந்த விராட் கோலி, 2027 ஒருநாள் உலகக்கோப்பை வென்று சிறந்த ஃபேர்வெல் போட்டியுடன் விடைபெறவேண்டும் என்பது தான் ஒட்டுமொத்த இந்திய கிரிக்கெட் ரசிகர்களின் விருப்பமாக இருந்துவருகிறது. வாழ்த்துக்கள் கிங் கோலி!

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com