ஆஸ்திரேலியாவுக்கு எதிரான பார்டர் கவாஸ்கர் தொடரின் பாதியில் 38 வயதான இந்திய சுழற்பந்துவீச்சாளர் ரவிச்சந்திரன் அஸ்வின் திடீரென ஓய்வை அறிவித்தார். இந்தியாவின் ஜாம்பவான் சுழற்பந்து ஜாம்பவானாக தன்னை மாற்றிக்கொண்ட அஸ்வின், இந்தியாவிற்காக மொத்தமாக 765 விக்கெட்டுகளையும், 537 டெஸ்ட் விக்கெட்டுகளையும் கைப்பற்றியுள்ளார்.
மேலும், அதிவேகமாக 350 விக்கெட்டுகள் மற்றும் அதிகமுறை (11) தொடர் நாயகன் வென்ற வீரராக வரலாற்றில் தடம் பதித்துள்ளார்.
சமீபத்தில் யூடியூப் சேனல் ஒன்றிற்கு அவர் அளித்திருந்த பேட்டி வைரலானது. வாழ்க்கையைக் குறித்து அஸ்வின் மிகச் சிறப்பாக புரிந்து வைத்திருப்பதாக வீடியோவைக் கண்டவர்கள் ஹார்ட்டீன்களை பறக்கவிட்டனர்.
இந்நிலையில், இன்று தனியார் கல்லூரியில் நடந்த பட்டமளிப்பு விழாவில் அஸ்வின் கலந்துகொண்டார். மாணவ, மாணவிகளுக்கு பதக்கங்களையும் பட்டங்களையும் வழங்கினார்.
பின்னர், பேச வந்த அஸ்வின் மாணவர்களிடையே உரையைத் தொடங்கும் முன் இந்தியில் பேசவா, ஆங்கிலத்திலா, தமிழா எனக் கேட்டார். தமிழ் என்று அவர் சொன்னதற்கு மட்டும் மாணவர்களிடம் இருந்து சத்தம் அதிகமாக வந்தது. முடிவில், “இந்தி தேசிய மொழி அல்ல, அலுவல் மொழிதான் என சொல்லலாம் நினைத்தேன்” என கூறினார்.
தொடர்ந்து பேசிய அவர், “நான் கேப்டன் ஆகாததற்கு இன்ஞ்சினியரிங் படித்ததுதான் காரணம். யாராவது வந்து என்னால் முடியாது என்று சொன்னால் நான் அதை செய்துவிடுவேன். உன்னால் முடியும் என்று சொன்னால் அதைவிட்டுவிடுவேன். நிறையபேர் என்னிடம் ‘நீ இந்திய அணிக்கு கேப்டன் ஆகிவிடலாம்’ என்று சொன்னதால்தான் விட்டுவிட்டேன். யாராவது வந்து நீ கேப்டனாக ஆகவே மாட்டாய் என்று சொல்லியிருந்தால் விழித்திருப்பேன்.
மக்கள் உங்கள் முன்னாள் வந்து உங்களால் முடியாது என மீண்டும் மீண்டும் சொல்வார்கள். உங்களால் முடியாது என சொல்வதற்கு கோடிபேர் இருப்பார்கள். அவர்கள் உங்களது வாழ்க்கைக்கு சம்பந்தமில்லாதவர்கள். வாழ்க்கை முழுவதும் மாணவராகவே இருக்க வேண்டும். மாணவராக இருக்கும்போது கற்றுக்கொண்டே இருப்பீர்கள். மாணவராக இல்லை என்றால் நீங்கள் கற்பது நின்றுவிடும்” எனத் தெரிவித்தார்.