asia cup no trophy celebration, Mohsin Naqvi pt web
கிரிக்கெட்

ஆசிய கோப்பை கோப்பை பெற மறுத்த இந்தியா.. கையோடு எடுத்து சென்ற ACC தலைவர்.. விளையாட்டில் அரசியலா?

ஆசிய கோப்பை தொடரில் சாம்பியன் பட்டம் வென்ற இந்திய கிரிக்கெட் அணி, கோப்பையை பெறாமல் கொண்டாட்டத்தில் ஈடுபட்ட காட்சிகள், சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றன.

Sports Desk

ஆசிய கோப்பை தொடரில் சாம்பியன் பட்டம் வென்ற இந்திய கிரிக்கெட் அணி, கோப்பையை பெறாமல் கொண்டாட்டத்தில் ஈடுபட்ட காட்சிகள், சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றன. பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத்தின் தலைவரும், அந்நாட்டின் உள்துறை அமைச்சருமான மொஹ்சின் நக்வியிடம் இருந்து வெற்றிக் கோப்பையைப் பெற இந்திய அணி மறுத்ததால், அணிக்கு கோப்பை தரப்படவில்லை. கோப்பையை பெறாவிட்டாலும் கோப்பை இருப்பதைப் போல் பாவனை செய்து, இந்திய அணி கொண்டாட்டத்தில் ஈடுபட்டது, அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது.

asia cup no trophy celebration

ஐக்கிய அரபு அமீரகத்தில் நடந்த, 8 அணிகள் பங்கேற்ற ஆசியக் கோப்பை கிரிக்கெட் தொடரில் இந்தியாவும் பாகிஸ்தானும் இறுதிப்போட்டிக்கு முன்னேறின. இரு அணிகளுக்கு இடையே சச்சரவுகள் நீடித்து வரும் நிலையில், இந்த போட்டி மேலும் ரசிகர்களிடம் எதிர்பார்ப்பைக் கூட்டியது. அதிலும், 41 ஆண்டுகால ஆசியக் கோப்பை வரலாற்றில் முதல்முறையாக இந்தியாவும் பாகிஸ்தானும் இறுதிப் போட்டியில் நேற்று களம் கண்டன. பரபரப்பாக நடந்த ஆட்டத்தில் இந்திய அணி அபார வெற்றி பெற்றது. ஆனால், அதற்குப் பிறகுதான் பல்வேறு சர்ச்சைகள் நிகழ ஆரம்பித்தன.

ஆசியக் கோப்பை இறுதிப்போட்டியில் வென்ற இந்திய அணி, ஆசிய கிரிக்கெட் கவுன்சில் (ACC) தலைவர் மொஹ்சின் நக்வியிடம் இருந்து கோப்பையைப் பெற மறுத்திருப்பது சர்ச்சையை ஏற்படுத்தியிருக்கிறது. தொடரை வென்ற அணிக்கு கோப்பையை வழங்க வேண்டியது ஆசிய கிரிக்கெட் கவுன்சில் தலைவரின் கடமை மற்றும் பொறுப்பு. ஆனால், கோப்பை வழங்க நக்வி மேடைக்கு வந்தபோது, இந்திய வீரர்கள் 15 அடி தூரத்தில் விலகி நின்று கோப்பையை வாங்க மறுத்தனர். ஏனெனில், நக்வி ஆசிய கிரிக்கெட் கவுன்சிலின் தலைவர் என்பதைத் தாண்டி பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத்தின் தலைவராவர். அதோடு, பாகிஸ்தானின் உள்துறை அமைச்சராகவும் பொறுப்பு வகிப்பவர்.

மொஹ்சின் நக்வி

மேடையில் இருந்த ஐக்கிய அரபு எமிரேட்ஸ் பிரதிநிதி காளித் அல் சரூனி அல்லது பங்களாதேஷின் அமினுல் இஸ்லாம் புல்புல் ஆகியோரிடம் இருந்து கோப்பையை பெற இந்திய வீரர்கள் தயாராக இருந்தபோதும், நக்வி தனது பொறுப்பை விட்டுக்கொடுக்க மறுத்துவிட்டதாகக் கூறப்படுகிறது. இதற்கிடையேதான், போட்டிக்குப் பிறகான பரிசளிப்பு நிகழ்ச்சி நடைபெற தாமதமான நிலையில், கோப்பை மைதானத்தில் இருந்து வெளியில் கொண்டு செல்லப்பட்டது. தொடர்ந்து, இந்திய அணிக்கான பரிசளிப்பு நிகழ்வு நடைபெறாது எனவும் அறிவிக்கப்பட்டது.

இந்த விவகாரம் தொடர்பாக பிசிசிஐ செயலர் தேவஜித் சைக்கியா கூறுகையில், “இந்தியா மீது பாகிஸ்தான் தீவிரவாத தாக்குதல் நடத்தியது. அந்த நாட்டைச் சேர்ந்த ஒருவரிடமிருந்து கோப்பையை பெற மாட்டோம். அதேசமயம், இந்தியாவுக்கான கோப்பை இந்தியாவுக்கு அனுப்பிவைக்கப்பட வேண்டும். இந்த விவகாரம் தொடர்பாக நவம்பர் மாதம் நடக்கும் ஐசிசி மாநாட்டில் எதிர்ப்பு தெரிவிப்போம்” என்று தெரிவித்தார். போட்டியில் வென்ற அணிக்கு மைதானத்தில் கோப்பை வழங்கப்படாமல் போனது இதுவே முதன்முறை என்பது கவனிக்கத்தக்கது.

India wins the Asia Cup

அதேநேரத்தில், ஆசியக் கோப்பை இறுதிப்போட்டியில் பாகிஸ்தானை வீழ்த்தி இந்தியா வெற்றி பெற்றதையடுத்து, நாடு முழுவதும் கொண்டாட்டங்கள் களைகட்டின. ஆசியக் கோப்பை கிரிக்கெட் தொடரில், பாகிஸ்தானை வீழ்த்தி சாம்பியன் பட்டம் வென்ற இந்திய அணிக்கு, பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார். இது தொடர்பாக எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ள அவர், விளையாட்டு மைதானத்தில் ஆபரேஷன் சிந்தூர் நடைபெற்றதாக குறிப்பிட்டுள்ளார். அதில் விளைவு ஒன்றுதான்; இந்தியா வெற்றி பெற்றது என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். நமது கிரிக்கெட் வீரர்களுக்கு வாழ்த்து தெரிவிப்பதாகவும் பிரதமர் மோடி பதிவிட்டுள்ளார்.

வெற்றி பெற்ற இந்திய அணிக்கு கோப்பை வழங்கப்படாததை அடுத்து இந்திய அணியினர் கற்பனையாக கோப்பையை பெற்று கொண்டாடுவதுபோல் நடந்துகொண்ட வீடியோவும் இணையத்தில் வைரலாகி வருகிறது. இந்திய அணியை ஆதரித்து பலரும் கருத்துகளைத் தெரிவித்து வரும் அதேவேளையில், நக்வியிடமிருந்து கோப்பை பெற மறுத்ததையும் பலரும் விமர்சித்தும் வருகின்றனர்.

suryakumar yadav

இந்திய அணியின் கேப்டன் சூர்யகுமார் தனது போட்டிக் கட்டணத்தை இந்தியா ராணுவத்துக்கும், பஹால்காம் தாக்குதலின் பாதிக்கப்பட்டவர்களுக்கும் அளிப்பதாக அறிவித்திருக்கிறார். அதேபோல், பாகிஸ்தான் அணியின் கேப்டன் சல்மான் அலி சாகாவும் தனது ஒட்டுமொத்த அணி வீரர்களும் தங்களது போட்டிக்கட்டணத்தை மே 7 தின தாக்குதலில் பாதிக்கப்பட்டவர்களுக்கு அளிப்பதாகத் தெரிவித்திருக்கிறார்.

போட்டி முடிந்து பேசிய பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் கேப்டன் சல்மான் அலி சாகா, “இந்தப் போட்டியில் நடந்தது மிகவும் ஏமாற்றமளிக்கிறது. கைகுலுக்காமல் இருப்பதன் மூலம் அவர்கள் எங்களை அவமதித்ததாக நினைக்கிறார்கள். இல்லை. அது கிரிக்கெட்டுக்கான அவமரியாதை. இன்று அவர்கள் செய்தது போல், ஒரு நல்ல அணி அதைச் செய்யாது. நான் மிகவும் கடுமையான வார்த்தைகளைப் பயன்படுத்த விரும்பவில்லை.

பாகிஸ்தான் கேப்டன் சல்மான் அலி சாகா

ஆனால், மிகவும் நேர்மையாகச் சொல்லப் போனால், இது வேறு யாருக்கும் அல்ல, விளையாட்டுக்கு மிகவும் அவமரியாதை. போட்டியின் தொடக்கத்தில் நடந்த பத்திரிகையாளர் சந்திப்பிலும், ரெஃபரியின் கூட்டத்திலும் அவர் (சூர்யகுமார் யாதவ்) என்னுடன் கைகுலுக்கினார். ஆனால் பின்னர் அவர் உலகத்தின் முன் வந்தபோது அதைச் செய்யவில்லை. அவருக்கு வழங்கப்பட்ட அறிவுறுத்தலை அவர் பின்பற்றுகிறார் என்று நினைக்கிறேன், அது பரவாயில்லை” எனத் தெரிவித்திருக்கிறார்.

இதற்கிடையே, ஆசிய கோப்பை கிரிக்கெட்டில் சாம்பியன் ஆன இந்திய அணிக்கு 21 கோடி ரூபாய் பரிசு அளிக்கப்போவதாக இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் தெரிவித்துள்ளது. இத்தொடரில் இந்திய அணி பெற்ற வெற்றி அசாதாரணமானது என கூறியுள்ள பிசிசிஐ செயலர் தேவஜித் சைக்கியா, வீரர்கள், பயிற்சியாளர்கள் உள்ளிட்ட ஒட்டுமொத்த அணிக்கும் 21 கோடி ரூபாய் அளிக்கப்படும் என்றார். 3 வெற்றிகளை பெற்றோம் என்றும் ஆனால் ஒரு பதிலடிகூட வரவில்லை என்றும் பாகிஸ்தானை அவர் மறைமுகமாக கேலி செய்துள்ளார்.

திலக் வர்மா

ஆசியக் கோப்பை இறுதிப்போட்டி பல்வேறு விவாதங்களுக்கு வித்திட்டிருக்கும் நிலையில், திலக் வர்மாவின் மிகச்சிறப்பான ஆட்டம், பாகிஸ்தானை சுருட்டிய இந்த்ய பந்துவீச்சு போன்ற விளையாட்டு தொடர்பான விஷயங்கள் விவாதத்திற்கு அப்பால் சென்றுவிட்டன என்கின்றனர் கிரிக்கெட் காதலர்கள்.

தொடர் முழுவதும், இந்தியா பாகிஸ்தான் என இருநாடுகளுக்கு இடையிலான மிகப்பெரிய அரசியலுக்கு மத்தியிலேயே நடந்திருக்கின்றன. தொடரில் இந்தியா பாகிஸ்தான் மோதிய முதல் போட்டியில் இந்தியா வெற்றி பெற்றது. ஆனால், இந்திய வீரர்கள் பாகிஸ்தான் வீரர்களுடன் கைலுக்க மறுத்துவிட்டனர்.

சூப்பர் ஃபோர் போட்டியின் போது 'விமான விபத்து' தொடர்பான சைகைக்காக ஹாரிஸ் ராஃப்க்கு போட்டிக் கட்டணத்தில் 30 சதவீதம் அபராதமாக விதிக்கப்பட்டது. அதே நேரத்தில் ஐம்பது ரன்களை கடந்தபின் துப்பாக்கிச் சூடு போல் சைகை செய்து கொண்டாட்டத்தில் ஈடுபட்டதற்காக சாஹிப்சாதா ஃபர்ஹானுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டது. இப்படி ஏகப்பட்ட சர்ச்சைகள் தொடர் முழுவதும் இருந்தன.

விளையாட்டில் அரசியல் தேவையற்ற ஒன்று என்றும் சிலர் வாதிடுகின்றனர். உலகக்கோப்பை வென்ற கேப்டன் கபில்தேவ் கூறுகையில், "விளையாட்டில் அரசியலைப் பார்க்காமல் விளையாட்டை மட்டும் கவனிப்பதே முழு ஊடகங்களின் பொறுப்பாக இருக்க வேண்டும். ஆம், ஊடகத்திற்கு எல்லாவற்றையும் வெளிப்படுத்தும் பொறுப்பு உள்ளது. ஆனால், ஒரு விளையாட்டு வீரராக, நாம் விளையாட்டில் மட்டுமே கவனத்துடன் இருக்க வேண்டும் என்று நான் விரும்புகிறேன். அது மிகவும் சிறந்தது இருக்கும்" எனத் தெரிவித்திருக்கிறார்.

திலக் வர்மா ஆட்ட நாயகனாகவும், அபிஷேக் ஷர்மா தொடர்நாயகனாகவும் தேர்வு செய்யப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.