2026 ஐபிஎல் தொடரில் தொடக்கத்தில் மூன்று தோல்விகளால் சிஎஸ்கே சிரமப்பட்ட நேரத்தில், ஸ்டீபன் ஃபிளெமிங் நல்ல கோச் அல்ல, தோனிதான் வெற்றிக்குக் காரணம் என்று ஹேமங் பதானி விமர்சித்த வீடியோ வைரலானது. ஆனால் தற்போது டெல்லி கேபிடல்ஸ் அணியின் தலைமை பயிற்சியாளராக இருக்கும் பதானி, தொடர்ச்சியான தோல்விகளால் கடும் விமர்சனத்துக்கு உள்ளாகி, முன்னாள் இந்திய கேப்டன் அவரை நேரடியாக சாடியுள்ளார்.
2026 ஐபிஎல் தொடரில் தொடக்கத்தில் 3 போட்டிகளிலும் தோற்ற சென்னை சூப்பர் கிங்ஸ் அணி மோசமாகவே தொடங்கியது. இந்தசூழலில் சிஎஸ்கே தலைமை பயிற்சியாளர் ஸ்டீபன் ஃபிளெமிங் குறித்து ஹேமங் பதானி பேசிய வீடியோ ஒன்று சமூக வலைதளத்தில் வைரலானது.
அந்த வீடியோவில், ஸ்டீபன் ஃபிளெமிங் நல்ல கோச் என்று யாராவது சொன்னால் ஒத்துக்க மாட்டேன் என்றும், சிஎஸ்கே வெற்றிக்கு தோனி மட்டுமே காரணம், ஐபிஎல்லைத் தவிர வேறு எந்த லீக்கிலும் ஃபிளெமிங் கோப்பை வெல்லவில்லை, தோனியின் இந்திய வீரர்களை கையாளும் திறமையே சிஎஸ்கே வெற்றிக்கு முக்கிய காரணம் என்று பேசியிருந்தார்.
இந்தசூழலில் தான், தற்போது டெல்லி கேபிடல்ஸ் அணிக்கு தலைமை பயிற்சியாளராக இருக்கும் ஹேமங் பதானி தலைமையில் டெல்லி கேபிடல்ஸ் அணி படுமோசமாக செயல்பட்டுவருகிறது.
நடப்பு ஐபிஎல் தொடரில் ஆன் பேப்பரில் சிறந்த அணியாக, பேலன்ஸான அணியாக இருக்கும் டெல்லி கேபிடல்ஸ் அணி, கையில் இருந்த போட்டியை எல்லாம் இழந்து படுமோசமாக செயல்பட்டு வருகிறது. 2 பந்துக்கு 2 ரன்கள் அடிக்க முடியாமல் தோற்றது, 264 ரன்கள் அடித்தும் தோற்றது, பவர்பிளேவில் 13 ரன்னுக்கு 6 விக்கெட்டுகளை இழந்து மோசமான சாதனை படைத்தது என தொடர்ந்து படுதோல்விகளை டேல்லி கேபிடல்ஸ் அணி சந்தித்து வருகிறது.
இந்நிலையில் தான் ஸ்டீபன் ஃபிளெமிங்கை குத்தம் சொன்னிங்க, தற்போது உங்க தலைமையில் டெல்லி அணி என்ன செய்துகொண்டு இருக்கிறது என டெல்லி கேபிடல்ஸின் தலைமை பயிற்சியாளர் ஹேமங் பதானியை முன்னாள் இந்திய கேப்டன் கிருஷ்ணமாச்சாரி ஸ்ரீகாந்த் சாடியுள்ளார்.
தன்னுடைய யூடியூப் சேனலில் பேசியிருக்கும் சீக்கா, “டெல்லி கேபிடல்ஸின் தலைமை பயிற்சியாளர் ஹேமங் பதானி சிஎஸ்கேவின் பயிற்சியாளர் ஸ்டீஃபன் ஃபிளெமிங் குறித்து கருத்து தெரிவித்திருந்தார். ஹேமங் முதல்ல உங்கள பாருங்க, அதற்கு அப்புறம் மத்தவங்கள பார்க்கலாம். இதற்காக தான் எப்போதும் வாயை விடக்கூடாதுனு சொல்றது, அப்போது அவர் வாயை விட்டார், இப்போது என்ன பண்ண முடியும், வாயை மூடிக்கொண்டு தான் இருக்க முடியும். உங்களோட வேலையை பார்த்துட்டு நீங்க போக வேண்டியதானே, ஸ்டீபன் பிளெமிங் தோனியால தான் வின் பண்ணார் என்பதெல்லாம் உங்களுக்கு தேவையில்லாதது தானே. நீங்க மட்டும் இப்போ என்ன ஸ்பெசலா பண்ணிட்டீங்க, ஒன்னும் பண்ணலயே” என காட்டமாக பேசியுள்ளார்.
மேலும், டெல்லி கேபிடல்ஸ் அணியில் இன்னும் நிரந்தர தொடக்க ஜோடி உறுதிசெய்யப்படவில்லை என்பதையும், பிளேயிங் 11-ல் அதிக மாற்றங்கள் செய்யப்படுவதையும் வீடியோவில் விமர்சித்துள்ளனர்.