இந்தியாவின் முன்னணி பவுலர் பும்ரா, இன்று நடைபெறும் டி20 போட்டியில் ஒரு விக்கெட்டை வீழ்த்தினால், முதல் இந்திய பந்துவீச்சாளராக வரலாற்று சாதனை படைப்பார். இதுவரை டி20 போட்டிகளில் 99 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார்.
இந்தியாவிற்கு சுற்றுப்பயணம் செய்துள்ள தென்னாப்பிரிக்கா அணி 2 டெஸ்ட் போட்டிகள், 3 ஒருநாள் போட்டிகள் மற்றும் 5 டி20 போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடிவருகிறது.
2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரை 2-0 என வென்ற தென்னாப்பிரிக்கா அணி, 25 ஆண்டுகளுக்கு இந்தியாவை அவர்களின் சொந்த மண்ணில் வீழ்த்தி வரலாறு படைத்தது.
இந்தசூழலில் டெஸ்ட் தொடரில் ஏற்பட்ட படுதோல்விக்கு ஒருநாள் தொடரில் பதிலடி கொடுத்த இந்தியா 2-1 என வெற்றிபெற்று அசத்தியது.
இந்நிலையில் 5 போட்டிகள் கொண்ட டி20 தொடர் இன்று தொடங்குகிறது.
தென்னாப்பிரிக்கா மற்றும் இந்திய அணிகள் மோதும் முதல் டி20 போட்டி இன்று இரவு 7 மணிக்கு கட்டாக்கில் உள்ள பராபதி மைதானத்தில் நடக்கவிருக்கிறது.. இப்போட்டியில் நட்சத்திர வீரர்கள் பும்ரா, ஹர்திக் பாண்டியா, சுப்மன் கில் போன்ற வீரர்கள் அணிக்குதிரும்புகின்றனர். இன்றைய போட்டியில் ஒரு விக்கெட்டை வீழ்த்தினால் பும்ரா வரலாற்று சாதனை ஒன்றை முதல் இந்திய பவுலராக படைப்பார்.
தற்போது வரை டி20 கிரிக்கெட்டில் 99 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ள பும்ரா, இன்றைய போட்டியில் ஒரு விக்கெட்டை கைப்பற்றினால் 100 விக்கெட்டுகளை கடந்த 2வது இந்திய பந்துவீச்சாளராக மாறுவார். இதன்மூலம் மூன்றுவடிவ கிரிக்கெட்டிலும் 100 விக்கெட்டுகளைக் கைப்பற்றிய முதல் இந்திய பந்துவீச்சாளராக சாதனை படைப்பார் பும்ரா. அதிக டி20 விக்கெட்டுகள் வீழ்த்திய இந்திய பந்துவீச்சாளராக 105 விக்கெட்டுகளுடன் முதலிடத்தில் உள்ளார் அர்ஷ்தீப் சிங்.