லாரா x - Stick to Cricket
கிரிக்கெட்

”10வது ஆளாக களமிறங்கினேன்..” எல்லோரையும் சிரிக்க வைத்த லாரா! நக்கல் புடிச்ச மனுஷன் சார்!

முன்னாள் வெஸ்ட் இண்டீஸ் ஜாம்பவான் வீரரான பிரையன் லாரா, முன்னாள் சர்வதேச வீரர்களுடனான உரையாடலில் தன்னுடைய நகைச்சுவை பேச்சால் எல்லோரையும் சிரிப்பில் ஆழ்த்தினார்.

Rishan Vengai

ரன் மெஷின் என்று விராட் கோலியை கிரிக்கெட் உலகம் அழைத்துவருகிறது, ஆனால் உண்மையான ரன் மெஷின் என்றால் அது வெஸ்ட் இண்டீஸ் அணியின் முன்னாள் ஜாம்பவான் பிரையன் லாரா மட்டும் தான். முதல் தர கிரிக்கெட்டில் 22156 ரன்கள், லிஸ்ட் ஏ போட்டிகளில் 14602 ரன்கள், சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட்டில் 11953 ரன்கள், சர்வதேச ஒருநாள் கிரிக்கெட்டில் 10405 ரன்கள் என குவித்த வீரர் என்றால் அது வரலாற்றில் ஒரே லாரா மட்டும் தான்.

பிரையன் லாரா

அதுமட்டுமில்லாமல் முதல் தர கிரிக்கெட்டில் 501* ரன்கள் நாட் அவுட், சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட்டில் பலம் வாய்ந்த இங்கிலாந்துக்கு எதிராக 400* ரன்கள் அவுட் என்ற உலக சாதனையை வைத்திருக்கும் ஒரே வீரரும் லாரா மட்டும் தான்.

பிரையன் லாரா

தான் விளையாடிய காலத்தில் பவுலர்களுக்கு சிம்ம சொப்பனமாக விளங்கிய பிரையன் லாரா, ஸ்டிக் டு கிரிக்கெட் என்ற உரையாடல் நிகழ்ச்சியில் மைக்கேல் வாகன், அலஸ்டர் குக் போன்ற முன்னாள் வீரர்களுடன் தன்னுடைய அனுபவங்களை பகிர்ந்துவருகிறார்.

எல்லோரையும் சிரிக்க வைத்த லாரா..

ஷேன் வார்னே அல்லது முரளிதரன் இருவரில் யார் சிறந்தவர் என்ற கேள்விக்கு தீர்க்கமான பதிலை சொன்ன லாரா, தனக்கு திணறடித்தது முரளிதரனாக இருந்தாலும் ஷேன் வார்னேவை சிறந்தவர் என்று தெரிவித்தார்.

உலகின் தலைசிறந்த சுழற்பந்துவீச்சாளர்கள் குறித்து பேசிய அவர், நான் முரளிக்கு எதிராக பேட்டிங் செய்யும் போது என்ன பந்துவீசுகிறார் என்றே தெரியாமல் குழப்பமடைவேன். 3 போட்டிகளில் 688 ரன்கள் அடித்தபோதும் எனக்கு முரளி என்ன வீசுகிறார் என்பது தெரியாது. முதல் அரைமணிநேரத்திற்கு என்னால் எதையும் கணிக்க முடியாது, அதற்காக நான் ஸ்வீப் ஷாட்களை அவருக்கு எதிராக பயன்படுத்தினேன். ஷேன் வார்னேவை விட முரளி தான் எனக்கு அதிக அழுத்தத்தைக் கொடுத்தார்.

ஆனால் வார்னேவுக்கு எதிராக பேட்டிங் செய்யும்போது, ஒவ்வொரு ஓவரிலும் பந்து பிட்ச்சின் நடுவில் இருந்துவரும். அது பிற்பகல் 2 அல்லது 3 மணியானாலும் சரி, அவர் அங்கிருந்து மாயாஜால பந்தை வீசுவார். அதனால்தான் நான் அவரை அதிகமாக மதிப்பிடுகிறேன், ஏனென்றால் அவர் மனதளவில் வலிமையானவர் என்று நான் நினைக்கிறேன். மேலும் அவரது பந்துவீச்சு தாக்குதல் மற்றும் அவர் வீசிய பிட்சுகள், வேகப்பந்துவீச்சாளர்களான மெக்ராத் மற்றும் மெக்டெர்மாட்ஸுக்கு சாதகமாக இருந்தன. அங்கிருந்து அவர் அவ்வளவு விக்கெட்டுகளை வீழ்த்தியது மிகவும், மிகவும் சிறப்பு வாய்ந்தது" என்று லாரா கூறினார்.

மேலும் குடும்பம் சார்ந்து பேசிய லாரா, தனக்கு உடன் பிறந்தவர்கள் 11 பேர் என்று தெரிவித்தார். இதைக்கேட்ட சக வீரர்கள் ஆச்சரியப்பட மீண்டும் மீண்டும் கேட்க ஆரம்பித்தனர். அதற்கு லாரா 6 சகோதரர்கள், 4 சகோதரிகள் என்று கூறினார். அப்போது அலஸ்டர் குக் மீண்டும் 11 பேரா? என கேட்க, ”ஆமாம் 11 பேர் தான் நான் 10வது ஆளாக களமிறங்கினேன்” கூற எல்லோரும் சத்தமாக சிரித்தனர்.

மேலும் கோட் வீரர்கள், லெஜெண்ட் வீரர்களை பட்டியலிட்ட லாரா, ரோகித் சர்மாவை லெஜெண்டாகவும், பும்ராவை கோட் வீரராகவும் புகழாரம் சூட்டினார்.