india blind team x page
கிரிக்கெட்

பார்வையற்ற பெண்கள் முதல் டி20 உலகக்கோப்பை.. அரையிறுதியில் ஆஸியைச் சந்திக்கும் இந்தியா!

பார்வையற்ற பெண்கள் கலந்துகொள்ளும் முதல் டி20 கிரிக்கெட் உலகக் கோப்பை தொடரின், இன்றைய அரையிறுதிப் போட்டியில் ஆஸ்திரேலியாவை இந்திய அணி எதிர்கொள்கிறது.

Prakash J

பார்வையற்ற பெண்கள் கலந்துகொள்ளும் முதல் டி20 கிரிக்கெட் உலகக் கோப்பை தொடரின், இன்றைய அரையிறுதிப் போட்டியில் ஆஸ்திரேலியாவை இந்திய அணி எதிர்கொள்கிறது.

உலகம் முழுவதும் கிரிக்கெட் அசுர வளர்ச்சி பெற்று வருகிறது. அந்த வகையில், பார்வையற்றவர்களுக்கான கிரிக்கெட்டும் சிறந்த இடத்தைப் பெற்றுள்ளது. இந்த நிலையில் பார்வையற்ற பெண்கள் கலந்துகொள்ளும் முதல் டி20 கிரிக்கெட் உலகக் கோப்பை தற்போது நடைபெற்று வருகிறது. இந்தியா, நேபாளம், பாகிஸ்தான், இலங்கை, ஆஸ்திரேலியா மற்றும் அமெரிக்கா ஆகிய ஆறு அணிகள் கலந்துகொண்ட இந்த தொடர், கடந்த நவம்பர் 11ஆம் தேதி டெல்லியில் தொடங்கியது. பெங்களூருவில் நடைபெற்ற சில போட்டிகளுக்குப் பிறகு, நாக் அவுட்களுக்கான போட்டிகள் தற்போது இலங்கை தலைநகர் கொழும்புக்கு மாற்றப்பட்டுள்ளது. இதற்கிடையே லீக் போட்டிகளில், இலங்கை மற்றும் அமெரிக்காவை 10 விக்கெட்கள் வித்தியாசத்திலும், ஆஸ்திரேலியாவை209 ரன்கள் வித்தியாசத்திலும், நேபாளத்தை 85 ரன்கள் வித்தியாசத்திலும், பாகிஸ்தானை 8 விக்கெட்கள் வித்தியாசத்திலும் இந்திய அணி வீழ்த்தி அரையிறுதிக்கு தகுதிபெற்றது. இன்றைய அரையிறுதியில் இந்திய அணி ஆஸ்திரேலியாவை எதிர்கொள்கிறது.

தீபிகா டி.சி

போட்டி குறித்து இந்திய அணியின் கேப்டன் தீபிகா டி.சி., “நாங்கள் ஏற்கெனவே ஆஸ்திரேலியாவுடன் விளையாடி உள்ளோம். அவர்களின் உத்தி எங்களுக்குத் தெரியும். எங்கள் அணியில் சிறந்த வீராங்கனைகள் உள்ளனர். நிச்சயமாக, நாங்கள் 100 சதவீதத்தை வழங்குவோம். சிறப்பாக விளையாடுவோம். இந்திய மகளிர் அணி உலகக் கோப்பையை வென்ற தருணத்தைப்போன்று நாங்களும் இந்த உலகக்கோப்பையை வெல்வதை கற்பனை செய்தோம். எங்கள் இந்திய அணி வலுவானது. அவர்கள் மீது எனக்கு நம்பிக்கை உள்ளது. ஆகையால் உலகக்கோப்பையை வென்று வீட்டுக்கு எடுத்துச் செல்வோம்” எனத் தெரிவித்துள்ளார்.