4 ஆண்டுகளுக்கு பிறகு இந்திய டி20 அணியில் இடம்பிடித்த புவனேஷ்வர் குமார், எதிர்பார்ப்புகளை பூர்த்தி செய்ய முடியாமல், மோசமான பந்துவீச்சு மூலம் ரசிகர்களின் விமர்சனங்களை சந்திக்கிறார். நியூசிலாந்துக்கு எதிரான தொடரில் 180 ரன்கள் கசிவுடன், ஒரே ஒரு விக்கெட்டை மட்டுமே வீழ்த்திய அவர், டி20 தொடரில் அதிகபட்ச ரன்கள் கசிவின் சாதனையை படைத்தார்.
அடுத்தடுத்த 2 ஐபிஎல் சீசன்களில் ஆர்சிபி கோப்பை வென்றதற்கு முக்கிய காரணமாக இருந்தவர் பந்துவீச்சாளர் புவனேஷ்வர் குமார். அதிலும் 2026 ஐபிஎல் தொடரில் 16 போட்டிகளில் 7.9 எகானமி மற்றும் 17.89 சராசரியுடன் 28 விக்கெட்டுகளை வீழ்த்திய அவர், சீசனில் அதிக விக்கெட்டுகளை வீழ்த்திய பௌலராக அசத்தினார்.
இந்தசூழலில் இந்திய டி20 அணியின் பந்துவீச்சு மோசமானதாக இருந்துவந்தது. இதனால் புவனேஷ்வர் குமாரை இந்திய டி20 அணியில் எடுக்கவேண்டும் என்ற கோரிக்கையை ரசிகர்கள் தொடர்ந்து முன்வைத்துவந்தனர். பல முன்னாள் கிரிக்கெட் வீரர்களும் புவனேஷ்வர் மீண்டும் அணிக்கு வருவதை ஆதரித்தனர்.
இந்நிலையில் தான் 4 ஆண்டுகளுக்கு பிறகு இந்திய டி20 அணியில் இடம்பிடித்த புவனேஷ்வர் குமார், ரசிகர்களின் எதிர்ப்பார்ப்புகளுக்கு மாறாக மோசமான செயல்பாடுகளை வெளிப்படுத்தி ஒரு போட்டிக்கு 50 ரன்கள் வீதம் விட்டுக்கொடுத்துள்ளார்.
நியூசிலாந்துக்கு எதிரான டி20 தொடரில் 4 போட்டிகளில் விளையாடிய புவனேஷ்வர் குமார், ஒரேயொரு விக்கெட்டை மட்டுமே வீழ்த்தி 11.25 எகானமியுடன் 180 ரன்களை விட்டுக்கொடுத்தார். இது ஒரு டி20 இருதரப்பு தொடரில் ஒரு பவுலர் விட்டுக்கொடுத்த அதிகபட்ச ரன்கள் என்ற மோசமான சாதனைக்கு புவனேஷ்வர் குமாரை அழைத்துச்சென்றுள்ளது. இதற்கு முன் கைல் ஜேமிசன் ஆஸ்திரேலியாவிற்கு எதிரான டி20 தொடரில் 175 ரன்கள் விட்டுக்கொடுத்ததே அதிகபட்சமாக இருந்தது.
புவனேஷ்வர் குமாரின் இந்த ஸ்டேட்ஸை பார்த்த ரசிகர்கள், இதற்கு நீங்க கம்பேக் கொடுக்காமலே இருந்திருக்கலாம் என கருத்திட்டு வருகின்றனர்.