4 ஆண்டுகளுக்கு பிறகு இந்திய அணியில் புவனேஷ்வர் குமார் இடம்பிடித்தது ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. அவரது பந்துவீச்சு திறமை மற்றும் அணிக்கு வழங்கும் பங்களிப்பு குறித்து அஸ்வின் பாராட்டியுள்ளார். புவனேஷ்வர் குமாரின் கம்பேக், இந்திய அணியின் பந்துவீச்சு பிரச்சனைகளுக்கு தீர்வாக அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது.
2027 உலகக்கோப்பைக்கு இன்னும் குறைவான ஒருநாள் போட்டிகளே இருக்கின்றது, ஆனால் இந்திய அணியின் பந்துவீச்சு மிகமோசமாக இருக்கிறதே என்ற கவலை ரசிகர்களுக்கு அதிகமாகவே இருந்துவருகிறது. இந்தசூழலில் தான் ஐபிஎல் மற்றும் உள்நாட்டு கிரிக்கெட் போட்டிகளில் சிறப்பாக பந்துவீசிவரும் புவனேஷ்வர் குமாரை இந்திய அணியில் மீண்டும் எடுக்க வேண்டும் என்ற குரல் பெரிதாக எழுந்தது.
ஆனால் அஜித் அகர்கர் தலைமையிலான தேர்வுக்குழு ஷமி, புவனேஷ்வர் குமார் போன்ற மூத்தபவுலர்கள் மீது நம்பிக்கை இல்லாமல் இருந்தது. பந்துவீச்சாளர்கள் திறைமை மீது எந்த குற்றச்சாட்டும் இல்லை என்றாலும், மூத்தவீரர்களின் வயதை காரணம் காட்டி ஃபிட்னஸ் பெரிய குறையாகவும், உலகக்கோப்பை தொடரில் பாதியில் காயம் ஏற்பட்டு வெளியில் வந்துவிட்டால் என்ன செய்வதென்ற கவலையே அதிகமாக இருந்தது. அதனால் தான் அகர்கர் தேர்வுக்குழு இளம் வீரர்கள் மீது முதலீடு செய்தது.
இந்தசூழலில் தான் அகர்கரின் பதவிக்காலம் அக்டோபர் 4ஆம் தேதியோடு முடிந்த நிலையில், விவிஎஸ் லக்ஸ்மன், பிரக்யான் ஓஜா உள்ளிட்டோர் அடங்கிய தேர்வுக்குழு நியூசிலாந்துக்கு எதிரான டி20 தொடருக்கான அணியை தேர்வுசெய்தது. அந்த அணியில் 4 ஆண்டுகளுக்கு பிறகு புவனேஷ்வர் குமார் இடம்பிடித்துள்ளார். இந்த செய்தி இந்திய ரசிகர்களுக்கு கொண்டாட்டத்தை ஏற்படுத்தியுள்ளது.
சமீபத்திய இந்திய ஒருநாள் அணியில் இடம்பெற்ற இளம்வீரர்கள், அனுபவமின்மையால் மோசமாக செயல்பட்டுவரும் நிலையில், புவனேஷ்குமாரின் தேர்வு ரசிகர்களிடையே வரவேற்பை பெற்றுள்ளது. டி20 அணிக்கு மட்டுமில்லாமல் ஒருநாள் அணியிலும் புவனேஷ்வர் குமார் இடம்பிடிக்கவேண்டும் என்ற கோரிக்கையும் வைக்கப்பட்டுவருகிறது.
இந்தசூழலில் தான் முன்னாள் இந்திய வீரர் ரவிச்சந்திரன் அஸ்வினும் அதே கருத்தை முன்வைத்துள்ளார். புவனேஷ்வர்குமாரின் கம்பேக் குறித்து பேசியிருக்கும் அஸ்வின், “புவனேஷ்வர் குமாரின் அடுத்தடுத்த 2 ஐபிஎல் தொடரில் போட்ட பந்துவீச்சை பார்த்த யாராக இருந்தாலும், ஏன் அவருக்கு வாய்ப்பு வழங்க மறுக்கிறீங்கனு கண்டிப்பா கேட்பாங்க. அவர் மீண்டும் அணிக்கு திரும்பியது எனக்கு மகிழ்ச்சியாகவும், எதிர்ப்பார்ப்பையும் ஏற்படுத்தியுள்ளது. நான் இதை சொல்லவிரும்புகிறேன், “புவனேஷ்வர் குமார் நினைத்திருந்தால், அவருக்கான நேரம் சரியாக அமைந்து காயம் வராமல் இருந்திருந்தால், அவருடைய திறமைக்கு ஒருநாள், டெஸ்ட் மற்றும் டி20 ஆகிய மூன்றுவிதமான ஃபார்மேட்டிலும் பவுலிங் கிங்காக இந்திய அணிக்கு இருந்திருப்பார். அவரால் இரண்டு பக்கமும் ஸ்விங் செய்யமுடியும், 130-135ல் பந்துவீசினாலும் அவரால் சிறப்பாக செயல்பட முடியும். அவரால் ஹேண்டி பேட்டிங்கையும் விளையாட முடியும், நல்ல கேட்ச் பிடிக்கக்கூடிய வீரரும் கூட. அவரால் இன்னும் இந்திய அணிக்கு நிறைய கொடுத்திருக்க முடியும் என நான் நினைக்கிறேன். அவர் ஆர்சிபிக்காக கடைசி 2 ஐபிஎல்லில் போட்ட பந்துவீச்சுக்கு இந்த கம்பேக் நியாயமானது” என்று பேசியுள்ளார்.
மேலும், ஒருநாள் அணியில் இடம்பிடிப்பாரா என்ற எதிர்ப்பார்ப்பு குறித்து, “நிறைய பேர் அவர அப்படியே ஒருநாள் அணிக்கு எடுத்துடுங்கனு சொல்றாங்க, கண்டிப்பா சலெக்டர்ஸ் அவருடைய ஃபிட்னஸ் பந்துவீச்சு இரண்டையும் பார்ப்பாங்க, அதை நிரூபிச்சிட்டாருனா பும்ரா கூட சேர்ந்து புவனேஷ்வர் குமாரும் உலகக்கோப்பைல பந்துவீசுறது யாராலையும் தடுக்க முடியாது” என்று பேசியுள்ளார்.